சாட்ஜிபிடிக்கு முன் ’இன்ஃபோ பாட்’ உருவானது!
ஒரு இணையதளத்தின் உண்மையான வடிவத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி பார்க்கலாம். அதற்கு முன் இன்ஃபோபாட் பற்றி பார்க்கலாம்.
பேசும் பென்பொருள்களான சாட்பாட்கள் வரலாற்றில் சாட்ஜிபிடி பெரும் பாய்ச்சலாக அறிமுகம் ஆகியிருக்கலாம். ஆனால் சாட்ஜிபிடிக்கு முன்னர் எண்ணற்ற சாட்பாட்கள் அறிமுகம் ஆகி, சாட்பாட்கள் வரலாற்றில் மைல்கற்களாகவும் விளங்கியிருக்கின்றன. உண்மையில் இந்த முன்னோடி சாட்பாட்களை படிகற்களாக கொண்டு தான் சாட்ஜிபிடி உருவானதாக கருதலாம்.
இப்படி சாட்ஜிபிடிக்கு முன்னர் உருவான மைல்கல் சாட்பாட்களில் ஒன்று இன்ஃபோ பாட் (infobot ). –https://en.wikipedia.org/wiki/Infobot
கொள்திறனிலும், ஆக்கத்திறனிலும் இன்ஃபோ பாட் வரம்புகள் கொண்டது என்றாலும், இப்போது திரும்பி பார்க்கையில் 1995 ல் இந்த பாட் அறிமுகமாகியிருப்பதை அறியும் போது அதன் அப்போதைய ஆற்றலை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
1995 இணையத்தை பொருத்தவரை மைல்கல் ஆண்டு. இணையத்தின் வடிவமான வலை வர்த்தக மயமான ஆண்டாகவும் அமைகிறது. நெட்ஸ்கேப் எனும் முன்னோடி பிரவுசருக்கு போட்டியாக எக்ஸ்பிளோரர் அறிமுக ஆன அண்டும் தான்.
அதோடு இன்றைய வாட்ஸ் அப் போன்ற மெசேஜிங் வகை சேவைகளுக்கு முன்னோடியாக அமையும் ஐ.ஆர்.சி எனும் இண்டெர்நெட் ரிலே சாட் வசதி பிரபலமாக இருந்தது. அந்த வகையில் சமூக ஊடக சேவைகளுக்கும் ஐ.ஆர்.சி முன்னோடி.
ஐ.ஆர்.சி என்பதை எளிதாக இணைய அரட்டை வசதி என புரிந்து கொள்ளலாம். அதில் உறுப்பினர்கள் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப சானல்களை உருவாக்கி கொள்ளலாம். சக உறுப்பினர்களோடு உரையாடலாம். கேள்விகள் கேட்கலாம். பின்னர் வந்து சேமித்து வைக்கப்பட்ட பதில்களை பார்க்கலாம்.
ஐஆர்.சி –யில் தான், இன்ஃபோ பாட் அறிமுகமானது. கார்னகி மெலான் பல்கலையைச் சேர்ந்த கெவின் லென்சோ, இந்த சாட்பாட்டை உருவாக்கினார். வெறும் வரி வடிவ சாட்பாட் தான் என்றாலும், மனிதர்கள் பேசுவதை இயற்கை மொழியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் அளிக்க கூடியது.
இந்த சாட்பாட், தகவல்களை தன்னிடம் சேமித்து வைத்துக்கொண்டு, அதற்கேற்ப பின்னர் கேள்விகள் கேட்கப்பட்டால், பொருத்தமான பதிலை சொல்லக்கூடியது. முதல் இன்ஃபோ பாட், இணைய முகவரிகளை சேமித்து கொண்டு, அது தொடர்பான சந்தேகங்கள் கேட்கப்படும் போது தொடர்புடைய சரியான இணைய முகவரியை சொல்லக்கூடியதாக அமைந்திருந்தது.
இந்த சாட்பாட் யூ.ஆர்.எல் எனும் பெயர் கொண்டிருந்தது.
கேட்ட கேள்வியையே பலரும் கேட்கும் போது மீண்டும் பதில் அளிப்பதை தவிர்க்கும் நோக்கத்துடனும் பின்னர் இன்ஃபோபாட்கள் உருவாக்கப்பட்டன. கெவின் லென்சோ, பெர்ல் மொழியில் உருவாக்கிய அடிப்படை குறியீடுகள் பின்னர் வந்த பாட்களுக்கு அடிப்படையாக அமைந்தது.
இன்ஃபோபாட் மிக சொற்பமான திறனே கொண்டிருந்தாலும், 1990 களில், இணையத்தில் சாட்பாட்டோடு உரையாடலாம், பதிலாக பயனுள்ள தகவல்களை பெறலாம் என்ற வகையில் முன்னோடியாக கொண்டாடப்பட வேண்டியது.
அதோடு சாட்ஜிபிடி பற்றி மிகை புகழ்ச்சியில் ஈடுபடும் போது அடக்கி வாசிக்க வேண்டிய தேவையையும் உணர்த்துவது.
இன்ஃபோபாட் தொடர்பான தகவல்களை அளிக்கும் இணைய சமூகமாக இன்ஃபோபாட்.ஆர்க் எனும் இணையதளம் செயல்பட்டு வந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த தளம் சில ஆண்டுகளுக்கு முன் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டு, இன்று இதே பெயரில் உள்ள இணையதளம் வெற்று விளம்பர இணைப்பு தளமாக இருக்கிறது. – பழைய உண்மையான இன்ஃபோபாட் தளத்தை இணைய காப்பகம் மூலம் தான் அணுக வேண்டும். https://web.archive.org/web/20040328182118/https://www.infobot.org/
-
சாட்ஜிபிடிக்கு முன்னர் ’சைபாட்’ இருந்தது தெரியுமா?