உங்கள் வாசிப்புக்கு உதவும் இணைய உதவியாளர்
இணையத்தில் வாசிப்பது என்றால், ’காபே’வுடன் வாசியுங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு புதுமையான ஒரு இணைய சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. அது தான் காபே- https://kaffae.com/
காபேவை எப்படி அறிமுகம் செய்வது?
’சிங்கம்’ பட சூரியாவின் பஞ்ச் வசனம் போல, ’நீங்கள் புக்மார்க்கை பார்த்திருக்கலாம், ஏ.ஐ உதவியாளரை கேள்விப்பட்டிருக்கலாம், தேடியந்திரங்களை அறிந்திருக்கலாம், இவை எல்லாம் கலந்த ஒரு சேவையை பார்த்திருக்கிறீர்களா?’ – அது தான் காபே என கொஞ்சம் ஆர்பாட்டமாகவும் அறிமுகம் செய்யலாம்.
காபேவின் அதிகாரபூர்வ அறிமுக குறிப்பின் படி பார்த்தால், புத்திசாலித்தனமாக படியுங்கள், அதிகம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்பது இந்த சேவையின் தன்மையாக இருக்கிறது.
காபே, உங்கள் வாசிப்பை கவனித்து, அது தொடர்பான புள்ளி விவரங்களை அளிக்கிறது, நீங்கள் வாசித்தவற்றை நினைவில் வைத்திருந்து அதனடிப்படையில் புதிய வாசிப்புக்கானவற்றை பரிந்துரைக்கிறது. அதோடு உங்கள் வாசிப்புக்கான இணைய நூலகமாகவும் விளங்குகிறது.
காபேவை, கூகுள் குரோம் அல்லது பயார்பாக்ஸ் பிரவுசருக்கான நீட்டிப்பாக தரவிறக்கி நிறுவிக்கொண்டால், இணையத்தில் நீங்கள் வாசிப்பவற்றை கவனித்துக்கொண்டிருக்கிறது. இதனடிப்படையில் இன்று நீங்கள் வாசிப்பில் செலவிட்ட நேரம் தொடர்பான விவரங்களை மறு நாள் அறிக்கையாக அளிக்கிறது. எந்த பிரிவில் எத்தனை கட்டுரைகள் வாசித்தீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில், காபே உங்களுக்கான டிஜிட்டல் உதவியாளர் போன்றது.
அடுத்ததாக, உங்கள் வாசிப்பின் அடிப்படையில், தொடர்புடைய கட்டுரைகளை பரிந்துரைக்கிறது.
மேலும் நீங்கள் வாசித்தவற்றை எல்லாம் சேமித்து, வரிசைப்படுத்தி வைக்கிறது. உங்களுக்கான நூலகம் இது. நீங்கள் எதையும் தனியே டேக் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதை பார்த்தாலே கடந்த காலங்களில் என்ன வாசித்தோம் என தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாசிப்புக்கான தேடியந்திரம் போன்றது இது.
இந்த தளத்தின் மூலம் அறிந்து கொள்ள கூடிய அம்சங்கள் அடிப்படையில் இந்த அறிமுகத்தை எழுதியுள்ளேன். இந்த சேவையை முழுவதும் பயன்படுத்திப்பார்க்கவில்லை. உங்கள் பயன்பாட்டில் காபே எப்படி இருக்கிறது என சொல்லுங்கள்!
-