இந்த தேடியந்திரம் ஒரு அட்சயப்பாத்திரம்
இந்த மின்மடலை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு நான் ஒரு தேடியந்திர ரசிகன் என்று தெரிந்திருக்கும். அதிலும் குறிப்பாக கூகுள் அல்லாத மாற்று தேடியந்திரங்களை அறிமுகம் செய்து கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவன் என்பதும் தெரிந்திருக்கும். அதோடு, அடிக்கடி தேடியந்திரங்கள் பற்றி எழுதி வருபவன் என்பதையும் நீங்கள் கவனித்திருக்கலாம்.
மீண்டும், மீண்டும் ஏன் தேடியந்திரம் பற்றி எழுத வேண்டும் எனும் கேள்வியை மீறி, மாற்று தேடியந்திரங்களை அறிமுகம் செய்வதை முக்கியமாக கருதுவதால், இன்றும் ஒரு புதியதொரு மாற்று தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
அந்த தேடியந்திரம் இந்திய தன்மையுடன் கூடிய பெயர் கொண்டிருப்பது ( sevasearch.org/) மட்டும் அல்ல, அதன் பின்னே உள்ள கருத்தாக்கமும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. அதோடு, இந்த தேடியந்திரத்தின் தன்மையை புரிந்து கொள்ள, மணிமேகலையையும், அட்சயப்பாத்திரத்தையும் நினைவில் கொள்வதும் ஏற்றதாக இருக்கும்.
கேட்டவருக்கு உணவு அளிக்கும் அட்சயப்பாத்திரம் போல, பசிப்பிணியாற்றிய மணிமேகலையின் அமுதசுரபி போல, இந்த தேடியந்திரம் இணைய தேடல் மூலம், உலகில் உள்ள வரியவர்களின் பசியை போக்க முயற்சிக்கிறது. அதாவது, ஒவ்வொரு முறை நீங்கள் சேவாசர்ச் தேடியந்திரத்தை பயன்படுத்தி தேடும் போது, அதன் மூலம் கிடைக்க கூடிய விளம்பர வருவாயில் உலகில் எங்கோ ஒரு மூளையில் இருக்கும் வறியவரின் பசிக்கு உணவளிக்கிறது இந்த தேடியந்திரம்.
ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச தொண்டு அமைப்புகளுடன் இணைந்து இந்த சேவையை அளித்து வருகிறது சேவாசர்ச். உலகின் முதல் சமூக மனசாட்சி கொண்ட தேடியந்திரம் என்றும் இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது.
இணைய தேடல் என்பது வருவாய் கொட்டும் சேவை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகுள் இதில் கோடிகளை அள்ளுகிறது. எல்லாம் தேடல் முடிவுகளுடன் முன்வைக்கப்படும் விளம்பரங்கள் மூலம் குவியும் தொகை தான்.
இந்த விளம்பர வருவாயை சேவை நோக்கில் பயன்படுத்தி, ஏழைகளுக்கு உணவு அளிக்கும் நோக்கத்துடன் சேவாசர்ச் தேடியந்திரம் செயல்பட்டு வருகிறது. ஆக, கூகுளில் தேடுவது போலவே, நீங்கள் சேவாசர்ச்சில் தேடலாம். உங்களுக்கு தேடல் முடிவுகள் கிடைக்கும். நீங்கள் தேடுவதால் கிடைக்கும் விளம்பர வருவாயை சேவாசர்ச் ஏழை குழந்தைகளுக்கு உணவளிக்க வழங்கும்.
சேவாசர்ச் மூல தேடியந்திரம் அல்ல. அதாவது, சொந்தமாக அதனிடம் தேடல் தொழில்நுட்பம் கிடையாது. மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரத்தை அடிப்படையாக கொண்டு தேடல் முடிவுகளை வழங்குகிறது. அந்த தேடல் சேவையுடன் விளம்பரங்களை வழங்கி அதன் மூலம் வரும் வருவாயை உணவளிக்க பயன்படுத்திக்கொள்கிறது.
அது மட்டும் அல்லாமல், கூகுள் போல உங்கள் தேடல் சுவடுகளை பின் தொடராமல் பிரைவசியை மதிப்பதாகவும் வாக்குறுதி அளிக்கிறது. தனது செயல்பாடுகள் வெளிப்படையானவை என்றும் உறுதி அளிக்கிறது.
சிலிக்கான வேலியில் இருந்து விலகி வந்து யோகாவில் ஆழ்ந்து தனிமனித தேடலில் ஈடுபட்டிருக்கும் சீன் கெல்லி என்பவர் நண்பர்களுடன் இணைந்து இந்த தேடியந்திரத்தை துவக்கியிருக்கிறார். உங்கள் தேடல் உலகில் உள்ள வறியவர்களுக்கு உணவளிக்க விரும்பினால் கொஞ்சம் சேவாசர்ச் மூலமும் தேடுங்கள்.
-
பி.கு: சேவாசர்ச் போலவே, சுற்றுச்சூழல் நோக்கில் செயல்படும் இகோஷியா எனும் பசுமை தேடியந்திரமும் இருக்கிறது. இந்த தேடியந்திரம் தேடல் மூலம் வருவம் வருவாயை உலகில் மரம் வளர்ப்பதற்கு பயன்படுத்தி வருகிறது. சமூக நோக்கிலான தேடியந்திரங்களில் இகோஷியாவை முன்னோடி எனலாம்.