டிவிட்டரில் இன்றைய ஸ்பெஷல்

ஹோட்டலில் இன்றைய ஸ்பெஷல் என மெனு போடுவது போல, டிவிட்டரைப்பொருத்தவரை இப்போதைய ஸ்பெஷல் எவை என்பதை அறிய ஹாஷ்டேகுகள் உதவுகின்றன. இவை டிரெண்டிங் தலைப்புகளாக அறியப்படுகின்றன.

இதோ இந்த தருணத்தில் டிவிட்டர் பயனாளிகள் எந்த விஷயங்கள் தொடர்பாக அதிக குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் என்பதை, டிரெண்டிங் ஹாஷ்டேகுகள் வாயிலாக அறியலாம்.

ஏற்கனவே நடைபெற்று வரும் விவாதத்தில் பங்கேற்கவும், இப்போது பேசப்படும் விஷயங்களை தெரிந்து கொள்வதும், டிரெண்டிங் ஹாஷ்டேகுகள் மூலம் சாத்தியம்.

டிவிட்டர் டைம்லைனிலே இத்தகைய டிரெண்டிங் ஹாஷ்டேகுகளை பார்க்கலாம். ஆனால், டிரெண்டிங் தலைப்புகள் நாட்டிற்கு, நாடு, நகருக்கு நகர் மாறக்கூடியது என்பதால் இதற்கு இன்னும் விரிவான வசதி தேவை.

குளோபல்டிவிட்டர்டிரெண்ட்ஸ் (https://globaltwittertrends.com/ ) இத்தகைய விரிவான வசதியை அளித்து, டிவிட்டர் தொடர்பான உலகலாவிய டிரெண்டிங் தலைப்புகளை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.

தினந்தோறும் டிவிட்டரில் அதிகம் கவனிக்கப்படும் 50 முன்னணி தலைப்புகளை இந்த தளம் அடையாளம் காட்டுகிறது. இதன் முகப்பு பக்கத்தில் இந்த பட்டியலை காணலாம். எந்த தலைப்புகள் முன்னிலை வகிக்கின்றன என்பதையும், அவற்றுக்கான குறும்பதிவுகள் எணிக்கையையும் இதில் காணலாம். ஆங்கிலம் தவிர நமக்கு புரியாத பல மொழிகள் இந்த பட்டியலில் இருப்பது ஒரு கண் திறப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

இது தவிர, நாடுகளின் அடிப்படையில் டிரெண்டிங் தலைப்புகளையும் தனித்தனியே தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. மொத்தம் 62 நாட்கள் தொடர்பான தகவல்களை அறியலாம். நாடுகளில் குறிப்பிட்ட நகரங்கள் தொடர்பான தலைப்புகளையும் தனித்தனியே தேடலாம்.