மகளுக்காக தந்தை அமைத்த இணையதளம்!
தயவுசெய்து முககவசம் அணியவும் என கோரிக்கை வைக்கும் (http://wearamaskplease.com// ) இணையதளம் செல்ல மகளுக்காக தந்தை ஒருவர் அமைத்துள்ள இணையதளம். பொதுநலன் நோக்கிலானதும் தான்.
நம் நாட்டில், பொதுபுத்தியில் தொழில்முனைவு என்பது அந்த அளவுக்கு முக்கியமானது இல்லை. தொழில்முனைவு குறித்து பலரும் பேசுவார்கள் என்றாலும், தங்கள் பிள்ளைகள் சுய தொழில் செய்யப்போவதாக கூறினால், மனதார ஆதரிக்க கூடிய இந்திய பெற்றோர்கள் அரிது தான். ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. அங்கு சிறுவயதிலேயே தொழில்முனைவை ஊக்குவிக்கின்றனர். இதற்கு லெமேனேட் ஸ்டேண்ட் எனப்படும் விற்பனை நிலையம் நல்ல உதாரணம். பார்க்க விக்கிபீடியா: https://en.wikipedia.org/wiki/Lemonade_stand
சிறுவர், சிறுமியர்கள் தாங்களாகவே எலுமிச்சை பழரசத்தை தயாரித்து விற்பனை செய்வதை தான், இப்படி குறிப்பிடுகின்றனர். நம்மூர் தள்ளுவண்டி சர்பத் கடை போன்றவை தான். ஆனால், இவை சிறார்கள் நடத்தப்படுபவை. படிக்கும் வயதிலேயே, கைக்காசு சம்பாதித்துக்கொள்ள வழிகாட்டுவதோடு, சமூகத்துடன் பழகுவதற்கான பயிற்சியாகவும் இது அமைகிறது.
இதே போல தான், அமெரிக்க சிறுமி ஒருவர் தனது அப்பாவிடம், லெமேனேட் ஸ்டாண்ட் அமைக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட தந்தை, இப்போது கொரோனா காலம் என்பதால், தற்போதைய சூழலுக்கு பொருத்தமான லெமேனேட் ஸ்டாண்ட் என்பது முககவச விற்பனை தான் என்று கூறி, அதற்கு வழிகாட்டியிருக்கிறார். அதன்படி, முககவசங்களை வாங்கி ஒரு பெரிய அட்டை பெட்டியில் வைத்திருக்கின்றனர். பெட்டியின் மீது, தேவையான முககவசத்தை எடுத்துக்கொண்டு விரும்பிய தொகையை செலுத்தவும் என எழுதி வைத்தனர்.
இந்த முககவச விற்பனை பெட்டியை தான் சிக்காகோ நகரி வீதியில் வைத்திருக்கின்றனர்.
இந்த முயற்சியை விளக்கும் ஒரு வீடியோவையும் உருவாக்கி, இந்த எளிய முயற்சிக்காக அமைக்கப்பட்ட இணையதளத்தில் அதை இடம்பெற வைத்துள்ளனர்.
எளிமையான ஐடியா தான். அதே நேரத்தில் இந்த தளம், கொரோனா சூழலில் தேவையான செய்தியையும் சொல்கிறது அல்லவா!
-
டிவிட்டரிலும் பலர் #WearAMaskPlease எனும் ஹாஷ்டேகுடன் மாஸ்க் அணிவது பற்றிய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். -https://twitter.com/hashtag/wearamaskplease?src=hash