சுற்றுச்சூழல் நலன் காக்கும் புதிய தேடியந்திரம் !
ரபுஷியா (https://rapusia.org/) எனும் பெயரில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தேடியந்திரத்தில் தேடும் போது சுற்றுச்சூழல் நோக்கிலான திட்டங்களுக்கு உதவ முடியும் என்பது இந்த தேடியந்திரத்தின் சிறப்பாக அமைகிறது. அதாவது, ரபுஷியா தேடியந்திரம் விளம்பரங்கள் மூலம் தனக்கு வரும் லாபத்தை புவியை காக்க பாடுபடும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்காக வழங்குகிறது.
வழக்கமான தேடியந்திரங்கள் போலவே செயல்பட்டாலும், எங்களுடைய லாபம் சமுக நல மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு செல்வது தான் ஒரு முக்கிய வேறுபாடு என ரபுஷியா தெரிவிக்கிறது.
இதற்காக ரபுஷியா சுற்றுச்சூழல் நலனுக்கான திட்டங்களை மேற்கொண்டு வரும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த அமைப்புகளின் பட்டியலையும் அவற்றின் நோக்கத்தையும் முகப்பு பக்கத்திலேயே ரபுஷியா இடம்பெற வைத்துள்ளது. பயனாளிகள் இந்த அமைப்புகளின் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதோடு, அந்த அமைப்புக்கு ஆதரவும் தெரிவிக்கலாம்.
ஆக, சமூக நோக்கிலான சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறவர்கள் கூகுளுக்கு பதிலாக ரபுஷியா தேடியந்திரத்தை பயன்படுத்தலாம். கூகுளில் தேடுவது போலவே இந்த தேடியந்திரத்திலும் தேடலாம். கூகுள் போலவே தேடல் முடிவுகளில் விளம்பரங்களும் தோன்றும். ஆனால் இந்த விளம்பரங்கள் சமூக நோக்கிலான திட்டங்களுக்கு அளிக்கப்படும் என்பதோடு, கூகுள் போல இந்த தேடியந்திரம் உங்களை பின் தொடர்வதில்லை என்றும் உறுதி அளிக்கிறது.
தேடல் முடிவுகள் மூலம் வரும் விளம்பர வருவாயை சுற்றுச்சூழல் நலனுக்காக அளிக்கும் இகோஷியா போன்ற சமூக நல தேடியந்திரங்கள் வரிசையில் ரபுஷியா புதிய வரவாக அமைகிறது.
· ரபுஷியா தேடல் முடிவுகள் சிறப்பாகவே உள்ளன. ஆனால் இது சொந்த தேடியந்திர முடிவுகளை பயன்படுத்துகிறதா அல்லது மற்ற தேடியந்திர முடிவுகளை அடிப்படையாக கொண்டுள்ளதா என்பது தெரியவில்லை.