பேசுங்கள், பதிவு செய்யுங்கள், பகிருங்கள் இணையதளம்!
நீங்கள் விரும்பினால், இப்போது முழு வீச்சிலான இணைய வானொலியே நடத்தலாம். ’ஆன்கர்.எப்.எம்’ போன்ற பாட்காஸ்டிங் சேவைகள் இதற்கு கைகொடுக்கின்றன.
ஆனால், நாம் இப்போது பாட்காஸ்டிங் பற்றி பார்க்க போவதில்லை. மாறாக, மிக மிக எளிதான இணைய குரல் பதிவு சேவை வோகரூ (https://vocaroo.com/) பற்றி பார்க்கலாம். நாம் ஏற்கனவே பார்த்த ’வோகல்பேர்டு’ சேவையை போல, வோகரூ, பிரவுசரில் இருந்தே, ஒலி வடிவில் செய்திகளை பதிவு செய்ய உதவுகிறது. https://cybersimman.substack.com/p/message-18
இந்த தளத்தில் உள்ள ஒலிபெருக்கி வசதியை இயக்கி, நாம் பகிர விரும்பும் கருத்துக்களை பேசி பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் இந்த ஆடியோ கோப்பை இமெயில் அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம். தேவை எனில், கம்ப்யூட்டரிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாம் பேசிய பிறகு, பேச்சு சரியாக பதிவாகி இருக்கிறதா என சரி பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த சேவையை பயன்படுத்த உறுப்பினராக பதிவு செய்து கொள்ளும் அவசியம் இல்லை. நேரடியாக பயன்படுத்தலாம்.
வோகரூ, பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சேவை. இந்த ஆடியோ பதிவு வசதியை பலவிதங்களில் பயன்படுத்தலாம். குறிப்பாக, காட்சி விளக்கம் மற்றும் வகுப்புகளில் பாடம் நடத்தும் போது இடையே ஆடியோ குறிப்புகளை வழங்க இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது, நாம் ஒலிப்பதிவு செய்த குறிப்புகளை கியூஆர் கோடு வடிவிலும் தரவிறக்கு பகிரும் வசதி இருக்கிறது.
வாய்ஸ் மெசேஜ் போன்ற வசதி எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். நம்மிடம் உள்ள ஆடியோ கோப்புகளையும் இந்த தளத்தில் பதிவேற்றி அவற்றை பகிர்வதற்கான இணைப்பை பெறலாம். ஆனால், கவனம் காப்புரிமை கொண்டவற்றை இவ்வாறு பதிவேற்ற வேண்டாம்.
-
ஒருவரும் பார்க்காத காணொலிகள்
டாப் டென்கள், அதிகம் பார்க்கப்பட்டவை, அதிகம் பகிரப்பட்டவை, வைரலாக பரவியவை… இணையத்தில் இப்படி பட்டவை தான் நம் கவனத்தை ஈர்க்கின்றன. யூடியூப்பை எடுத்துக்கொண்டாலும், கோடி முறை பார்க்கப்பட்ட, லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் கொண்ட சேனல்களின் வீடியோக்கள் தான் நமக்காக முன்னிறுத்தப்படுகின்றன. இத்தகைய டிரெண்டிங் மோகத்தில் இருந்து ஆசுவாசம் அளிக்கும் வகையில், அஸ்ட்ரோநாட்.இயோ எனும் வீடியோ பரிந்துரை தளம் அமைந்துள்ளது.
இந்த தளமும், யூடியூப் வீடியோக்களை தான் பார்க்க வழி செய்கிறது என்றாலும், எல்லாமே ஒருவருமே பார்க்காத வீடியோக்கள். ஆம், சூடாக பதிவேற்றப்பட்டு, ஒரு சில பார்வையாளர்களை கூட இன்னும் பெறாத வீடியோக்களை தேர்ந்தெடுத்து பார்க்க வைக்கிறது இந்த தளம்.
ஹிட்களை அள்ளுவதை நோக்கமாக கொண்டிராத, அதிக செய்நேர்த்தியோ, செயற்கை தன்மையோ இல்லாத, அப்பாவித்தனமாக எடுக்கப்பட்ட வீடியோக்களை இந்த தளத்தில் வரிசையாக பார்க்கலாம்.
இணைய முகவரி: http://astronaut.io/
-
கடைக்கோடி தளங்களை தேட…
தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் நினைவுக்கு வரும். கூகுளில் தேடினாலும் கூட, முதலில் முன்வைக்கப்படும் முடிவுகளே நமக்கு போதுமானதாக இருக்கிறது. எனவே, பெரும்பாலானோர் முதல் பக்க முடிவுகளை தாண்டி செல்வதில்லை. வெகு சிலர் முதல் சில பக்க முடிவுகளை பரிசீலிக்கலாம்.
ஆனால், கூகுள் ஒவ்வொரு தேடலுக்கும் லட்சக்கணக்கான பக்கங்களை கொண்டு வந்து கொட்டுகிறதே. இந்த கடைக்கோடி பக்கங்களில் எல்லாம் என்ன இருக்கிறது என பார்க்க தோன்றுகிறது சொல்லுங்கள்.
அப்படியே விரும்பினாலும், தேடல் பட்டியலில் லட்சக்கணக்கில் பின்னே இருக்கும் முடிவுகளை எப்படி பார்ப்பது என கேட்கலாம். மனம் இருந்தால் மார்கம் உண்டு என்பது போல, தேடல் பட்டியலில் பின்னே இருக்கும் முடிவுகளை பார்ப்பதற்கு என்ரே ஒரு தேடியந்திரம் இருக்கிறது.
மில்லியன் ஷார்ட் என்பது அந்த தேடியந்திரத்தின் பெயர். இந்த தேடியந்திரத்தில் தகவல்களை தேடும் போது, முதல் ஆயிரம் பக்கங்கள் தவிர, முதல் பத்தாயிரம் பக்கங்கள் தவிர, முதல் லட்சம் பக்கங்கள் தவிர என முதலில் உள்ள முடிவுகளை எல்லாம் தள்ளிவிட்டு, அதற்கு பின் இருக்கும் தேடல் முடிவுகளை பார்க்கலாம்.
அதே நேரத்தில்,முதலில் தவிர்க்கப்பட்ட முடிவுகளில் உள்ள முக்கிய தளங்களையும் அருகே பட்டியல் போட்டுக்காட்டுகிறது.
தேடல் அனுபவத்தை மாற்றி அமைக்க கூடிய இந்த தேடியந்திரத்தை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்: https://millionshort.com/
-