இது வலைத்தொடர்களுக்கான இணைய தொலைக்காட்சி
முதல் பார்வையில், ஓடிடி அல்லது ஸ்டிரீமிங் சார்ந்த இன்னொரு இணையதளமாக ஸ்பார்க்.டிவி (https://www.sparkk.tv/) தோன்றினாலும் இது சற்று மாறுபட்ட சேவையாக அமைந்துள்ளது.
நெட்பிளிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி மேடைகளில் வெளியாகும் படங்களையும், தொடர்களையும் தொகுத்தளிக்கும் திரட்டி வகை தளங்கள் பல இருக்கின்றன. இந்திய அளவிலும் இத்தகைய தளங்கள் பல இருக்கின்றன. இவைத்தவிர, ஆவணப்படங்களை அடையாளம் காட்டும் ஓடிடி திரட்டிகளும் இருக்கின்றன.
ஆவணப்படங்களிலும் கூட, சுற்றுச்சூழல் கருத்தாக்கத்தில் அக்கறை கொண்ட படங்களுக்கான தனி தளமும் இருக்கிறது.
இந்த தளங்களின் தன்மை மற்றும் இடைமுகத்தை கொண்டிருந்தாலும் ஸ்பார்கிள்.டிவி மாறுபட்டிருக்கிறது. இந்த தளம் வெப் சிரீஸ் எனப்படும் வலைத்தொடர்கள் மற்றும் வலை திரைப்படங்களில் கவனம் செலுத்துவது மட்டும் அல்லாமல், இந்த பிரிவுகளிலும் கூட, பெரிய தயாரிப்பு நிறுவனங்களை தவிர்த்துவிட்டு, சுயேட்சை முயற்சியில் வெளியாகும் படங்களையும், வலைத்தொடர்களையும் மட்டுமே முன்னிறுத்துகிறது. அந்த வகையில் சுயேட்சையான உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கான தளமாக இது அமைகிறது.
வலைத்தொடர்களின் அண்மை பகுதிகள் மற்றும் வலை திரைப்படங்கள் முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்படுவதோடு, புதிய தொடர்களுக்கான முன்னோட்டங்களையும் காணலாம். படங்களையும், தொடர்களையும் இந்த தளத்திலேயே பார்க்கலாம். இலவசம் சேவை தான். ஆனால் கூடுதல் அம்சங்கள் தேவை எனில் உறுப்பினராக சேர வேண்டும்.
உள்ளடக்க உருவாக்குனர்களை பொருத்தவரை இந்த தளத்தின் பார்வைகள் யூடியூப் பார்வையில் கணக்கில் வரும் என்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் தளம் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சையாக உருவாக்கப்படும் வலைத்தொடர்களையும் படங்களையும் அறிமுகம் செய்து கொள்ள விரும்பினால், வலைத்தொடர்களுக்கான இணைய தொலைக்காட்சி வலைப்பின்னல் என வர்ணித்துக்கொள்ளும் ஸ்பார்க்.டிவி தளம் ஏற்றதாக இருக்கும். அநேகமாக வேறு எங்கும் பார்க்க முடியாத படங்களை இதில் முதலில் பார்க்கலாம். அவற்றில் சில புதுமையானதகாவும் இருக்கலாம்.!