பயண இலக்கியங்களை அறிய ஒரு இணையதளம்
உங்களுக்கு பயணம் செய்வதும் பிடித்திருந்து, புத்தக வாசிப்பும் பிடித்திருந்தால் உங்களுக்கேற்ற ஆயிரக்கணக்கான புத்த்கங்களை அடையாளம் காட்டுவதாக அழைக்கிறது ட்ரிப்பிக்ஷன் (https://www.tripfiction.com) இணையதளம்.
பயணங்கள் என்றால் இடங்களை தேடிச்செல்வது தானே. இந்த தளம் இடங்கள் சார்ந்த புத்தகங்களை பரிந்துரைக்கிறது. பயணங்களின் போது படிப்பதற்கான புத்தகங்களை தேர்வு செய்வதற்கான வழியாகவும் இது அமையலாம் அல்லது புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான புதிய வழியாகவும் அமையலாம்.
எப்படி இருந்தாலும், புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான சுவாரஸ்யமான வழியாக அமைகிறது. எப்படி என்றால், புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் அல்லது அதன் வகை கொண்டு புத்தகங்களை வகைப்படுத்தாமல், புத்தகம் எழுதப்பட்ட இடம் அல்லது நிலம் சார்ந்து, அவற்றை பட்டியலிடுகிறது இந்த தளம்.
உதாரணமாக, நீங்கள் மாஸ்கோ அல்லது டோக்கியோ செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், அந்த நகரங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட புத்தகங்களை இந்த தளத்தில் கண்டறியலாம். அவை நாவல்களாக இருக்கலாம், பயண இலக்கியங்களாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் அந்த நிலப்பரப்பிற்கு மனதளவில் உங்களை கொண்டு செல்லக்கூடியவையாக இருக்கும்.
ஆக, நீங்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் சரி, ( கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு தான்) அல்லது உலக நகரங்கள் மீதான ஆர்வம் காரணமாக அந்நரங்கள் சார்ந்த எழுத்துக்களை படித்து ரசிக்க விரும்பினாலும் சரி, இந்த தளத்தில் உங்கள் மனதில் உள்ள நகரத்தை குறிப்பிட்டு அங்கி எழுதப்பட்ட புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட நகரங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட புத்தகங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடிவதோடு, விரும்பினால் அந்த புத்தகங்களை ஆன்லைனில் வாங்கவும் செய்யலாம்.
உதாரணமாக இந்த தளத்தில் சென்னை என தேடிப்பார்த்தால், பிரைன் ஸ்டோடர் எழுதிய ஏ கிரேட்டர் காட், ஏ மெட்ராஸ் மைஸ்மா, ஏ ஸ்டிரைட்ஸ் செட்டில்மெண்ட் உள்ளிட்ட புத்தகங்களை பட்டியலிடுகிறது. இப்படி நீங்கள் விரும்பும் நகரங்களை மையமாக கொண்ட புத்தகங்களை தேடிப்பார்க்கலாம். இந்தியாவை பொருத்தவரை நன்கறியப்பட்ட பெரு நகரங்கள் சார்ந்த புத்தகங்களை தேடலாம். மதுரை, நெல்லை பெயர்களை குறிப்பிட்டு தேட வழியில்லை.
பயண பிரியர்கள், இந்த தளம் கொண்டு பயணங்களின் போது படிப்பதற்கான புத்தகங்களின் பட்டியலை உருவாக்கி கொள்ளலாம். இதில் உள்ள புத்தகங்களை படித்திருந்தால், அவற்றுக்கு விமர்சனம் எழுதலாம். அல்லது படித்து விட்டு கருத்துகளை பகிரலாம். இந்த தளத்தில் இடம்பெறக்கூடிய இடம் சார்ந்த புதிய புத்தகங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்களை அறிமுகம் செய்யும் பதிவுகள் மூலமும் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்த புத்தகங்களை உலக வரைபடம் சார்ந்தும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
-