வீடியோ கூட்டங்களை மறுப்பது எப்படி?
நோடூமீட்டிங் (https://notomeeting.com/ ) இணையதளத்தை இந்த ஆண்டின் சிறந்த இணையதளங்களில் ஒன்று எனவும் வர்ணிக்கலாம். இன்னொருவிதமாக நம் காலத்து இணையதளங்களில் ஒன்றும் என்றும் வர்ணிக்கலாம்.
நோடூமீட்டிங் தளம், இப்படி வர்ணிக்க வைக்க அப்படி என்ன செய்கிறது எனக்கேட்டால், வீடியோ சந்திப்புகளை எளிதாக மறுப்பதற்கான இனிமையான வழியை காட்டுகிறது.
இந்த தளத்திற்கான தேவையை பார்க்கலாம்.
2020 ம் ஆண்டில், ஜூம் என்பது வீடியோ சந்திப்புக்கான அடையாள சொல்லாக மாறியது மட்டும் அல்ல, அதன் பக்கவிளைவாக ஜூம் களைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இடைவிடாது வீடியோ சந்திப்புகளில் பங்கேற்க நேரும் போது ஏற்படும் பாதிப்பே ஜூம் களைப்பு எனப்படுகிறது.
நீங்களும் கூட, இத்தகைய களைப்பை உணர்ந்திருக்கலாம். இது போன்ற நேரங்களில், இந்த வீடியோ கூட்டம் வேண்டாம் என்று சொல்லலாம் என்று கூட உங்களுக்குத்தோன்றியிருக்கலாம். ஆனால், இப்படி நேரடியாக சொல்லவும் முடியாது தான்.
இந்த இடத்தில் தான், ’நோடூமீட்டிங்’ இணையதளம் வருகிறது. புதிதாக மேலும் ஒரு வீடியோ சந்திப்பில் பங்கேற்க வேண்டியிருந்தால், அந்த சந்திப்பு தேவையில்லாமல் திட்டமிடப்பட்டிருக்கிறது, அதை தவிர்க்கலாம் என நயமாக சொல்ல இந்த தளம் உதவுகிறது.
அதாவது, மறுப்பவர் யார் என வெளிப்படுத்திக்கொள்ளாமல், அனாமதேயமாக, இந்த சந்திப்பு தேவையில்லை என, வீடியோ சந்திப்பு ஏற்பாடு செய்தவருக்கு இமெயில் தகவல் அனுப்பி வைப்பதன் மூலம் இதை சாத்தியமாக்குகிறது இந்த தளம்.
வீடியோ சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவரின் பெயர் மற்றும் இமெயில் முகவரியை சமர்பித்தால், வீடியோ சந்திப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் செய்தியை இந்த தளம் அனுப்பி வைக்கிறது. இந்த மறுப்பை பெறுபவர் மனம் கோணாத வகையில், செய்தியை அனுப்பி வைக்கிறது.
எடுத்ததெற்கெல்லாம் வீடியோ சந்திப்பை நாடும் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
எல்லாம் சரி, இப்படி ஒரு மறுப்பு நமக்கு வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்?