உங்கள் மொழித்திறனுக்கு சவால் விடும் தளம்

இணையம் மூலம் வேற்று மொழி கற்க உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன. ’டுவாலிங்கோ’ இவற்றில் முன்னணி தளம். மேலும் ’வெர்ப்லிங்’ உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன. இந்த தளங்கள் மூலம் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது எளிது என்றாலும், இதற்காக மெனக்கெடும் ஆர்வம் ஒருவருக்கு இருக்க வேண்டும்.

இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் வர வேண்டும் எனில், அதற்கு உங்களை தயார் செய்து கொள்ள உதவும் சுவாரஸ்யமான மொழி விளையாட்டு இணையதளங்களும் இருக்கின்றன. இந்த பட்டியலில் தான், லாங்குவேஜ் கெஸர் (https://languageguesser.com/en ) வருகிறது.

லாங்குவேஜ் கெஸர் இணையதளம், உலக மொழிகளை கண்டறியும் விளையாட்டை வழங்குகிறது. அதையும் மிக சுவாரஸ்யமாக செய்கிறது. இந்த தளத்தில், யூடியூப் இசை வீடியோக்களை பார்த்து, அதில் வரும் மொழி என்ன என்பதை கண்டறிந்து சொல்ல வேண்டும். இதற்காக முன்வைக்கப்படும் பதில்களில் இருந்து பொருத்தமான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வீடியோவாக முன்னேறினால், மதிப்பெண்களையும் பெறலாம். இசை வகை வீடியோ மற்றும் போட்டியின் கடினத்தன்மையை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புக் இருக்கிறது.

ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து அதன் மொழியை ஊகிப்பது சுவாரஸ்யமாக இருப்பதோடு, புதிய இசையையும் கேட்டு ரசிக்கலாம். பதில் அளித்த பின்னர், வீடியோவில் வரும் இசைக்குழுவின் மற்ற பாடல்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆக, மொழிகளை தெரிந்து கொள்வதோடு, புதிய இசையையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். இதை தான், மொழியை, இசையை, உலகை கண்டறியலாம் என இந்த தளம் குறிப்பிடுகிறது.

போட்டியில் பங்கேற்றவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் ரக்‌ஷுல் ( Emanuel Ruckstuhl ) என்பவர் இந்த மொழி விளையாட்டு தளத்தை அமைத்திருக்கிறார். இவர் உருவாக்கியுள்ள இன்னொரு மொழி சார்ந்த இணையதளத்தை நாளை பார்க்கலாம்.

1