பாடல் பட்டியலை ஒப்பிட ஒரு இணையதளம்
இணைய இசை பாயும் சேவையான ( ஸ்டிரீமிங்) ஸ்பாட்டிபை தளத்தை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். அதோடு ஸ்பாட்டிபை சார்ந்து இயங்கும் துணை இணைய சேவைகள் பல இருப்பதையும் அறிந்திருக்கலாம். அதாவது ஸ்பாட்டிபை மூலம் இசை கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் துணை சேவைகள்.
இவற்றில் ஒன்றை ஏற்கனவே இந்த மடலில் பார்த்திருக்கிறோம். இப்போது இன்னொரு துணை சேவையை பார்க்கலாம். வார்ப்டு - கம்பேர் ( https://wrapped-compare.com/) எனும் இந்த தளம், ஸ்பாட்டிபையில் நீங்கள் அதிகம் கேட்டு ரசித்த பாடல்களை உங்கள் நண்பர்கள் பாடல் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்க்க வை செய்கிறது.
பொதுவாக இசை உலகில், பிளேலிஸ்ட் என்பது விரும்பிய பாடல்களின் பட்டியலை குறிக்கிறது. ஸ்பாட்டிபை போன்ற இசை சேவைகளில், நமக்கான பாடல் பட்டியலை உருவாக்கி கொள்ளலாம். நேயர் விருப்பம் போல நாம் விரும்பும் பாடல்களை கேட்க இந்த பட்டியல் உதவியாக இருக்கும்.
ஸ்பாட்டிபை போன்ற சேவைகள் அல்கோரிதம் கொண்டு , பயனாளிகளின் இசைத்தேர்வுகளை அலசி ஆராய்ந்து அதனடிப்படையிலும், பாடல்கள் பட்டியலை பரிந்துரைக்கின்றன.
இவை ஒரு பக்கம் இருக்க, இசைப்பிரியர்கள் தங்களது பாடல் பட்டியல்களை பரஸ்பரம் ஒப்பிட்டு பார்த்து அதன் மூலம் புதிய பாடல்களை கண்டறிவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஒப்பீட்டை எளிதாக மேற்கொள்ள வழி செய்கிறது மேலே சொன்ன இணையதளம். இந்த தளத்தில் உங்களது பாடல் பட்டியலை சமர்பித்து, இரண்டாவதாக உங்கள் நண்பர்கள் பாடல் பட்டியலை சமர்பித்தால், இரண்டையும் ஒப்பிட்டு பொதுவான மற்றும் வேறுபடும் அம்சங்களை பட்டியலிடுகிறது.
நண்பர்கள் பட்டியலை தான் ஒப்பிட வேண்டும் என்றில்லை, சில ஆண்டுகளுக்கு முன் நீங்கள் கேட்ட பாடல் பட்டியலுடன் கூட ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
ஸ்பாட்டிபை, வார்ப்டு எனும் பெயரில் இசைப்பிரியர்கள் ஆண்டு முழுவதும் கேட்ட பாடல்களில் பிரபலமானவற்றை பட்டியலிட்டு வழங்குகிறது. நீங்கள் ஸ்பாட்டிபை பயனாளி என்றால் உங்கள் கணக்கு மூலம் இந்த பட்டியலை அணுகலாம். இந்த பட்டியல் அடிப்படையிலேயே ஒப்பீடு சேவையை வழங்குகிறது வார்ப்டு - கம்பேர் ( https://wrapped-compare.com/) .
-