இப்படியும் பியானோ கற்றுக்கொள்ளலாம்!
கூகுளில் தகவல்களை தேடலாம். அப்படியே பியானோ வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம் என்றால் நம்ப முடிகிறதா? லேர்ன் ஜஸ்ட்.ஒன் (https://learnjust.one/ ) எனும் இணையதளம் இதற்கு வழிகாட்டுகிறது.
எப்படியும் பியானோ கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இப்படியும் பியானோ வாசிக்க கற்றுக்கொள்ளலாம் என சொல்வது போல, அமைக்கப்பட்டுள்ள இந்த தளம், பியானோ வாசிப்பில் ஒவ்வொரு படியாக முன்னேற உதவுகிறது.
இணையம் மூலம் பியானோ வாசிக்க கற்றுக்கொள்ளலாம் தான். இதற்கென பிரத்யேக இணையதளங்களும் இருக்கின்றன. ஆனால், இதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது, கொஞ்சம் விடாமுயற்சியும் தேவை. பியானோ வாசிப்பிற்கான அடிப்படைகளை தெரிந்து கொள்வதோடு, இடைவிடாத பயிற்சியும் செய்ய வேண்டும்.
எனவே, முழுவீச்சிலான பியானோ பயிற்சி தளங்கள் எல்லோருக்கும் ஏற்றவை என சொல்வதற்கில்லை. இந்த இடத்தில் தான், லேர்ன் ஜஸ்ட்.ஒன் பியானோ தளம் வருகிறது.
இந்த தளம், பியானோ வாசிப்பு கற்றலை மிகவும் எளிதாக்கி தருகிறது. இந்த விசையை அழுத்தினால் இந்த ஒலி வரும் என்பது போல, ஒவ்வொரு விசையாக பியானோ இசைக்குறிப்புகளை இதன் வாயிலாக கற்றுக்கொள்ளலாம்.
இப்படி ஒவ்வொரு படியாக முன்னேறுவதை இன்னும் சுவாரஸ்யமாக்கும் வகையில், இசைக்குறிப்பு பாடங்களை கூகுள் தேடலுடன் இணைத்துள்ளது. இதற்காக, உங்கள் பிரவுசரில் இந்த தளத்தை நிறுவிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
அதன் பிறகு எப்போது கூகுளில் தேட முற்பட்டாலும், கூகுள் தேடல் பக்கம் தோன்றுவதற்கு பதில் பியானோ வாசிப்பு தளம் தோன்றி, இசைக்குறிப்பு ஒன்றை முன்வைக்கும். எந்த ஒலிக்கான குறிப்பு என்பதை சரியாக உள்ளீடு செய்தால், கூகுளுக்கு முன்னேறலாம். இல்லை என்றாலும் பரவாயில்லை, அந்த இசைக்குறிப்புக்கான சரியான விளக்கம் அளிக்கப்பட்டு கூகுளுக்கு செல்ல வழிகாட்டுகிறது.
இப்படியாக, ஒவ்வொரு கூகுள் தேடலின் போதும், கொஞ்சம் பியானோ வாசிக்க கற்றுக்கொள்ளலாம். பியானோ வாசிப்பில் ஆர்வம் இருந்தால் நீங்களும் முயன்று பாருங்கள்!.
-
இணையம் மூலம் இசைக்கருவி வாசிப்பில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், கித்தார் வாங்க உதவும் இந்த பதிவு ஆர்வம் அளிக்கலாம்!
*
பியானோ சார்ந்து இன்னும் சில சுவாரஸ்யமான தளங்கள் இருக்கின்றன. அவற்றை ஒரு தொகுப்பாக பார்க்கலாம். அது மட்டும் அல்ல, இதே முறையில் புதிய மொழி கற்க உதவும் புதுமையான இணைய சேவைகளும் இருக்கின்றன. அவற்றையும் பார்க்கலாம்.