நாவல்களை தேட உதவும் வரைபட தளம்
நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள வழக்கமான பட்டியல்கள், பரிந்துரைகள் போன்ற வழிகள் இல்லாமல், கொஞ்சம் புதுவிதமாக நாவல்களை தெரிந்து கொள்ள வழி செய்கிறது நாவல்ஸ் ஆன் லொகேஷன் இணையதளம். இந்த, தலைப்பு தான் அதன் உள்ளடக்கமே. நாவலின் லொகேஷன் அதாவது இருப்பிடம் எதுவோ அதனடிப்படையில் நாவலை அடையாளம் கண்டு கொள்ள இந்த தளாம் உதவுகிறது. மிக அழகாக கூகுளின் பூமி வரைப்படத்தின் மீது நாவல்களில் வரும் இருப்பிடத்தை பொருத்தி அந்த இடத்தில் கிளிக் செய்தால் நாவலை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த இடத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் பற்றிய விவரம் தோன்றுகிறது.அந்த எழுத்தாளரின் பிற நாவல்களையும் அறிந்து கொள்ளலாம்.அதோடு அந்த இடத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பிற நாவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
எந்த நகரம் பற்றி படிக்க விருப்பமோ அந்த நகரின் பெயரை குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது.
நாவல்கள் எல்லாமே இருப்பிடம் சார்ந்தவை தான். ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிசஸ் என்றதுமே டப்ளின் தான் நினைவுக்கு வரும். தாஸ்தவஸ்கி எனும் போது பீட்டர்ஸ்பர்க் நினைவுக்கு வரும். தி.ஜானகிராமன் என்றதுமே தஞ்சாவூர் நினைவுக்கு வருவது போல, வண்னதாசன் என்றதுமே நெல்லை நினைவுக்கு வருவது போல…! ஆக இருப்பிடத்தை தொடக்கப்புள்ளியாக வைத்து கொண்டு நாவலை தேடுவது சுவாரஸ்யமான விஷயம் தான்.
புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள இது புதிய வழி தான்.
இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்சம் உறுப்பினர்களும் நாவல்களை சமர்பிக்கலாம் என்பது தான்.
நாவல்களை தேட;http://novelsonlocation.com/
-
நியூயார்க் இலக்கிய வரைபடம்
இலக்கியத்தையும், வரைபடத்தையும் இணைக்கும் இன்னொரு சுவாரஸ்யமான இணையதளம் லிட்ரரிமேப்.என்ஒய்சி (https://literarymap.nyc/map/ ).
இந்த தளம், அமெரிக்க நகரான நியூயார்க்கை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல்களில் வரும் இடங்களை எல்லாம் நகர வரைபத்தின் மீது பொருத்திக் காட்டுகிறது. வரைபடத்தின் மீது, சுட்டிக்காட்டப்படும் இடங்கள் மீது மவுஸை கொண்டு சென்றால், அந்த இடம் தொடர்பான நாவலில் வரும் வாசகம் மேற்கோளாக காண்பிக்கப்படுகிறது.
நியூயார்க்கில் குடியேறிய கெண்டாரோ எனும் ஆசியர் இந்த தளத்தை அமைத்துள்ளார்.
--
தேடியந்திரங்களை தேடுங்கள்!
தேடியந்திரங்களுக்கு என்று ஒரு வரைபடம் இருப்பது தெரியுமா? சர்ச் இஞ்சின் மேப் (https://www.searchenginemap.com/) எனும் இணையதளத்தில், இந்த தேடியந்திர வரைபடத்தை அணுகலாம். இந்த வரைபடத்தில், கூகுள், மைக்ரோசாப்டின் ’பிங்’ உள்ளிட்ட ஆங்கிலத்தில் உள்ள பெரும்பாலான தேடியந்திரங்களையும், அவற்றுக்கு இடையிலான தொடர்பையும் பார்க்கலாம்.
தேடியந்திரங்கள் எல்லாம் வரைபடத்தில் சின்னதும், பெரியதுமான வட்டங்களாக இடம் பெற்றுள்ளன. கூகுள், பிங், யாண்டெக்ஸ் உள்ளிட்ட தேடியந்திரங்கள் மஞ்சள் வண்ணத்திலும், மற்ற தேடியந்திரங்கள் வெளிர் பச்சை வண்ணத்திலும் இடம் பெற்றுள்ளன.
மஞ்சள் வண்ணத்தில் உள்ளவை எல்லாம், மூல தேடியந்திரங்கள். அதாவது, இணையத்தில் வலை வீசுவதற்கான இணைய பக்கங்களை சேகரித்து, தேடல் முடிவுகளை பட்டியலிடும் தேடியந்திரங்கள். இவை சிலந்தி அடிப்படையிலான தேடியந்திரங்கள் எனப்படுகின்றன. சிலந்தி என்பது, இணையத்தில் உலாவி இணைய பக்கங்களை திரட்டும் ஸ்பைடர் வகை புரோகிராம்களை குறிக்கிறது.
மற்ற தேடியந்திரங்கள் எல்லாம், இத்தகைய மூல தேடியந்திரங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுபவை. இவை அடுக்கு தேடியந்திரங்கள் (மெட்டா சர்ச் இஞ்சின்) எனப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட உதவும் தேடியந்திரங்களும் இந்த பிரிவில் தான் வருகின்றன.
இந்த வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு தேடியந்திரத்தை கிளிக் செய்தவுடன், எட்டிபார்க்கும் பெட்டியில், அந்த தேடியந்திரம் தொடர்பான தகவல்களும், அது செயல்படும் விதமும் இடம்பெறுகிறது.
பட்டியலாக பார்ப்பதைவிட, வரைபடமாக தேடியந்திரங்களை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. இத்தனை தேடியந்திரங்கள் இருக்கின்றனவா என வியப்பை ஏற்படுத்தும். இதைத்தவிரவும் தேடியந்திரங்கள் இருக்கின்றன என்பது தான் இன்னும் வியப்பானது.