இணையம் மூலம் சம்பாதிக்கும் வழிகளை பட்டியலிடும் இணையதளம்
இணையம் மூலம் சம்பாதிப்பது எப்படி எனும் கேள்வி பலருக்கு உண்டு. இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பதிவு எழுதி அல்லது வீடியோ விளக்கம் அளித்து சம்பாதிப்பவர்களும் அநேகம் பேர் இருக்கின்றனர். இந்த வழிகாட்டி விளக்கங்களை பார்த்து மட்டுமே இணையம் மூலம் சம்பாதிக்க முடியுமா எனத்தெரியவில்லை.
இணையத்தில் சம்பாதிக்க விரும்புகிறவர்கள் முதலில், இதற்கென இணையத்தில் இருக்கும் வழிகளை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. அதன் பிறகு அந்த வழிகளில் எது தங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என தீர்மானிக்கலாம். அதற்கும் பிறகு, அந்த வழியில் சம்பாதிப்பதற்கான வழி தேட வேண்டும்.
அந்த வகையில், இணையம் மூலம் சம்பாதிப்பதற்கான வழிகளை பட்டியல் போட்டு அடையாளம் காட்டுகிறது ’மாடர்ன்டேஜாப்ஸ்’ (https://moderndayjobs.com/ ) இணையதளம்.
காலம் மாறுவதற்கு ஏற்ப, சம்பாதிப்பதற்கான வழிகளும் மாற வேண்டும் என குறிப்பிடும் இந்த தளம், இதற்காக என்றே இணையம் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பை அளிக்கும் நூறுக்கும் மேற்பட்ட வழிகளை பட்டியலாக அளிப்பதாகவும் தெரிவிக்கிறது.
முகப்பு பக்கத்தில் உள்ள இந்த விளக்கத்திற்கு கீழ், இணைய வேலைவாய்ப்புகளின் பட்டியலை பார்க்கலாம். வேலைவாய்ப்பு விவரம், அதன் தன்மை ஆகியவற்றை சுருக்கமாக தெரிந்து கொண்டு, தொடர்புடைய இணையதளத்தை அணுகும் வகையில் பட்டியல் அமைந்துள்ளது.
இணைய சர்வேக்கள் துவங்கி, மெய்நிகர் உதவியாளர், செயலி சோதனையாளர் என பலவிதமான இணைய வேலைவாய்ப்புகளை இந்த தளத்தில் பார்க்கலாம். ஆனால் எல்லாமே மைக்ரோ வேலைவாய்ப்புகள். அதாவது அள்ளித்தருபவை அல்ல, கிள்ளித்தருபவை. அதிக அனுபவம் இல்லாமல் செய்யலாம். பகுதிநேரத்திலும் செய்யக்கூடியவை.
இணையத்தில் சம்பாதிக்க என்ன வகையான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள இந்த தளம் நிச்சயம் உதவும். சர்வதேச அளவிலானது என்பதால், இந்திய அளவில் இப்படி ஒரு இணையதளத்தை யாரேனும் உருவாக்கினால் நன்றாக இருக்கும்.
பி.கு: நாம் ஏற்கனவே பார்த்த கொரோனா பிராமிசஸ் இணையதளத்தை உருவாக்கிய கான்ஸ்டியன் தான் இந்த தளத்தையும் உருவாக்கி இருக்கிறார். டிவிட்டரில் பார்த்த ஒரு சரடு தான் இதற்கு ஊக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.