ஆடியோ செய்திகளை ஒலிப்பதிவு செய்ய
வாட்ஸ் அப் போன்ற மேசேஜிங் சேவையில், ஆடியோ செய்திகளை எளிதாக ஒலிப்பதிவு செய்து பகிர்ந்து கொள்ளலாம். இதே போன்ற வசதியை இணையத்தில் உலாவும் போது பிரவுசரில் இருந்தே செய்து கொள்ள வழி செய்கிறது ’வோகல்பேர்ட்’ (https://vocalbird.io/).
குரோப் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக உருவாக்கப்பட்டுள்ள இதை டவுண்லோடு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, எந்த ஒரு இணையதளத்தை பயன்படுத்தும் போதும், அது தொடர்பான கருத்துகளை ஆடியோ செய்தியாக பகிர்ந்து கொள்ள விரும்பினால், பிரவுசரில் உள்ள வோகல்பேர்ட் நீட்டிப்பு சேவையை கிளிக் செய்து ஒலிப்பதிவு செய்ய வேண்டும். இதற்கு, இதில் இலவச பயணர் கணக்கையும் உருவாக்கி கொள்ள வேண்டும்.
இந்த ஒலிப்பதிவுக்காக ஒரு இணைய முகவரி உருவாக்கி தரப்படும். அந்த இணைய முகவரியை பகிர்வதன் மூலம் எந்த இடத்திலும், ஆடியோ செய்தியை பகிர்ந்து கொள்ளலாம்.
வாட்ஸ் அப் போலவே, ஸ்லேக் மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் போன்ற மேசேஜிங் சேவைகள் இருக்கின்றன. வாட்ஸ் அப் வெகுஜனங்களுக்கான மெசேஜிங் சேவை என்றால், ஸ்லேக்கும், மைக்ரோசாப்ட் டீம்சும் தொழில்முறை பயனாளிகளுக்கான மெசேஜிங் சேவை.
ஆனால், இந்த சேவைகளில் வாட்ஸ் அப்பில் உள்ளது போல, ஆடியோ செய்தி பதிவு வசதி இல்லை. இந்த குறையை போக்கும் வகையில் தான் வோகல்பேர்டு சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குரல் பதிவுகளை உருவாக்கி, ஸ்லேக் அல்லது வேறு எந்த சேவையில் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.
பிரதானமாக வரி வடிவம் சார்ந்ததாக இருந்த இணைய பரிவர்த்தனை இப்போது, முழு வீச்சில் பல் ஊடக தன்மை பெற்று வருகிறது. அந்த வகையில், பல இடங்களில் நமக்கு, வீடியோ மற்றும் ஆடியோ வசதியும் தேவைப்படுகிறது.
இந்த இடத்தில் தான் வோகல்பேர்டு சேவை கச்சிதமாக பொருந்துகிறது. இதன் மூலம், உங்கள் கருத்துக்களை எளிதாக குரல் பதிவாக பகிரலாம்.
தொலைபேசி அழைப்பின் தன்மையையும் இது கொண்டிருக்கும். அதே நேரத்தில் கருத்துகளை டைப் செய்ய வேண்டிய தேவையும் இருக்காது. ஆனால் உரையாடலுக்கு வழி வகுக்கும் என்று இந்த சேவை பற்றி வோகல்பேர்டு குறிப்பிடுகிறது.
கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி டைப் செய்யும் போது தனிப்பட்ட குறிப்புகளை பதிவு செய்யவும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
இலவச மற்றும் கட்டண வசதிகள் இருக்கின்றன.
-