உங்கள் வாழ்க்கையை மாற்றும் இணையதளம்.
வாழ்க்கையை மாற்றக்கூடிய கேள்விகளை வாரந்தோறும் உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும் நோக்கத்துடன் தரமான கேள்விகள் என பொருள்படும் குவாலிட்டி குவஸ்டீன்ஸ் (https://qualityquestions.co/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இது இணையதளம் இல்லை, இணைய செய்திமடல் சேவை.
உங்கள் வாழ்க்கைக்கான ஊக்கத்தை அளிக்க கூடிய தகவல்களை அனுப்பி வைப்பதை இந்த செய்திமடல் சேவை நோக்கமாக கொண்டுள்ளது. அதாவது, சுயமுன்னேற்றம் தொடர்பான புத்தகங்களில் இருந்தும், கட்டுரைகளில் இருந்தும் வாழ்க்கைக்கான ஞானத்தை தேடி எடுத்து அனுப்பி வைக்கிறது.
தேடி எடுத்து தேர்வு செய்த சுயமுன்னேற்ற தகவல்களை இமெயிலில் அனுப்பி வைப்பது வழக்கமான சேவை தான். ஆனால், குவாலிட்டி குவஸ்டீன்ஸ் தளம், இதில் ஒரு சின்ன புதுமையை புகுத்தி, உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய கேள்விகளோடு சுயமுன்னேற்ற கட்டுரைகளை அனுப்பி வைக்கிறது.
அதாவது வாழ்க்கை பாடங்களாக அமையக்கூடிய அருமையான கட்டுரைகளையும், தகவல்களையும் அனுப்புவதோடு, அவற்றை உங்கள் வாழ்க்கையில் பொருத்தி பார்க்க கூடிய கேள்வியையும் உடன் அனுப்பி வைக்கிறது. இந்த கேள்வி வாயிலாக சுயமுன்னேற்ற வழிகாட்டுதல்களை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தி பார்க்கவும் தூண்டுகோளாக அமைகிறது.
படித்தோம், மறந்தோம் என்றில்லாமல், படித்தவற்றை கொண்டு பயன்பெறும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளதாக கருதலாம்.
படித்தால் மட்டும் போதுமா? என்று கேட்பது போல, சுயமுன்னேற்ற புத்தகங்களை படித்து விட்டு அதன் கருத்துகளை மறந்துவிடாமல் இருப்பதற்காக, உண்மையான மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த செய்திமடல் சேவையை உருவாக்கியிருப்பதாக இதன் அறிமுக பக்கத்தில் ஜஸ்டின் கிரே மற்றும் ஆண்ட்ரூ மெஹ்ரா தெரிவித்துள்ளனர்.
நீங்களும் முயற்சித்து பாருங்கள். வாழ்க்கையை மாற்றக்கூடிய கேள்விகள் என்பது சுவாரஸ்யமான வழி தான். இந்த கேள்விகள் உண்மையிலேயே வலிமையாக இருக்கின்றனவா என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
தொடர்புடைய முந்தைய பதிவு: https://cybersimman.substack.com/p/--66f