இலக்கிய பயணங்களை அறிய ஒரு இணையதளம்
புத்தகங்களை அறிய புதிய வழி: பயணங்களை தேர்வு செய்யவும் புதிய வழி என கவர்ந்திழுக்கிறது புத்தக தடம் (https://www.thebooktrail.com/ ) இணையதளம். பயணங்களும் பிடிக்கும், புத்தகங்களை வாசிப்பதும் பிடிக்கும் எனும் நபர்களுக்கு இந்த தளம் இன்னும் பிடித்தமானதாக இருக்கும். ஏனெனில், இந்த தளம், பயணங்களையும், புத்தகங்களையும் இணைத்து புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய இடத்திற்கு பயணம் செய்யும் போது, அந்த இடம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முற்படுவது இயல்பு தானே. இதையே புத்தகங்கள் வாயிலாக புதுமையாக செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. அதாவது, பயணம் செய்ய உள்ள இடத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட புத்தகங்களை பட்டியலிட்டு பரிந்துரைக்கிறது.
இதையே புத்தக தடம் என்கிறது. உதாரணத்திற்கு இத்தாலியின் ரோம் நகருக்கு செல்வதாக இருந்தால் அல்லது ஜப்பானின் டோக்கியோவுக்கு செல்வதாக இருந்தால், அந்த நகரங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட புத்தகங்களை வாசிக்க இந்த தளம் வழி செய்கிறது.
இப்படி இடம் சார்ந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம், பயணத்தின் போது அந்த இடத்தில் தன்மையை கலாச்சார வாசனையோடு உணரலாம். பயணத்தை மேம்படுத்தும் அனுபவமாகவும் இது அமையலாம். கதாபாத்திரங்கள் பார்வையில் அந்த இடங்களை அறியலாமே!
அதே நேரத்தில் வாசிப்பதற்கான புதிய புத்தகங்களை தேர்வு செய்வதற்கான புதிய வழியாகவும் இது அமையும். அடுத்து என்ன புத்தகம் வாசிக்கலாம் எனும் கேள்விக்கு விடையாக இந்த தளத்தில், நாம் விரும்பும் இடம் சார்ந்த புத்தகத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த வகையில் பயணிகள் அல்லாதோரும் இந்த தளத்தை பயன்படுத்தலாம். எனினும், இந்த தளத்தின் முழு அருமையை உணர வேண்டும் என்றால், ஒரு புத்தகத்தை வாசித்து விட்டு, அதில் விவரிக்கப்படும் நகருக்கு சென்று பார்ப்பது சிறந்த வழி. இதன் மூலம் எழுத்தாளரின் பார்வையில் நகரத்தை உணரலாம்.
இலக்கிய வரைபடம், பயண கையேடு போன்ற தகவல்களையும் புத்தகம்+பயணம் சார்ந்து வழங்குவதாக இந்த தளம் தெரிவிக்கிறது.
பயணங்களிலும், புத்தகங்களிலும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் உலா வந்தால் உற்சாகம் கொள்வார்கள்.
-
முந்தைய புத்தக இணையதளங்கள்: