கூகுள் இல்லாத இணையம்!
பேஸ்புக்கை விமர்சிக்கும் போது, கூகுளையும் சேர்த்தே வறுத்தெடுக்க வேண்டும். இரண்டும் இணைய பெரிய நிறுவனங்கள் என்பது மட்டும் அல்ல, பிரைவசி என்று வரும் போது பயனாளிகள் உரிமையை கிள்ளுக்கீரையாக கருதுபவை இவை இரண்டும்.
பயனாளிகள் தகவல்களை சேகரிக்கிறது, அந்த தகவல்களை வர்த்தக நோக்கில் பயன்படுத்தி பயனாளிகளை குறி வைக்கும் இலக்கு விளம்பரங்களை வெளியிடுகிறது என்பது பேஸ்புக் மீதான விமர்சனத்தின் மையக்கருத்து.
இந்த விமர்சனம் கூகுளுக்கும் பொருந்தும். கூகுள், இணையவாசிகளின் ஒவ்வொரு தேடல் சுவடுகளையும் பின் தொடர்ந்து அதற்கேற்ப தேடல் முடிவுகளை அளிக்கிறது. எனவே தான், இணைய உலகில் பயனாளிகளை பின் தொடராத தேடியந்திரங்கள் தேவை எனும் கருத்து வலுப்பேற்று வருகிறது. டக்டக்கோவை இதன் துவக்கப்புள்ளியாக கருதலாம்.
கூகுள் தனது தேடியந்திரம் மூலம் மட்டும் அல்ல, குரோம், ஆண்ட்ராய்டு, கூகுள் மேப்ஸ் என, ஜிமெயில் என தனது பெரும்பாலும் இலவச துணை சேவைகள் மூலம் பயனாளிகள் தரவுகளை திரட்டித்தொகுத்து விளம்பர நோக்கில் பயன்படுத்துகிறது.
பயனாளிகளுக்கு ஏற்ற தனிப்பட்ட ஆனால் அவர்கள் தனியுரிமையை மீறாத தேடல் அனுபவத்தை அளிக்க இந்த செயல்முறையை பின்பற்றுவதாக கூகுள் தரப்பு விளக்கம் அமைகிறது.
ஆனாலும் கூட கூகுளின் தரவுகள் சேகரிப்பு வலை ஆழமானது.
இந்த பின்னணியில் தான் பேஸ்புக்கை பிரைவசி நோக்கில் விமர்சிக்கும் போது, இதில் முன்னோடியாக கருதப்படும் கூகுளையும் சேர்த்தே விமர்சிக்க வேண்டியிருக்கிறது. கூகுளுக்கு பழகியவர்களுக்கு இந்த கருத்து ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.
ஆனால், தற்போது வாட்ஸ் அப் பிரைவசி கொள்கைக்கு எதிராக வெடித்திருக்கும் சர்ச்சை பற்றி விவாதிக்கும் போது நிச்சயம் கூகுள் மீதான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டாக வேண்டும். அந்த வகையில், நோமோர்கூகுள் (https://nomoregoogle.com/ ) தளத்தை அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும்.
நோமோர்கூகுள் தளம் மிகவும் எளிமையானது. அடிப்படையில் இந்த தளம் மாற்று கூகுள் சேவைகளின் தொகுப்பாக விளங்குகிறது.
கூகுள் மீதான விமர்சனத்தை முன்வைக்கும் போது, அப்படி என்றால் வேறு நல்ல தேடியந்திரம் சொல்லுங்களேன் என அறியாமையோடு கேட்பவர்களுக்கு, டக்டக்கோ அல்லது ஸ்டார்ட் பேஜை பயன்படுத்தவும் என சொல்லலாம்.
அதே போல, கூகுள் குரோமுக்கு மாற்றாக பயர்பாக்ஸ், விவால்டி உள்ளிட்ட பிரவுசர்களை கூறலாம். ஜிமெயிலுக்கு பதிலாக, போர்ட்டான் மெயில், ஜோஹோ மெயில் உள்ளிட்டவற்றை கூறலாம். யூடியூப்பிற்கு பதிலாக விமியோ மற்றும் பியர்டியூபை கூறலாம்.
இத்தகைய மாற்று கூகுள் சேவைகளை எல்லாம் இந்த தளம் தனித்தனி தலைப்புகளின் கீழ் பட்டியலிடுகிறது. வேறு பொருத்தமான மாற்று கூகுள் சேவைகளை அறிந்தவர்களும் அதை பரிந்துரைக்க வாய்ப்ப அளிக்கப்பட்டுள்ளது.
லெவில்சியோ ( @levelsio) எனும் மென்பொருளாலர் இந்த சேவையை உருவாக்கியுள்ளார்.
இதற்கு முன்னர் பேஸ்புக்கிற்கு மாற்று சேவைகளை அடையாளம் காட்டும் நோமோர்பேஸ்புக் தளம் இந்த தளத்தை முன்னுதாரணமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான்.