இந்தியாவை காண ஒரு செயலி
இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சேட்டை எல்லாம் கொஞ்சம் தள்ளி வையுங்கள், இந்தியாவுக்காக, இந்தியர்களுக்காக என்று ஒரு புகைப்பட பகிர்வு செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. அதில் இந்திய காட்சிகளை பகிர்வோம். காட்சிகள் வழி இந்தியாவை காண்போம்.
இந்தியா ஐஸ் ( https://indiaeyes.glideapp.io/) எனும் பெயரிலான அந்த செயலி மிகவும் எளிமையானது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சமகால இந்தியாவை ஸ்மார்ட்போனில் படம் பிடித்து இந்த செயலி வாயிலாக பகிர்ந்து கொள்ள வேண்டியது தான். இப்படி மற்றவர்கள் பகிர்ந்து கொண்ட இந்தியாவின் காட்சிகளை இந்த செயலியில் வரிசையாக பார்க்கலாம்.
வேறு எந்த அம்சங்களும் இந்த செயலியில் கிடையாது. பில்டர் அலங்காரங்கள், டேக் செய்யும் அம்சம் என எதுவும் கிடையாது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டுமே இதில் பார்க்கலாம்.
செளமியா ராவ் ( https://www.producthunt.com/@legaljargon) என்பவர் இந்த செயலியை உருவாக்கியிருக்கிறார். நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்த செயலியை உருவாக்கியதாக அவர் பிராடக்ட் ஹண்ட் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா சூழலில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜன்னல் வழி காட்சிகளை காண வழி செய்யும் விண்டோ-ஸ்வேப் தளத்தை பார்த்து ஊக்கம் பெற்று இந்த செயலியை உருவாக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த செயலிக்கான எண்ணத்தை அசை போட்டபடி, தூங்காமல் இருந்தாலும், கூகுள் கிளைடு சேவை உதவியோடு ஒரு வரி கூட கோடிங் செய்யாமல் இதை உருவாக்கியிருக்கிறார். நீங்களும் முயற்சிக்கலாம்.