உங்கள் கொரோனா கால மாற்றம் என்ன? கேட்கும் இணையதளம்
கொரோனா நவீன வாழ்க்கையை தலைகீழாக மாற்றியிருக்கிறது. அதைவிட முக்கியமாக வாழ்க்கை பற்றிய நம்முடைய புரிதலையும் பல விதங்களில் மாற்றியிருக்கிறது. விளைவு நம்மில் பலரும் கொரோனா கால ஞானோதயம் பெற்றிருக்கிறோம். அதாவது, கொரோனாவுக்கு முன் எப்படி இருந்தாலும் சரி, கொரோனாவுக்கு பிறகு இப்படி இருக்க வேண்டும் என சில மாற்றங்களை செய்து கொள்ள நினைத்திருக்கிறோம்.
பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து புன்னகைத்து நலம் விசாரிப்பது என்பதில் துவங்கி, இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுவது, வீட்டில் இருப்பவர்களிடன் சிரித்து பேசுவது, சமூக நலனில் அக்கரை கொள்வது, புத்தகம் படிப்பது என அவரவர்கள் தங்கள் வாழ்வனுபவத்திற்கு ஏற்ற மாற்றத்தை உத்தேசித்திருக்கலாம்.
இப்படி நீங்கள் செய்ய தீர்மானித்திருக்கும் மாற்றங்களை பதிவு செய்வதற்காக என்றே ’கோவிட்பிராமிசஸ்’ (https://covidpromises.com/ ) இணையதளத்தை பிராம் கான்ஸ்டியன் (Bram Kanstein).
கொரோனா முடிவுக்கு வந்த பிறகு நீங்கள் திட்டமிட்டிருக்கும் மாற்றம் என்ன? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு இணைய படிவத்தையும் இந்த தளத்தில் கொடுத்திருக்கிறார். பயனாளிகள் தங்கள் பெயர் மற்றும் இமெயில் முகவரியை சமர்பித்து, கொரோனாவுக்கு பிறகு மாற்றிக்கொள்ள உள்ள பழக்கம், செயல்முறை மற்றும் மதிப்பீடுகளை இந்த படிவத்தில் குறிப்பிட வேண்டும். இதர மாற்றங்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம்.
கொரோனா முடிந்த பிறகு அதாவது, கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின், இந்த மாற்றங்களை இமெயில் மூலமாக அவற்றை சமர்பித்தவர்களுக்கு இந்த தளம் நினைவூட்டும்.
இந்த ஒற்றை பயன்பாட்டிற்காக என்றே இதை அமைத்திருப்பதாக பிராம் குறிப்பிடுகிறார்.
நீங்களும் கூட கொரோனா கால மாற்றத்தை இதில் பகிர்ந்து கொள்ளலாம். அப்படியே மற்றவர்களுக்கு பரிந்துரைக்கலாம்.
-
https://cybersimman.substack.com/p/--690