எதிர் வானிலை அறிய உதவும் தளம்
இப்போது நாம் பார்க்க போகும் இணையதளம் எந்த அளவு நடைமுறையில் பயனுள்ளது எனத்தெரியவில்லை. ஆனால், சுவாரஸ்யமானது என்பதில் சந்தேகமில்லை. இந்த தளம், எதிர் வானிலையை அறிய உதவுகிறது.
பொதுவாக, நாம் இருக்கும் இடத்தின் வானிலையை தானே அறிய முயற்சிப்போம். இந்த தளம், இதற்கு நேர் எதிராக செயல்படுகிறது. அதாவது, நாமிருக்கும் இடத்திற்கு எதிர் திசையில், பூமியின் மறுமுனையில் உள்ள இடத்தின் வானிலையை அறிய வழி செய்கிறது.
உதாரணமாக, சென்னையை இடமாக கொண்டு இந்த தளத்தில் தேடினால், மறுமுனையில் உள்ள பசுபிக் சமுத்திர வானிலையை சொல்கிறது.
இந்த தளமே, உலகின் எதிர் எதிர் முனைகளில் உள்ள இடங்களின் வானிலையையும் பட்டியலிடுகிறது. உதாரணமாக, தென் துருவம்- வட துருவம் வானிலையை அறியலாம். ஷாங்காய்க்கு எதிரே உள்ள சால்டோவின் வானிலையை அறியலாம்.
இந்த தளத்தின் இப்படி தேடக்கூடிய இடங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் என்ன விஷேசம் என்றால், இதற்கு முன்னர் நாம் பார்த்த, இணைய பட்டியல் தளத்தை உருவாக்கிய பென்னட் ஃபீலே என்பவரின் இன்னொரு படைப்பு இதுவாகும்.
தவிர, எப்போதும் மாற்றுக்கருத்து அல்லது எதிர் முனையில் இருப்பவரின் கருத்தை அறிய வேண்டும் என சொல்லப்படுவதை நினைவுபடுத்துவதாக அமைகிறது அல்லவா!
மாற்றுக்கருத்து என்று வரும் போது, இன்னொரு சுவாரஸ்யமான இணையதளமும் கண்ணில் பட்டது. - https://www.opposingviews.com/
அப்போசிங் வியூச் எனும் இந்த தளம், செய்தி உலகம் சார்பு நிலை மற்றும் உள்நோக்கம் மிக்கதாக மாறிவிட்ட நிலையில், நடுநிலையான செய்திகளை அளிப்பதாக கூறுகிறது. நடுநிலை செய்திகள் என்பது இதழியலில் தேய்வழக்கு தான் என்றாலும், இந்த தளம், எதிர் கருத்து என்பதை தலைப்பில் வைத்துக்கொண்டு சார்பில்லா செய்திகளை வழங்குவதாக சொல்கிறது. எந்த அளவு உண்மை என பரிசீலித்துக்கொள்ளலாம்.