அந்தக் கால தளங்களுக்கு ஒரு கூகுள்
நேற்று பார்த்த இணைய முகவரிகளுக்கான ஒற்றுமை அவை, எல்லாம் அந்தக் கால இணையதளங்கள் என்பதாகும். இந்த தளங்களின் வடிவமைப்பையும், உள்ளடக்கத்தையும் பார்த்தாலே அவை எல்லாம் 90 களின் தன்மையை கொண்டிருப்பதை உணரலாம்.
இத்தகைய தளங்களை நீங்கள் கூகுளில் பார்க்க முடியாது. ஏனெனில், இவற்றை நீங்களாகவும் தேடப் போவதில்லை: கூகுளும் இவற்றை முன்னிலை படுத்தப்போவதில்லை. இப்படி மறக்கப்பட்ட அந்தக் கால இணையதளங்களை அடையாளம் காட்டுவதற்காக என்றே ஒரு தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. -வைபை.மீ ( https://wiby.me/ )
கூகுளில் தேடுவது போலவே இந்த தேடியந்திரத்தில் தேடலாம். ஆனால் முடிவுகள் தான் கூகுளில் தோன்றுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். தேடப்படும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான கோடிக்கணக்கான முடிவுகளை பட்டியலிடுவதற்கு பதிலாக, வைபை தேடியந்திரம், அந்த கால இணையதளங்கள் தொடர்பான முடிவுகளை பட்டியலிடுகிறது.
இந்த வகையில், பல சுவாரஸ்யமான இணையதளங்களை நீங்கள் அடையாளம் காணலாம். பெரும்பாலும் பழைய தளங்கள். இவற்றில் பல இன்னமும் செயல்பாட்டில் இருப்பவை.
சரி, எதற்காக இப்படி பழைய இணையதளங்களை தேட வேண்டும்? வர்த்தகமயமாகாத காலத்திற்கான இணையத்தை கண் முன் கொண்டு வருவதற்காக என்பது இந்த கேள்விக்கான வைபை தேடியந்திரத்தின் பதிலாக இருக்கிறது. ஆம், இணையத்தின் ஆரம்ப காலத்தில், பெரும்பாலும் தொழில்நுட்ப ஆர்வலர்களும், கம்ப்யூட்டர் கில்லாடிகளும், கல்வியாளர்களும் இணையதளங்களை அமைத்தனர். அந்த தளங்கள் ஆர்வம் சார்ந்தவையாக இருந்தன.
அதன் பின், வர்த்தக அலை வீசித்துவங்கி, இணையதளங்கள் தோற்றத்திலும், உள்ளடக்கத்திலும் வணிகமயமாகி விட்டன. கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள் இத்தகைய வணிகமயமான தளங்களில் இருந்து தான் தகவல்களை தேடித்தருகின்றன. வழக்கமான தேடலுக்கு இந்த உத்தி சரியாகவே இருக்கிறது.
ஆனால், இணையதளங்கள் எளிமையாக, உற்சாகம் அளிக்க கூடியதாக இருந்த ஆரம்ப கால இணையத்தின் தன்மையை உணர விரும்பினால், கூகுளில் அதற்கு வழியில்லை. அதனால் தான், அந்தக் கால இணையதளங்களை தேட வழி செய்யும் வகையில் வைபை உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் அறிமுக பக்கம் தெரிவிக்கிறது.
இணையத்தின் கடந்த காலத்தை திரும்பி பார்க்க விரும்பினால், இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தலாம். இதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது என நீங்கள் கேட்பதாக இருந்தால், இந்த தேடியந்திரத்தில் உள்ள, என்னை ஆச்சர்யப்படுத்தவும் (surprise me... ) எனும் வசதியை கிளிக் செய்து பாருங்கள்.
கூகுளில் உள்ள, ஐம் ஃபீலிங் லக்கி வசதிக்கு நிகரான இந்த அம்சம், கிளிக் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பழைய இணையதளத்தை அறிமுகம் செய்கிறது. இப்படி தோன்றும் தளங்களில் சில அலுப்பூட்டக்கூடியதாக இருந்தாலும், அவற்றுக்கு மத்தியில் அட என வியக்க வைக்கும் இணைய பொக்கிஷங்களையும் காண முடிகிறது.
இப்படி ஆச்சர்யப்பட வைத்த ஷீலேஸ் தளம் பற்றி நாளை விரிவாக பார்க்கலாம்.
வைபை தேடியந்திரம் .ஆர்க் என முடியும் முகவரியில், மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திர உதவுயுடன், அந்த கால இணையம் மற்றும் தற்கால இணையத்தை இணக்கும் தேடல் முடிவுகளை அளிக்கிறது. முயன்று பாருங்கள். - https://wiby.org/