புத்தகங்களை மதிப்பிட உதவும் தளம்

உன்னைப்போல எத்தனை பேரை பார்த்திருக்கிறேன் என இளவட்டத்தை பார்த்து சொல்லும் அனுபவசாலி போல, இது போன்ற எத்தனை புத்தக மதிப்பீடு- பரிந்துரை தளங்களை பார்த்திருக்கிறோம் என சொல்ல வைக்கிறது மைபுக்ரேட்டிங்ஸ்.காம் (https://mybooksrating.com/ ) .

புத்தகங்களை மதிப்பீடு செய்யவும், அதன் மூலம் புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ளவும் வழி செய்கிறது இந்த தளம். இதில் உறுப்பினரானவுடன், பயனாளிகள் தாங்கள் படித்த புத்தகங்களை குறிப்பிட்டு அவற்றை 1 முதல் 100 வரை மதிப்பெண் கொடுத்து மதிப்பிடலாம். ( விமர்சனம் அல்ல) . அதோடு, தங்களுக்கான டிஜிட்டல் புத்தக அலமாரியையும் உருவாக்கி கொள்ளலாம்.

வாசகர்கள் மதிப்பீடு செய்த புத்தகங்கள் அடிப்படையில், அவர்கள் வாசிப்பதற்கான புதிய புத்தகங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

வாசகர்கள் மதிப்பீடு செய்த புத்தகங்களையும் பார்க்கலாம். இந்த வார மதிப்பீடு, இந்த மாத மதிப்பீடு போன்ற பட்டியல்களும் இருக்கின்றன. புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள இவை எல்லாம் சுவாரஸ்யமான வழிகள்.

எந்த புத்தகத்தை கிளிக் செய்தாலும், சுருக்கமான அறிமுகத்தோடு. அந்த புத்தகத்தை வாசிப்பு பட்டியலில் வைத்திருக்கும் மற்றும் புத்தக அலமாரியில் சேர்க்கும் வசதி இருக்கிறது. புத்தகங்களை அமேசான் மூலம் வாங்கவும் செய்யலாம்.

வாசித்த புத்தகங்களை பட்டியலிட்டு, வாசிப்பதற்கான புத்தகங்கள் பரிந்துரையை பெறுவது உள்ளிட்ட அம்சங்களை கொண்ட அருமையான புத்தக பரிந்துரை தளங்கள் பல இருக்கின்றன. அவற்றில் ஒரு சின்ன மாற்றத்துடன், புத்தகங்களை மதிப்பீடு செய்வதன் மூலம் புத்தக பிரியர்களை கவர்ந்திழுக்க இந்த தளம் முயற்சிக்கிறது.