ஒருவரும் கேட்காத பாடல்களை கேட்கச்செய்யும் இணைய சேவை
எல்லோருமே ஹிட்டான பாடல்களை தான் கேட்டு ரசிக்க விரும்புகின்றனர். இதில் தவறேதும் இல்லை என்றாலும், ஹிட்டாக பாடல்களை எல்லாம் யார் கேட்பது. அதைவிட, ஒருவருமே கேட்டிராத பாடல்களை யார் கேட்டு ரசிப்பது?
இத்தகைய பாடல்களை கேட்டுப்பார்க்கலாமே என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், பர்கட்டிபை (https://forgotify.com/ ) இணையதளம் பரவசத்தில் ஆழ்த்தும். இல்லை என்றாலும் கூட இந்த தளம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். ஏனெனில், அந்த அளவுக்கு இதன் பின்னே உள்ள ஐடியா புதுமையானது.
இந்த தளம், மறக்கப்பட்ட பாடல்களை தேடி கண்டறிந்து கேட்கச்செய்கிறது. அதாவது ஒருவருமே கேட்டிராத பாடல்களை கேட்க வழி செய்கிறது. இசை பிரியர்கள் நன்கறிந்த ஸ்பாட்டிபை இசை கேட்பு சேவை மூலம், இந்த வசதியை வழங்குகிறது.
ஸ்பாட்டிபையில் விரும்பிய பாடல்களை கேட்டு மகிழலாம். நாமே நமக்கான பிளேலிஸ்ட்களை உருவாக்கி கொள்வதோடு, அல்கோரிதம் உதவியோடு ஸ்பாட்டிபை அளிக்கும் பரிந்துரைகள் படியும் கேட்டு மகிழலாம்.
ஸ்பாட்டிபையில் பல தரப்பினரும் விரும்பி கேட்கும் பாடல்கள் உண்டு. ஆனால், ஸ்பாட்டிபையில் யாருமே கேட்காத பாடல்களும் இருக்கின்றன- ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. உண்மையில், ஸ்பாட்டிபையில் பதிவேற்றப்படும் பாடல்களில் 20 சதவீத பாடல்கள் ஒரு முறை கூட கேட்கப்படாத பாடல்கள் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட 40 மில்லியன் பாடல்கள்.
இந்த தகவலை கேள்விபட்ட லேனே ஜோர்டனுக்கு, இவை எல்லாம் என்ன பாடல்கள், இவை கேட்கப்பட வேண்டும் அல்லவா? எனும் கேள்விகள் பிறந்துள்ளது. உடனே தனது நண்பர்கள் ஹாஸ்மன் மற்றும் நேட் காங்கடனுன் இணைந்து, கேட்கப்படாத ஸ்பாட்டிபை பாடல்களை கேட்பதற்கான இணையதளத்தை உருவாக்கினார்.
இந்த தளம் தான் பர்கட்டிபை.
ஒரு முறை கேட்கப்படாத பாடல்களை இந்த தளம் கேட்க செய்கிறது. ஆனால், முதல் முறை கேட்கப்பட்ட பிறகு அந்த பாடல் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடும். எப்போதும், யாரும் கேட்காத பாடல்களை மட்டும் ஸ்பாட்டிபையில் இருந்து தேடி கண்டறிந்து பட்டியலிடும்.
இந்த பாடல்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
புறக்கணிக்கப்பட்ட பாடல்கள் மறக்கப்பட்டவையாகவே போய்விடும் அபாயத்தில் இருந்து அவற்றை மீட்டுத்தரும் இந்த சேவை அற்புதமானது தான் இல்லையா!
இப்படி கேட்கப்படாத பாடல்களில் பெரும்பாலானவை விநோதமானவையாக இருந்தாலும் இவற்றிலும் இசை பொக்கிஷங்கள் இருக்கலாம். முயன்று பாருங்கள். உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-