இசையால் இணைக்கும் இணையதளம்
இப்போது பார்க்கப்போகும் இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனில் உங்களுக்கு ’ஸ்பாட்டிபை’ கணக்கு இருக்க வேண்டும். ஸ்பாட்டிபை என்பது ஸ்டிரீமிங் முறையில் காப்புரிமை சிக்கல் இல்லாமல் இசை கேட்க உதவும் சேவை.
இசை பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்பாட்டிபை சார்ந்து பல்வேறு துணை சேவைகள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் தான் ஃபீல்வித்மீ.நெட் (https://feelwithme.net/ ) இணையதளம் வருகிறது.
என்னோடு பாட்டு பாடுங்கள் எனும் இளையராஜாவின் பாட்டு போல், இந்த தளம் என்னோடு உணருங்கள் என அழைப்பு விடுக்கிறது. இதற்கு இசை பாலம் அமைத்து தருகிறது. எப்படி எனில், நீங்கள் கேட்கும் பாடல்கள் அடிப்படையில், அதே பாடல்களை கேட்டு ரசிப்பவர்களை அடையாளம் காட்டுவதன் மூலம் அவர்களுடன் இணைய நட்பை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.
இந்த தளத்தில் ஸ்பாட்டிபை கணக்கு மூலம் நுழைந்தவுடன், நீங்கள் அதிகம் கேட்டு ரசித்த பாடல்களை தெரிந்து கொண்டு, அதே ரசனை கொண்ட ஸ்பாட்டிபை ரசிகர்களை பரிந்துரைக்கிறது. இருவர் இசை ரசனையும் எந்த அளவு ஒத்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இருவருக்கும் பிடித்த அபிமான பாடகர்களையும் பட்டியலிடுகிறது.
இந்த தகவல்களை வைத்துக்கொண்டு, உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்கும் சக ரசிகரோடு தொடரு கொண்டு பேசி, நட்பை வளர்த்துக்கொள்ளலாம்.
இணையம் மூலம் நட்பு வளர்த்துக்கொள்ள எத்தனையோ தளங்கள் இருக்கின்றனர். இந்த தளம் இசையால் நண்பர்களை தேடிக்கொள்ள வழி செய்கிறது.
ஆனால் ஒன்று, இந்த தளம் மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களுடன் எப்படி உரையாடுகிறீர்கள் என்பதற்கு நீங்களே பொறுப்பு என்கிறது. மேலும், அந்தரங்க தகவல்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கிறது. எனவே உரையாடல் இசைமயமாகவே இருந்தால் நல்லது.
இந்த தளத்தை உருவாக்கிவர், தனக்கு எப்போதுமே புதிய பாடல்களை கண்டறிவதில் ஆர்வம் அதிகம் என்று கூறியிருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள எல்லோரது முன்னணி பத்து பிடித்த பாடல்கள் பட்டியலை திரட்டி, அவற்றில் இருந்து, நமக்கு பிடித்த 9 பாடல்களை கேட்டு ரசிக்கும் ஒருவரை அடையாளம் காண முடிந்தால் எப்படி இருக்கும் எனும் எண்ணம் தனக்கு அடிக்கடி உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளவர், இந்த எண்ணத்தை இந்த தளம் மூலம் செயல்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அதோடு அந்த பத்தாவது பாடலை கேட்டு ரசிக்கவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பாட்டிபை தொடர்பான முந்தைய பதிவு: https://cybersimman.substack.com/p/message-14