உங்களுக்குத் தெரியுமா? உலகமே ஒரு கேக்!- ஒரு மீம் உருவான கதை
எல்லாமே ஒரு கேக்! உலகமே இப்போது இப்படி தான் நம்பிக்கொண்டிருக்கிறது, அல்லது நம்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இந்த எண்ணம் ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கிறது. இணைய உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் கேக் மீம்கள் இதை தான் உணர்த்துகிறது.
நீங்களும் கூட, இந்த புதிய இணைய போக்கை கவனித்து அதில் பங்கேற்றிருக்கலாம், அல்லது இது என்னடா எல்லாமே கேக் மயமாக இருக்கிறதே என குழம்பித் தவித்திருக்கலாம்.
விஷயம் இது தான். எல்லாமே கேக் ( "everything is cake" ) எனும் மீம் இணைய உலகை இப்போது உலுக்கி கொண்டிருக்கிறது. அதாவது, எல்லா வகையான பொருட்களையும் கேக்காக மாற்றி, எல்லாமே கேக் என கூறும் மீம்.
இணைய உலகில் மீம்களும் புதிதல்ல: அவற்றில் சில திடிரென இணைய உலகம் முழுவதும் அலையென வீசி அடங்குவதும் புதிதல்ல. ஆனால், இந்த எல்லாமே கேக் மீம் கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கிறது. பொதுவாக மீம்கள் கேலியாகவும், நகைச்சுவையாகவும் அமையும். இந்த மீமிலும் இரண்டும் இருந்தாலும், அவற்றை கடந்து இந்த மீம் தத்துவார்த்த நோக்கிலும் அமைந்திருக்கிறது.
ஏனெனில், இந்த மீம் நம் காலத்து மீமாக இருப்பதாக உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அப்படி என்ன தான் இருக்கிறது, எல்லாமே கேக் மீமில்.
கேக்களில் பல ரகங்கள் இருக்கின்றன. கேக்களை பல வித உருவங்களாகவும் உருவாக்கலாம். இதெல்லாம் அறிந்தது தான். ஆனால், இவை எல்லாம் பார்ப்பதற்கு கேக் போலவே இருக்கும். மாறாக, பார்ப்பதற்கு நிய உலக பொருள் போல தோன்றும், ஆனால் உண்மையில் கேக்காக இருக்கும் வகையிலான கலை வண்ண கேக்கள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு, தோற்றத்தில் வண்ண காலணி போலவே இருக்கும், ஆனால் உண்மையில் அது ஒரு கேக். அதை கத்தியால் வெட்டும் போது, இதை உணரலாம்.
இந்த வகையான கேக்களை உருவாக்குவதில் வல்லுனரான துருக்கி நாட்டு சமையல் கலைஞர் டுபா கிகில் (Tuba Geçkil ) என்பவர் இப்படி தான் உருவாக்கிய மாய கேக் உருவங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். அட இவை எல்லாம் கேக்கா என வியக்க வைக்கும், இந்த கேக்களை தொகுத்து ஒரு வீடியோவாக பஸ்பீட் இணையதளம் தனது உணவு சேனலில் வெளியிட்டது.
ஷூ, டாய்லெட் காகிதம், செடி போன்ற பொருட்கள் உண்மையில் கேக்காக உருவாக்கப்பட்டதை விவரிக்கும் இந்த வீடியோ இணையவாசிகளை கவர்ந்து, ஆயிரக்கணக்கான முறை டிவிட்டரில் பகிரப்பட்டு பிரபலமானது.
இதன் விளைவாக பலரும், இது கேக் தான் என சுட்டிக்காட்டும் படங்களையும், வீடியோக்களையும் தங்கள் சமூக ஊடக டைம்லைனில் பார்க்கத்துவங்கினர்.
இந்த கேக் படங்கள் வியப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தான், இயல்பான அந்த அடுத்தக்கட்ட நிகழ்வு உண்டானது. இந்த படங்கள் இணைய மீமாயின.
ஆம், இணையவாசிகளில் பலர், இந்த படங்களை வியப்புடன் பகிர்வதற்கு பதிலாக, ஒருவித அலுப்புடன் இதற்கு எதிர்வினையாற்றினர். போதும்டா சாமி, இந்த கேக் படங்களை இனியும் தாங்க முடியாது எனும் வகையில் பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இதற்கேற்றவாறு சர்வதேச வடிவேலு பாணி ரியாக்ஷன்களையும் இணைத்துக்கொண்டனர்.
