இசைமயமான வீடியோ உரையாடலுக்கு உதவும் செயலி
இசைமயமான செயலிகள் வரிசையில் ஆம்ப்மீ (https://ampme.com/) செயலி அறிமுகம் செய்து கொள்ளும் போதே, அட! என வியக்க வைக்க கூடியது. அப்படி என்ன இருக்கிறது இந்த செயலியில் என்று கேட்கிறீர்களா? இந்த செயலி செல்போனை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் அவை அனைத்தையும் கூட்டு ஸ்பீக்கராக்கி, சேர்ந்திசை கேட்க வழி செய்கிறது.
தொழில்நுட்ப மொழியில் கூறுவது என்றால், இந்த செயலி போன்களை சின்க் (sync ) செய்கிறது. இவ்வாறு இணைக்கப்பட்ட போன்களில் ஒரே நேரத்தில், ஒரே இசையை கேட்க ச்செய்யலாம். இப்படி பல போன்கள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் இசையை நல்ல ஒலியில் கேட்கலாம்.
இதை நடமாடும் ஒலி அமைப்பை உருவாக்குவது என இந்த செயலி குறிப்பிடுகிறது.
விருந்து நிகழ்ச்சி போன்றவற்றில் நண்பர்கள், தங்கள் போன்களை இசையமயமாக ஒருங்கிணைத்து விரும்பிய பாடலை ஒலிக்கச்செய்யலாம். அது மட்டுமா, இந்த செயலியில் மற்றவர்களை பின் தொடரும் வசதியும் இருக்கிறது. எனவே, இசைப்பிரியர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள இந்த செயலியை சமுக வலைப்பின்னல் செயலியாக பயன்படுத்தலாம். இந்த செயலியில் இருந்தே அரட்டையும் அடிக்கலாம்.
இப்போது இந்த செயலி வீடியோ உரையாடல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா சூழலில், சமூக விலகலை கடைப்படிக்க வேண்டியிருப்பதால், பலரும் ஜூம் அல்லது பேஸ்டைம் போன்ற செயலிகள் மூலம் வீடியோம் உரையாடுகின்றனர்.
இப்படி வீடியோவில் உரையாடும் போது பின்னணியில் விரும்பிய இசை கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இதை தான் ஆம்ப்மீயின் புதிய வசதி சாத்தியமாக்குகிறது.
இப்போது புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் வீடியோ உரையாடல் வசதி மூலம், நண்பர்கள் பாடல்களை ஒலிக்கச்செய்து கேட்டபடி உரையாடி மகிழலாம்.