வாசிப்பிற்கு ஒரு கால்குலேட்டர்!
புத்தக கால்குலேட்டர் (https://bookscalculator.com/), கொஞ்சம் சுவாரஸ்யமான இணையதளம். உங்களால் எத்தனை புத்தகம் படிக்க முடியும்? என்ற கேள்விக்கு இந்த தளம் பதில் அளிக்கிறது.
நாள்தோறும் குறிப்பிட்ட நிமிடங்களுக்கு, குறிப்பிட்ட வேகத்தில் படித்தால் ஒரு மாத காலத்தில் இருந்து ஓராண்டு வரை உங்களால் எத்தனை புத்தகங்களை படிக்க முடியும் என இந்த தளம் கணக்கு போட்டுச்சொல்கிறது. புத்தக எண்ணிக்கையோடு, அதை குறிக்கும் வகையில் புத்தகங்களின் அட்டை பக்கமும் தோன்றுகிறது.
இந்த வாசிப்பு கணக்கால் என்ன பயன் என்று தெரியவில்லை. அதோடு, கால்குலேட்டர் என பெயர் இருந்தாலும், வாசிப்பு கணக்கும் உத்தேசமானது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
இணைத்தில் இப்போது பெரும்பாலான செய்தி தளங்களில் குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரை எத்தனை நிமிடத்தில் வாசிக்க கூடியது என்பது உணர்த்தப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த கணக்கும் ஒரு அனுமானம் தான். எவரும் ஸ்டாப் வாட்சை வைத்துக்கொண்டு, 5 நிமிட வாசிப்பு என குறிப்பிடப்பட்ட கட்டுரையை 300 நொடிகளில் வாசித்து முடித்தோமா என பார்ப்பதாக தெரியவில்லை. இருப்பினும், ஒரு கட்டுரையை எவ்வளவு நேரத்தில் வாசிக்கலாம் எனத்தெரிந்து கொள்வது அதற்கான நேரத்தை தற்போது ஒதுக்க முடியுமா அல்லது பின்னர் வாசிக்கலாமா? என்பதை தீர்மானிக்க உதவும் என நம்பலாம்.
அதே போலவே இந்த தளமும், புத்தக வாசிப்பு தொடர்பான ஆர்வத்திற்கு மறைமுகமாகவேனும் உதவ வாய்ப்பிருக்கிறது. இந்த தளத்திலேயே, ஆயிரம் வார்த்தைகளை வாசிக்க எவ்வளவு நேரம் ஆகும்? 100 பக்கங்களை வாசிக்க எவ்வளவு நேரம் ஆகும்? என தெரிந்து கொள்ள உதவும் பகுதிகளும் இருக்கின்றன. பைபிள், குரான் உள்ளிட்ட புத்தகங்களை வாசிக்க தேவைப்படும் நேரம் பற்றிய பகுதியும் இருக்கிறது.
ஹாபிட்ஸ் கார்டன் (https://habitsgarden.com/) எனும் பழக்க வழக்க செயலியை உருவாக்கியுள்ள மார்க் என்பவர் அந்த தளத்திற்கான சுவாரஸ்யமான விளம்பர தளம் போல இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்.
-