ஆவணப்பட பரிந்துரைகளுக்கான இணையதளம்
ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க வழி செய்யும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. இத்தகைய இணையதளங்களுக்கான பரிந்துரை பட்டியல்களும் கூட பல இருக்கின்றன. இந்த பட்டியல்களில் ஒன்றில், கண்ணில் பட்ட நான்பிக்ஸ்(https://nonfics.com/ ) இணையதளம் தனித்து நிற்கிறது.
புனை கதைகளுக்கான ஆங்கில பெயரான நான்பிக்ஷனின் நீட்டிப்பாக ஆவணப்படங்களை குறிக்கும் வகையில் நான்பிக்ஸ் எனும் பெயர் கொண்ட இந்த தளம், அருமையான ஆவணப்படங்களை விமர்சன நோக்கில் பரிந்துரைக்கிறது.
சிறந்த ஆவணப்படங்களின் அறிமுகம், விமர்சனம் மற்றும் செய்திகள் ஆகியவை இந்த தளத்தில் இடம்பெறுகின்றன. இவைத்தவிர ஆவணப்பட முன்னோட்டங்களும் உண்டு.
ஆவணப்பட அறிமுகம், விமர்சனம் எல்லாமே கிரிஸ்டோபர் கேம்பல் ( Christopher Campbell) என்பவரால் எழுதப்பட்டவை. பிரபல திரைப்பட விமர்சகர் என்று சொல்லப்படுவது போல, கிரிஸ்டோபர் கேம்பல் பிரபல ஆவணப்பட விமர்சகர் என்பதை இணையதேடலில் அறிய முடிகிறது.
இந்த தளத்தில் இடம்பெறும் ஆவணப்படங்கள் கேம்பலின் தனிப்பட்ட தேர்வாக அமைவதோடு,அவருடைய தனிப்பட்ட பார்வை கொண்டதகாவும் விமர்சனங்கள் அமைகின்றன.
ஆனால் ஒன்று கேம்பலின் எழுத்து நடையே, மனிதர் விஷயம் தெரிந்தவர் என்பதை உணர்த்துவதோடு, அவர் பரிந்துரைக்கும் ஆவணப்படங்கள் பொருட்படுத்த தக்கவையாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றன.
உதாரணம் தேவை எனில், மெல்வின் வான் பீபில்ஸ் என்பவரின் ஆவணப்படம் பற்றிய அறிமுகத்தில், மெல்வின் வான் பீபில்ஸ் ஒரு மேதை: இது ஒரு தகவல், பாராட்டு அல்ல. இது பாராட்டு எனில், இந்த வாசகத்தின் முடிவில் நான் ஆச்சர்க்குறியை பயன்படுத்தியிருப்பேன்… என துவங்குகிறார் கேம்பல்.
இந்த அறிமுக வாசகத்தை படிக்கத்துவங்கியதுமே, மொத்த அறிமுகத்தையும் படிக்கத்தோன்றுகிறது. அப்படியே அந்த ஆவணப்படத்தையும் பார்க்கத்தோன்றுகிறது.
அறிமுகங்கள், விமர்சனங்கள் தவிர, நெட்பிளிக்ஸில் பார்க்க கூடிய சிறந்த ஆவணப்படங்கள் எனும் பரிந்துரையையும் கேம்பல் அடிக்கடி தருகிறார்.
ஆவணப்பட பிரியர்களை நிச்சயம் இந்த தளம் கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.