பேஸ்புக்கிற்கு குட்பை!
வாட்ஸ் அப் பிரைவசி கொள்கை தொடர்பாக வெடித்திருக்கும் சர்ச்சை உண்மையில் வாட்ஸ் அப் தொடர்பானது அல்ல. பிரச்சனைக்கு மூலக்காரணம் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்.
வாட்ஸ் அப் பயனாளிகள் தகவல்களை சேகரிக்கிறது. மற்ற செயலிகளும் இவ்வாறு செய்கின்றன. ஆனால், வாட்ஸ் அப் சேகரிக்கும் தகவல்களை ( உண்மையில் அது சேகரிப்பது தனிப்பட்ட தகவல்கள் அல்ல மெட்டா டேட்டா எனும் துணை தகவல்கள்) என்ன செய்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இப்போதைக்கு வாட்ஸ் அப் பயனாளிகள் திரையில் விளம்பரங்களை நுழைப்பதில்லை. தகவல்களை அநேகமாக மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பதில்லை.
ஆனால், வாட்ஸ் அப், பயனாளிகள் தொடர்பான பலவிதமான தகவல்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்கிறது. இதற்கு பயனாளிகள் ஒப்புக்கொண்டாக வேண்டும் என நிர்பந்திப்பதே இப்போது பிரச்சனை. இந்த தகவல் பகிர்வு ஏற்கனவே நடைபெற்றாலும், இதிலிருந்து விலகும் வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டுள்ளது. - மேலும் விவரங்களுக்கு இந்த பதிவு:
பயனாளிகள் தரவுகளை கையாள்வதில் பேஸ்புக்கின் செயல்பாடு மிகவும் மோசமானது என்பதால் இது பிரச்சனையாகிறது. இனி, பேஸ்புக் விளம்பரங்கள் மேலும் பலவிதங்களில் பயனாளிகளை விரட்டும்.
எனவே பிரச்சனைக்கு மூலக்காரணம் பேஸ்புக் தான்.
இதை புரிந்து கொண்டால், வாட்ஸ் அப்புக்கு மாற்று சேவையை தேடுவதை விட பேஸ்புக்கிற்கு மாற்று சேவை தேடத்தோன்றும். இந்த கருத்து உங்களுக்கு ஏற்புடையது என்றால் ’நோமோர்பேஸ்புக்’ ( https://nomorefacebook.xyz/) இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.
மாறாக பேஸ்புக்கில் என்ன பிரச்சனை என அப்பாவித்தனமாக கேட்பவர்களுக்கு இந்த தளம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம்.
ஏனெனில், இந்த தளம், இனி பேஸ்புக் மற்றும் அதன் சம்ப்ராஜ்யத்தில் உள்ள துணை சேவைகளை பயன்படுத்தாமல் இருக்க தீர்மானிப்பவர்களுக்கு பொருத்தமான மாற்று சேவைகளை பரிந்துரைக்கிறது.
பேஸ்புக்கிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்று சேவைகளை இந்த தளம் பட்டியலிடுகிறது. பேஸ்புக் அளிக்கும் ஒவ்வொரு வசதிக்கும் மாற்றாக நாடக்கூடிய இணைய சேவைகளை இந்த தளம் பட்டியலிடுகிறது. இந்த சேவைகள் எல்லாமே இணையவாசிகள் பரிந்துரைத்தவை.
வாட்ஸ் அப் சர்ச்சை பிரைவசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,பேஸ்புக்கிற்கான மாற்று சேவைகளை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
*
நிற்க, விஷயம் அறிந்தவர்கள் பேஸ்புக் மட்டுமா பிரச்சனை, கூகுள் இதே போல செய்யவில்லையா என கேட்கலாம். ஆம், பிரைவசி என்று வரும் போது கூகுள் மீதும் எண்ணற்ற விமர்சனங்கள் இருக்கின்றன. உண்மையில், மேலே பார்த்த தளமுமும் ஒரு விதத்தில் கூகுள் மீதான விமர்சனம் தொடர்புடையது தான்.