கித்தார் வாங்க வழிகாட்டும் இணையதளம்
இ-காமர்ஸ் தளம் என்றாலே விற்பனை தான் பிரதானம். ஆனால், கலார்ப்பூர்வமாக ஒரு இ-காமர்ஸ் தளம் இருக்க முடியுமா? இந்த கேள்விக்கு பதிலாக, விற்பனை நெடியே அடிக்காத இ-காமர்ஸ் தளமாக, ’வாட்கித்தார்ஷுட்ஐபை’ (https://www.whatguitarshouldibuy.com/ ) தளம் அமைகிறது.
கித்தார் வாங்க விரும்பும், இசை பிரியர்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளம் இது.
’நான் எந்த கித்தார் வாங்குவது?” எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் தேடியந்திர பாணியில் தளம் அமைந்துள்ளது. இந்த கேள்விக்கு பதில் தேட வழிகாட்டுவதில் தான் புதுமையான உத்தியை பின்பற்றியுள்ளனர்.
கித்தார் வாங்க விரும்புகிறவர்கள், தங்கள் ஆதர்ச இசை கலைஞர்கள் பயன்படுத்திய கித்தாரை இந்த தளத்தின் மூலம் வாங்கலாம். ஆனால், ஆதர்ச இசை கலைஞர்கள், எந்த கித்தாரை வைத்திருந்தனர் என்பதை அறிவது எப்படி? இதற்கான தகவலையும் இந்த தளத்திலேயே தேடலாம்.
ரசிகர்கள் தாங்கள் பின்பற்ற விரும்பும் இசை கலைஞர் பெயரை இந்த தளத்தில் தேடினால், குறிப்பிட்ட இந்த இசை கலைஞருக்கு இசையில் ஆர்வம் ஏற்பட்ட விதத்தை விவரிக்கும் சுருக்கமான இசை வரலாற்று குறிப்புடன், அவர் பயன்படுத்திய கித்தார் பற்றிய தகவலும் இடம்பெறுகிறது.
இந்த குறிப்பின் கீழ், அந்த கித்தாரை வாங்குவதற்கான வணிக விவரம் இடம்பெறுகிறது. மலிவானது, நடுத்தரம் மற்றும் அதிக விலை கொண்டது என மூன்று விதமான விலைகளில் கித்தார்கள் பட்டியலிடப்படுகிறது. அவை தொடர்பான மேலதிக விவரங்களும் இடம்பெற்றுள்ளன. விரும்பிய கித்தாரை வாங்கி கொள்ளலாம். தவிர, துணைப்பொருட்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றையும் வாங்கி கொள்ளலாம்.
இந்த தளம் மூலம் கித்தார் வாங்கினால், எங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்ற தகவலும் ஒளிவு மறைவில்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகப்பு பக்கத்தில் தேடல் வசதி தவிர, பிரசித்தி பெற்ற கித்தார் இசை கலைஞர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் கிளிக் செய்தால், தொடர்புடைய கலைஞரின் இசைக்குறிப்பு மற்றும் கித்தார் விவரத்தை பார்க்கலாம்.
தங்கள் அபிமான கலைஞர்கள் பற்றிய குறிப்புகளுடன், அவர்கள் பயன்படுத்திய கித்தார் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிவதே உற்சாகம் அளிக்கும். இப்படி இசைமயமான தகவலில் திளைத்தபடி, ரசிகர்கள் தங்களுகே ஏற்ற கித்தார் கருவியையும் வாங்கி கொள்ளலாம்.
கித்தார் வாங்குவதற்கான தளம் தான், ஆனால் அந்த அனுபவத்தையே தலைகீழாக மாற்றி அமைக்கும் கித்தார் களஞ்சியமாக அமைந்துள்ளது.
கித்தார் கலைஞரான ரைஸ் தாமஸ் (Rhys Thomas) என்பவர் இந்த தளத்தை அமைத்துள்ளார். இசையே தனது வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ள ரைஸ், கித்தார் மற்றும் கித்தார் இசை கலைஞர்கள் பற்றி தனக்கு அதிக ஞானம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில், கித்தார் கருவியை வாங்கிய போது, தனது அபிமான கலைஞர்கள் வாசிப்பது போல அதில் வாசிப்பது எப்படி எனத்தெரியாமல் குழும்பியதாகவும், அதன் விளைவாகவே சக கித்தார் இசை பிரியர்களுக்கு வழிகாட்டி இந்த தளத்தை அமைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்: https://www.producthunt.com/posts/what-guitar-should-i-buy
-
எல்லாம் சரி, நம்மூரில் நீங்கள் கித்தார் அல்லது வீணை வாங்க விரும்பினால் இந்த தளத்தை நாடலாம் : https://www.saptaswara.in/
-
தமிழில் இணைய சான்றிதழ் தயாரிக்க உதவும் இணையதளம்
கொரோனா உண்டாக்கிய லாக்டவுன் கட்டுப்பாட்டால், ஜூம் வழி கூட்டங்கள் மட்டும் அல்ல இணைய வழி பயிற்சி வகுப்புகளும் அதிகரித்துள்ளன. இணையம் வழி பயிற்சி நடத்துவதும், பங்கேற்பதும் எளிதாக இருக்கலாம். ஆனால், பயிற்சி சான்றிதழ் வழங்குவது எப்படி?
இதற்கு எளிய தீர்வாக, தமிழ் மென்பொருள் உலகில் துடிப்புடன் இயங்கி வரும் நீச்சல்காரன், மென்சான்றிதழ் செயலியை உருவாக்கியுள்ளார்.
வரைகலை அறிந்தவர்கள் மட்டும் அல்லாமல், யார் வேண்டுமானாலும் எளிதாக இணைய சான்றிதழை உருவாக்கி கொள்ள இந்த செயலி வழி செய்கிறது.
சான்றிதழுக்கான டெம்பிலேட் எனும் வார்ப்புரு மற்றும் பெயர் பட்டியலை கொடுத்தால் இந்த செயலி சான்றிதழை உருவாக்கித்தருகிறது. இதற்கான வழிகாட்டுதலும் எளிதாகவே உள்ளது.
இந்த தளத்தில் உள்ள வார்ப்புருவை தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது சொந்தமாக உருவாக்கிய வார்ப்புருவையும் சமர்பிக்கலாம்.
சான்றிதழ்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு வார்ப்புருவினை அடிப்படையாகக் கொண்டு சொற்களை மட்டும் மாற்ற வேண்டிய தேவையனைத்திற்கும் இச்செயலி உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://tech.neechalkaran.com/2020/05/online-ecertificate.html
-