ஜன்னல் வழி காட்சிகளுக்கான இணையதளம்
கொரோனா லாக்டவுன் காலத்தில் உங்கள் வீட்டு ஜன்னல் வழி காட்சியையே பார்த்து, பார்த்து போரடிக்கிறதா? ஒரு மாறுதலுக்கு, வேறு ஒரு ஜன்னல் வழி காட்சியை பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதுவும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் அமைந்துள்ள வீட்டின் ஜன்னல் வழி காட்சியை பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?
விண்டோ-ஸ்வேப் (http://www.window-swap.com/ ) இணையதளம் இதை தான் சாத்தியமாக்குகிறது.
உலகின் எங்கோ ஒரிடத்தில் இருக்கும் புதிய ஜன்னலை திறந்து பாருங்கள் எனும் வாசகத்துடன் இந்த தளத்தின் முகப்பு பக்கம் அழைப்பு விடுக்கிறது. அழைப்பை ஏற்று கிளிக் செய்தீர்கள் என்றால் அருமையான ஒரு ஜன்னல் வழி காட்சி தோன்றும்.
அந்த இடம் பிரான்சாக இருக்கலாம், தாய்லாந்தாக இருக்கலாம். நம் நாட்டின் பெங்களூருவாக இருக்கலாம். அங்குள்ள ஒரு வீடு அல்லது குடியிருப்பின் ஜன்னல் வழியே விரியும் காட்சியை பார்க்கலாம். இன்னொரு முறை கிளிக் செய்தால், வேறு ஒரு ஜன்னல் வழி காட்சியை பார்க்கலாம்.
இப்படி உலகின் பல இடங்களில் உள்ள ஜன்னல் வழி காட்சிகளை இந்த தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
கொரோனா முடக்கத்தில், வீட்டிலேயே அடைப்பட்டு கிடக்க வேண்டியிருப்பதாக புலம்பும் நபர்கள், இந்த தளத்தின் மூலம் வேறு வேறு நகரங்களுக்கு எல்லாம் சென்று வரலாம். நீங்கள் விரும்பினால், உங்கள் வீட்டி ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியையும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் இப்படி பகிரப்பட்ட காட்சிகளை தான் வரிசையாக பார்க்க முடிகிறது.
கொரோனா கால முடக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இணையதளங்களில் முற்றிலும் சுவாரஸ்யமான இணையதளங்களில் ஒன்றாக இது அமைகிறது.
பெங்களூருவைச்சேர்ந்த சோனாலி ரஞ்சித் மற்றும் அவரது கனவர் வைஷ்னவ் பாலசுப்பிரமணியம் இணைந்து இந்த தளத்தை அமைத்துள்ளனர். இருவரும் விளம்பரத்துறையில் பணியாற்றி வருபவர்கள். பணி நிமித்தமாக உலகம் முழுவதும் பயணம் செய்யும் பழக்கம் கொண்டவர்களுக்கு கொரோனா கால முடக்கம் சோதனையாக அமைந்திருக்கிறது. இந்த அனுபவம், நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விஷயங்களின் முக்கியத்துவத்தை உணர்த்த, வேறு ஒரு வீட்டின் ஜன்னல் வழியே காணும் காட்சி உள்ளிட்ட பல விஷயங்களுக்காக இருவரும் ஏங்கியிருக்கின்றனர்.
இந்த ஏக்கத்தின் விளைவாக தான், வீட்டில் இருந்தபடியே ஜன்னல் வழி காட்சிகளை மாற்றிக்கொள்வதற்கான இணையதளத்தை அமைக்கும் எண்ணம் கொண்டனர். முதலில் தங்கள் நண்பர்களிடம் இருந்து ஜன்னல் காட்சிகளை கோரியவர்கள் அடுத்த கட்டமாக, தளத்தின் பயனாளிகளும் இதில் பங்கேற்கும் வகையில் தளத்தை அமைத்தனர்.
-