சுற்றுச்சூழல் படங்களுக்கான நெட்பிளிக்ஸ்
நெட்பிளிக்சில் திரைப்படங்களும், வலைத்தொடர்களும் பார்க்கலாம் என்பதோடு, ஆவணப்படங்களையும் பார்க்கலாம். எனினும், ஆவணப்படங்களுக்கு என்றே பிரத்யேகமான ஸ்டிரீமிங் சேவைகள் இருக்கின்றன. இந்த வரிசையில் வாட்டர்பியர் (https://join.waterbear.com/ ) ஸ்ட்ரீமிங் சேவை புதிதாக அறிமுகம் ஆகியிருக்கிறது.
ஆவணப்படங்களிலும் கூட, எல்லா வகையான படங்களிலும் கவனம் செலுத்தாமல், நம் பூமியை காப்பதை கருப்பொருளாக கொண்ட ஆவணப்படங்களை வழங்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது இந்த சேவை.
ஆவணப்படங்கள் என்பவையே குறிப்பிட்ட விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி செயலுக்கு வழிவகுக்கும் கொண்டவை தானே. அந்த வகையில், நம் காலத்தின் பிரச்சனையாக உருவெடுத்துள்ள கால்நிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆவணப்படங்களை கண்டு தெளிவதற்கான தளமாக வாட்டர்பியர் அமைகிறது.
இந்த தளத்தை பயன்படுத்த கட்டணம் இல்லை. உறுப்பினராக பதிவு செய்து கொண்டு எவரும் பயன்படுத்தலாம்.
நெட்பிளிக்ஸ் போல, இந்த படம் பார்க்கலாமா, அந்த படம் பார்க்கலாமா என்றெல்லாம் இதில் தேர்வு செய்ய தடுமாற வேண்டாம். இதில் உள்ள எல்லா ஆவணப்படங்களுமே அவசியம் பார்க்க வேண்டியவை தான். எல்லா படங்களுமே ஏதோ ஒரு வகையில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி தொடர்பானவை.
அதே போல, நெட்பிளிக்ஸ் போல இந்த தளத்தில் அல்கோரிதம் சார்ந்த பரிந்துரை பின் தொடர்தல்களும் கிடையாது. உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான படங்களை தேர்வு செய்து பார்க்கலாம்.
படங்களை பார்த்த பிறகு உறுப்பினர்கள் செயலில் இறங்கலாம். அதாவது, குறிப்பிட்ட அந்த படம் பேசும் கருப்பொருள் குறித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள முற்படலாம். அந்த படத்தை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். தொடர்புடைய அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, 21 ம் நூற்றாண்டில் பூமியை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை பெறலாம். இந்த நோக்கம் கொண்ட படங்களே பிரதானமாக இந்த சேவையில் இடம்பெறுகிறது. ( எனவே இது இன்னொரு ஓடிடி சேவை அல்ல!)
ஆவணப்பட உலகில் தயாரிப்பாளராக நன்கறியப்பட்ட எலன் விண்டேமுத் (Ellen Windemuth) இந்த ஸ்டிரீமிங் சேவையை துவக்கியிருக்கிறார்.
நெட்பிளிக்சில் வெளியாகி கவனத்தை ஈர்த்த மை ஆக்டோபஸ் டீச்சர் (My Octopus Teacher ) எனும் ஆவணப்படம் இவரது தயாரிப்பு தான்.
இயற்கை சார்ந்த வரலாற்று படங்களை எடுப்பதில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் எலன், சுற்றுச்சூழல் அமைப்புகளின் நல்ல பணி பரவலாக அறியப்படாமல் இருப்பதை உணர்ந்து அதற்கு தீர்வாக, இத்தகைய அமைப்புகள் பற்றிய குறும்படங்களை எடுத்து வெளியிட்டால் என்ன எனும் எண்ணத்துடன் இந்த தளத்தை துவக்கியதாக வோக் இதழ் பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஆக, இந்த தளத்தில் சுற்ற்ச்சூழல் நலனுக்காக பாடுபட்டு வரும் அமைப்புகள் மற்றும் அவற்றின் பணி குறித்த படங்களை பார்ப்பதோடு, இந்த தளம் கூட்டு சேர்ந்துள்ள பல்வேறு அமைப்புகளின் ஆவணப்படங்களையும் பார்க்கலாம்.
-