ஆவணப்பட களஞ்சியம்
நெட்பிளிக்சில் கூட, ஆவணப்படங்களை தான் அதிகம் பார்ப்பேன் என்று சொல்பவரா நீங்கள். எனில், ’கியூரியாசிட்டி ஸ்டிரீம்’ தளத்தை உங்கள் ஸ்டிரீமிங் சேவைகள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இது புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ஸ்டிரீமிங் சேவை என்றாலும், இன்னொரு ஸ்டிரீமிங் சேவை என ஒதுக்கி விடக்கூடியதல்ல. காரணம், இது முழுக்க முழுக்க ஆவணப்படங்களுக்கான ஸ்டிரீமிங் சேவை. அது மட்டும் அல்ல, இதை துவக்கியிருப்பது, டிஸ்கவரி சேனலின் நிறுவனரான ஜான் ஹெண்டிரிக்ஸ்.
சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற ஹெண்டிரிக்ஸ், ஆவணப்படங்களுக்கான இந்த பிரத்யேக ஸ்டிரீமிங் சேவையை துவக்கியிருக்கிறார்.
இந்த தளத்தில், 3,000 க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை பார்க்கலாம். தொழில்நுட்பம், அறிவியல், இயற்கை, நாகரீகம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளை ச்சேர்ந்த ஆவணப்படங்கள் பட்டியலில் உள்ளன. இந்த சேவைக்கான பிரத்யேக ஆவணப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் கட்டணச்சேவை. மாத கட்டணம் அல்லது ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு முன், இதில் உள்ள ஆவணப்படங்களை முன்னோட்டமாகவும் பார்த்துக்கொள்ளலாம்.
இணைய முகவரி:https://curiositystream.com/
-
கட்டணம் இல்லாமல் ஆவணப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான சில இணையதளங்கள்:
ஆவணப்பட சொர்கம்- https://documentaryheaven.com/
இணையத்தில் யூடியூப் உள்ளிட்ட பல இடங்களில் ஆவணப்படங்களை இலவசமாக பார்க்கலாம். இவற்றை எல்லாம் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? ’டாக்குமெண்ட்ரி ஹெவன்’, இணையதளம் இதை சாத்தியமாக்குகிறது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த தளம், இணையம் முழுவதிலும் இருந்து கவனமாக திரட்டப்பட்ட நல்ல ஆவணப்படங்களை பட்டியலிடுகிறது. தளத்தின் முகப்பு பக்கத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் முன்னிறுத்தப்படுவதோடு, ஆவணப்படங்களை பட்டியலாகவும் அணுகி தேர்வு செய்து கொள்ளலாம். முன்னணி 100 பட்டியலும் தனியே இருக்கிறது. 20 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆவணப்படங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆவணப்படத்தை தேர்வு செய்ததும், அதற்கான வீடியோவை இந்த தளத்திலேயே பார்க்கலாம். ஆவணப்படம் தொடர்பான விரிவான அறிமுக தகவல்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம். தொடர்புடைய ஆவணப்படங்கள் பரிந்துரைகளை பார்ப்பதோடு, நாம் ரசித்த ஆவணப்படம் தொடர்பான கருத்து பரிமாற்றத்திலும் ஈடுபடலாம்.
ஆவணப்படங்களை மதிப்பிடலாம். அதன் இணைப்பை சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து கொள்ளலாம். ஆவணப்படம் சரியாக இயங்கவில்லை எனில் அது குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.
விரும்பிய ஆவணப்படங்களை தேடும் வசதியும் இருக்கிறது.
-
ஆவணப்பட சூறாவளி - https://www.documentarystorm.com/
டாக்குமெண்ட்ரிஸ்ட்ராம் இணையதளமும், இணையத்தில் இருந்து நல்ல ஆவணப்படங்களை கவனமாக திரட்டி தொகுத்தளிக்கிறது. எல்லாமே முழு நீள ஆவணப்படங்கள். முகப்பு பக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் வரவேற்பதோடு, புதிய வருகை, அதிகம் பேசப்பட்டவை, அதிக மதிப்பீடு பெற்றவை ஆகிய தலைப்புகளிலும் ஆவணப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆவணப்படங்களை தேர்வு செய்ததும், அது தொடர்பான அறிமுக குறிப்பை வாசிக்கலாம். இந்த தளத்தில் இருந்து வெளியேறாமல் பார்த்து ரசிக்கலாம். சக ரசிகர்களுடன் விவாதித்து மகிழலாம்.
ஆவணப்படங்களை தேடும் வசதியும் இருக்கிறது. புதிய ஆவணப்படங்கள் தொடர்பான அறிவிப்பை, இமெயில் மூலமும் பெறும் வசதியும் அளிக்கப்படுகிறது.
-
மாற்றத்திற்கான படங்கள் - https://www.filmsforaction.org/
மேலே பார்த்த இரண்டு தளங்களும் கற்றல் நோக்கில் ஆவணப்படங்களை திரட்டுத்தருகின்றன என்றால், ’பிலிம்பார்ஆக்ஷன்’ தளம், சமூக மாற்றத்திற்கு வித்திடும் நோக்கில் ஆவணப்படங்களை தொகுத்தளிக்கிறது. பல்வேறு தலைப்புகளில் 4,000 க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களின் நூலகமாக இந்த தளம் திகழ்கிறது.
இதில் பட்டியலிடப்படும் படங்கள் பல வகையை சேர்ந்தவையாக இருந்தாலும், பார்ப்பவர்களை ஏதேனும் வகையில் செயல்பட தூண்டும் வகையிலான உள்ளட்டக்கத்தை கொண்டிருப்பது அவற்றுக்கான பொது அம்சங்களாகும்.
அதிகம் பார்க்கப்படும் படங்கள் உள்ளிட்ட பரிந்துரை பட்டியல் தவிர, தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான ஆவணப்படங்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.
தேடல் வசதியும் இருக்கிறது. ஆவணப்படம் தொடர்பான அறிமுக குறிப்பு மற்றும் விவாத வசதியும் இருக்கிறது.
ஆவணப்படங்கள் தொடர்பான கட்டுரைகளும் உள்ளன. உறுப்பினர்கள் தங்கள் பங்கிற்கும், ஆவணப்படம் தொடர்பான யோசனைகளை பரிந்துரைக்கலாம். உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் படங்கள் தனியே பட்டியலிடப்படுவதோடு, அதிக படங்களை பரிந்துரைக்கும் உறுப்பினர்களும் அடையாளம் காட்டப்படுகின்றனர்.
-