தவளைக்கு தெரியும் கற்பூர வாசனை
பெயர் சொல்லை மொழிபெயர்க்க கூடாது என வாதிட மாட்டேன் என்றாலும், பெயர் சொல்லை மொழிபெயர்க்க தேவையில்லை எனும் கட்சியை ஆதரிக்க விரும்புகிறேன். இதற்கு பொருத்தமான உதாரணம் தேவை எனில், ’பாயில் தி பிராக்’ எனும் பெயரிலான இணையதளத்தை கூறலாம்.
இந்த தளத்தின் பெயரை நேரடியாக மொழி பெயர்ப்பு செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அது தவளையை பாடாக படுத்தும் செயலாக அமைந்துவிடும். எப்படியும், ’தவளையை கொதிக்க வைப்பது’ என்பது மனிதநேயமற்ற செயல் தானே.
ஆனால், இந்த தளம் தவளைக்கு எதிரானதும் அல்ல, தவளையை இம்சை செய்யும் தவறான கருத்தை கொண்டதும் அல்ல. உண்மையில் இசை மாற்றத்திற்கான பயணத்தை மேற்கொள்ள வழிகாட்டும் தளம் இது.
அதாவது, நாம் கேட்டு பழகிய இசை பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசைக்கு நம்மை அழைத்துச்செல்கிறது இந்த தளம். மெல்லிசைக்கு பழகிய ஒருவரை, திடிரென அதிர வைக்கும் பாப் இசை பாடல்களை கேட்க வைப்பது போல என வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், கரடு முராக தோன்றக்கூடிய இந்த பாதையை, மாற்றத்தின் சுவடு தெரியாத மென் பயண அனுபவமாக மாற்றித்தருவதாக இந்த தளம் சொல்கிறது. எப்படி எனில், இரண்டு வெவ்வேறு மேற்கத்திய இசை பாடகர்களை தேர்வு செய்து இந்த தளத்தில் உள்ளீடு செய்தால், அவர்களுக்கு இடையிலான பாடல்கள் பட்டியலை இந்த தளம் பரிந்துரைக்கிறது. ஒவ்வொரு பாடலாக கேட்கத்துவங்கினால், இரண்டாம் பாடகரின் இசையை சென்றடையலாம்.
நான் கேட்டு பழகிய அல்லது நமக்கு பிடித்தமான ஒரு இசை பாணியில் இருந்து இன்னொரு இசை பாணியை கண்டறிந்து சென்றடைவதற்கான இனிய பாதையாக இந்த இசைப்பயணம் அமையும்.
புதிய இசையை கண்டறிவதற்கான இணைய வழிகளில் சுவாரஸ்யமும் சாகசமும் நிறைந்த ஒன்றாக இது அமைகிறது.
பால் லாமரே என்பவர் இந்த புதுமையான இசை கண்டறிதல் சேவை உருவாக்கியிருக்கிறார்.- http://boilthefrog.playlistmachinery.com/
நிற்க, இந்த அருமையான தளத்திற்கும், அதன் விநோதமான பெயருக்கும் என்னத் தொடர்பு என கேட்கலாம். பாயில் த பிராக் எனும் சொற்றொடர், மாற்றத்தின் தாக்கத்தை உணர்த்தும் உருவகமாக பயன்படுத்தப்படுவதை அறிய முடிகிறது. இதன் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதையும் சொல்லப்படுகிறது.
ஒரு தவளையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்தால், முதலில் மென் சூட்டில் தவளை மகிழும் என்றும் ஆனால், போகப்போக தண்ணீரின் சூடு அதிகரித்து கொதி நிலை எட்டும் போது நொந்து வெந்து போகும் என்பதாக கதை அமைகிறது. மனிதர்களும் இது போல, மாற்றம் நிகழும் போது அதன் அறிகுறிகளை அறியமால் இருந்துவிட்டு பின்னர் தவிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
மாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த கதை சொல்லப்படுகிறது.
இணையத்தில் பிரபலமாக இருக்கும் இந்த உருவக கதையை, இசை மாற்றத்திற்கான இனிய அனுபவத்திற்கான இந்த தளம் பயன்படுத்திக்கொண்டுள்ளது.
சுவாரஸ்யமான இணையதளம் தான். ஆனால் இந்த தளத்தின் பெயர் காரணம் பின்னே ஒரு பிரச்சனை இருக்கிறது. தவளை தொடர்பாக சொல்லப்படும் இந்த கதை மனிதநேயத்திற்கு மட்டும் அல்ல அறிவியலுக்கும் புறம்பானது. தவளையை தண்ணீரில் வைத்து சூடாக்க துவங்கினால், அது மிதமான சூட்டை அனுபவித்துக்கொண்டிருக்காது. முதலிலேயே தப்பித்து போக பார்க்கும் என்கின்றனர். மாறாக நல்ல கொதி நிலை தண்ணீரில் போடப்பட்டால் அப்போதும் துள்ளி எழுந்து காயம்படவே செய்யும் என்கின்றனர்.
இப்போது இந்த பதிவின் தலைப்பிற்கான நோக்கம் புரிந்திருக்குமே. இந்த தளம் சுவாரயமாக இருந்தாலும், தவளை கதை உருவாக்கத்திற்கும் இந்த தளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், தவறான அறிவியல் தகவலை கொண்ட கதை இது என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
எனவே தவளையை வறுத்தெடுக்கவோ, கொதிக்க வைக்கவோ செய்யாதீர்கள்.
-