பட்டியல்களுக்கான இணையதளம்
பட்டியல்களில் பல ரகங்கள் இருக்கின்றன. தமிழ் இலக்கிய உலகில் பட்டியல் போடுவதை ஒரு அளவுகோளாகவே வைத்திருக்கின்றனர். ஊடக உலகிலும், இணைய உலகிலும் கூட பலவித பட்டியல்கள் இருக்கின்றன. பொதுவாக பட்டியல்கள் வழிகாட்டும் நோக்கம் கொண்டவை.
இப்போது நாம் பார்க்க உள்ள இணையதளமும் பட்டியல் சார்ந்தது தான். ஆனால், மேலே சொன்ன வகை பட்டியல்கள் அல்ல: சர்ச்சைக்கு இடமில்லாத, பயன்பாடு சார்ந்த பட்டியல்களை பட்டியல் போடும் தளம் இது: https://copypastelist.com/
உலகில் மொத்தம் எத்தனை நாடுகள் இருக்கின்றன தெரியுமா? அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன? எழுத்தாளர் ஹெமிங்வே எத்தனை நாவல்கள் எழுதியிருக்கிறார்? மொத்த கோள்கள் எத்தனை?
இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தீர்மானமான பதில்கள் இருக்கின்றன. இத்தகைய பட்டியல்களை தான் இந்த தளம் கொண்டிருக்கிறது. பொருளாதாரம், மொழி, பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்நுட்பம் என பல்வேறு தலைப்புகளில், பட்டியல்கள் இடம்பெறுகின்றன.
இது போன்ற பட்டியல்களை இணையத்தில் அங்கும் இங்கும் பல இடங்களில் காணலாம் என்றாலும், அவற்றை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கும் வகையில் இந்த தளம் செயல்படுகிறது. அது மட்டும் அல்ல, பட்டியல்களை எளிதாக பயன்படுத்த வழி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
அதாவது இதில் உள்ள பட்டியலை அப்படியே நகலெடுத்து பயன்படுத்தலாம். அவற்றை தனியே பார்மட் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் இணையம் அல்லது வேறு கோப்புகளிலும் எளிதாக பயன்படுத்தலாம்.
பட்டியல்களை தேடும் வசதியும் இருக்கிறது. அதிகம் தேடப்படும் பட்டியல்களும் தனியே வகைப்படுத்தப்படுகின்றன. எல்லாவிதமான பட்டியல்களும் இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால், இல்லாத பட்டியலை நீங்களும் சமர்பிக்கலாம்.
-