அல்டாவிஸ்டாவில் தேடலாம் வாருங்கள்!
ஒரு தேடியந்திரமாக அல்டாவிஸ்டாவை மீட்டெடுப்பதெல்லாம் சாத்தியம் இல்லை. ஆனால், அல்டாவிஸ்டாவில் தேடும் அனுபவத்தை ’ஓல்டவிஸ்டா’ இணையதளம் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் பழைய இணையதளங்களை தேடி, பழைய இணையத்தில் உலாவும் அனுபவத்தை பெறலாம்.
பழைய இணையத்தின் அருமையை புரிந்து கொள்ள, ஜியோசிட்டீஸ், டிரைபாடு, ஏஞ்சல்பயர் போன்ற பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும். இவை எல்லாமே ’வலை 1.0’ என்று சொல்லப்படும் இணையத்தின் ஆரம்ப காலத்தில் பிரபலமாக இருந்த முன்னணி சேவைகள்.
இந்த சேவைகளை கொண்டு தனிநபர்கள் மிக எளிதாக இணையத்தில் தங்களுக்கான சொந்த இணைய பக்கங்களையும் / தளங்களையும் அமைத்துக்கொள்ளலாம். இந்த தளங்களின் வடிவமைப்பும், உள்ளடக்கமும் ஒருவித பழைய தன்மையை கொண்டிருப்பதாக தோன்றினாலும், இணையவாசிகள் தங்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கி கொள்ள வழி செய்த தளங்கள் என்ற வகையில் இவற்றை கொண்டாடலாம்.
நாமறிந்த வகையிலான சமூக ஊடகங்களுக்கு முந்தைய சமூக ஊடகங்கள் என ஜியோசிட்டீஸ் (Geocities) உள்ளிட்ட சேவைகளை வர்ணிக்கலாம்.
பிளிக்கரையே (Flickr) அறியாத இன்ஸ்டா தலைமுறைக்கு இந்த சேவைகளும், அவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட இணையதளங்களும் அறியப்படாததாக இருக்கலாம். ஆனால், நவீன இணையமும், அதன் சேவைகளும் இந்த தளங்களை மீது தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. இணையம் முழுவதும் வணிகமயமாகியிருக்கும் காலத்தில் தனிப்பட்ட இணையவாசிகளின் ஆர்வத்தை பிரதிபலித்த இந்த தளங்களை திரும்பி பார்ப்பதும், அவற்றை கொண்டாட வேண்டியதும் அவசியம். இந்த தளங்களை தேடி கண்டுபிடிப்பது அத்தனை எளிதல்ல (கூகுளில் இவற்றை தேட முடியாது), எனும் நிலையில், ஜியோசிட்டீஸ் கால தளங்களை தேடுவதற்காக என்றே, அல்டாவிஸ்டா பாணியில் ஓல்டவிஸ்டா (https://oldavista.com/ ) தேடியந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அல்டாவிஸ்டாவை அறியாதவர்கள், கூகுளுக்கு முந்தைய கூகுள் என்று இந்த பழைய தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
அந்த கால இணையதளங்களை, அந்த கால தேடியந்திரத்தில் தேட முடிவது ஒரு சுவாரஸ்யம் தானே. சுவாரஸ்யத்தை மீறி, பழைய இணையத்தின் பொக்கிஷ இணையதளங்களையும் இந்த தேடியந்திரம் வாயிலாக கண்டறியலாம்.
இணைய வரலாற்றை திரும்பிப்பார்ப்பதாக இருந்தாலும் சரி, இணைய வடிவமைப்பிற்கான ஊக்கம் பெற வேண்டும் என்றாலும் சரி, ஓல்ட்விஸ்டாவில் தேடிப்பார்க்கலாம். அந்த கால அல்டாவிஸ்டா போலவே வடிவமைப்பு கொண்டிருக்கும் இந்த தேடியந்திரம், ஜியோசீட்டிஸ் உள்ளிட்ட சேவைகள் மூலம் உருவாக்கப்பட்ட பழைய தளங்களை தேடித்தருகிறது.
தேடியந்திரம் என்பவை பிரதானமாக வலைவாசல்களாக இருந்த காலத்து அனுபவத்தை மறு உருவாக்கம் செய்திருக்கும் இந்த தளம், 1990 களில் மிதக்கச்செய்வதோடு, அந்த கால தனிப்பட்ட தளங்களை கண்டறியவும் வழி செய்கிறது.
தேடியந்திர முகவரி: https://oldavista.com/