இந்த போக்கு பிரபலமாக, இன்னும் பலர் கேலியும், கிண்டலும் கலந்த குரலுடன் இதில் இணைந்தனர். கேக் அல்லாத படங்களை கூட பகிர்ந்து கொண்டு, அது கேக் தான் என தெரிவிக்கும் வகையிலான பதிவுகளை வெளியிட்டனர்.
உதாரணமாக, விண்வெளி வீரர் ஒருவர் கிரகம் ஒன்றை வெட்டுவது போலவும், அதன் உள்பகுதி கேக்காக இருப்பது போலவும் படத்தை வெளியிட்டு, இது ஒரு கேக் என கருத்து தெரிவித்திருந்தனர். இதே பாணியில் பலரும் படங்களை வெளியிட, எல்லாமே ஒரு கேக் எனும் கருத்து பிரபலமானது.
இதனிடையே, நிஜ வாழ்க்கை கேலியையும் இதில் கருப்பொருளாக்கி கொண்டனர். மனைவியை கேலி செய்யும் வாசகத்துடன், மனைவி ஒரு கேக் என கருத்து தெரிவித்தனர். இப்படி வாழ்க்கையில் கலாய்க்கும் பல விஷயங்களை எல்லாம் கேக் என்றனர். இப்படி தான் எல்லாமே ஒரு கேக் மீம் ஒரு அலையென உருவானது.
இதற்குள், ஊடகங்களும் இந்த மீம் நிகழ்வை செய்தியாக்கி விளக்கம் அளித்தன. மீமின் பூர்வ கதை விவரிக்கப்பட்டதோடு, நிஜ வாழ்க்கை பொருட்கள் போலவே தோன்றும் கேக் செய்வது எப்படி என்பதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது.
ஊடக கவனம், இந்த மீமை மேலும் வைரலாக்கியது. விளைவு இன்னும் பலரும், உலகில் உள்ள பொருட்களை எல்லாம் கேக்காக்கி கொண்டிருக்கின்றனர். எக்சல் கோப்பு படத்தை பகிர்ந்து, அதை துண்டாக வெட்டி காண்பித்து கேக்காகினர். கத்திரிகாயை வெட்டி, அதை கேக்காகினர். பார்த்தாலே மிரள வைக்கும் தோற்றங்களும் பகிரப்பட்டன.
இப்படி தான், எல்லாமே கேக் மீம் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும் ஏன் இப்படி கேக்காக பார்க்க வேண்டும்? எனும் கேள்வி இப்போது மனதில் தோன்றியிருக்குமே.
உளவியல் வல்லுனர்களும் இந்த கேள்வியை முக்கியமாக பார்க்கின்றனர். இந்த நிகழ்வை மையமாக வைத்து பல்வேறு இதழ்கள் வெளியிட்டு அலசல் கட்டுரைகள் இதை தான் உணர்த்துகின்றன.
எல்லாவற்றையும் கேக்காக பார்க்கும் உணர்வு, ஒரு இணைய மீமை கேலியாகவும், கிண்டலாகவும் அணுகும் தன்மை மட்டும் அல்ல என உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பு ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற சூழலின் தாக்கம் இப்படி வெளிப்படுகிறது என்கின்றனர்.
கொரோனா வைரஸ் உலகையே மாதக்கணக்கில் முடக்கி போட்டிருக்கிறது. பெரும்பாலானோர் வீட்டிலேயே அடங்கி கிடக்கின்றனர். ஓட்டலில் சாப்படுவது, நண்பர்களுடன் கை குலுக்குவது, ஷாப்பிங் செல்வது என வழக்கமாக செய்யும் எதையும் பழைய சுதந்திரத்துடன் செய்ய முடியவில்லை. இந்த நிலை எப்போது மாறும் என்றும் தெரியவில்லை.
இப்படி ஒரு நிச்சயமற்ற சூழலில், ஏற்கனவே நன்கு அறியப்பட்ட உண்மைகளை, அவற்றின் தன்மையை மறுக்கும் வகையில் எல்லாமே ஒரு கேக் என்று சொல்வதன் மூலம், கொரோனா கால யதார்த்தத்தை உளவியல் நோக்கில் எதிர்கொள்ள முயற்சிப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இப்படி நம் காலத்து மீமாக உருவாகி வலுப்பெற்றிருக்கும், எல்லாமே ஒரு கேக் நிகழ்வின் பின்னணியில் தான் நேற்று அறிமுகம் செய்த, ஒரு புகைப்படத்தை சமர்பித்தால் அது கேக் தானா என கண்டறிந்து சொல்லும் புதுமையான இணையதளத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இணைப்பு: https://www.oprahmag.com/entertainment/a33298561/everything-is-cake-memes/