பேட்டரிகளை பாதுகாப்பது எப்படி? வழிகாட்டும் இணையதளம்
இது சற்றே வித்தியாசமான பதிவு. இன்று நாம் தனியே எந்த ஒரு இணையதளத்தையும் பார்க்கப்போவதில்லை. மாறாக சுவாரஸ்யமான இணைய செய்தி ஒன்றை பார்க்கப்போகிறோம்.
இந்த மின்மடல், இணையதளம், இணைய சேவைகள் அறிமுகங்களுக்கானது என்பதால், இது ஒருவகையில் மீறல் தான். ஆனால், இந்த மின்மடலின் மைய தன்மையில் இருந்து விலகாதது. ஏனெனில், இந்த செய்தி மூலம், இரண்டு அருமையான இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ள இருக்கிறோம்.
அது மட்டும் அல்லாமல், இந்த செய்தியின் வாயிலாக முக்கியமான ஒரு கோட்பாட்டையும் சுட்டிக்காட்ட இருக்கிறேன்.
பழைய பேட்டரிகளை பாதுகாப்பதற்கான முயற்சியை ஸ்டீபன் லுல்ஸ் (StephenLulz ) என்பவர் மேற்கொண்டு அதற்கான திட்டத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது தான் செய்தி. ஹேக் ஏ டே ( https://hackaday.com/2020/10/22/digital-preservation-for-old-batteries/) தளத்தில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.
ஹேக் ஏ டே, தளத்தை இணையத்தின் குறுங்காவிய தளங்களில் ஒன்று என வர்ணிக்கலாம். ’ஹேக்’ என்பதை தொழில்நுட்ப உலகில், நன்மை பயக்கும் குறுக்கு வழிகள் என புரிந்து கொள்ளலாம். இத்தகைய தொழில்நுட்ப குறுக்கு வழிகளை பகிர்ந்து கொள்வதற்கான இணையதளம் ஹேக் ஏ டே.
இந்த தளம் பற்றியே தனியே பார்க்கலாம் என்றாலும் இப்போதைக்கு பேட்டரி செய்தியில் கவனம் செலுத்தலாம்.
முன்பெல்லாம் பேட்டரி என்றால், டார்ச் லைட் பேட்டரிகள் தான். கார் பேட்டரிகள் தனி ரகம். ஆனால், இப்போது உலகம் வெகுவேகமாக கேட்ஜெட்மயமாகி வருவதால், பேட்டரிகளை பலவிதங்களில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். பேட்டரிகள் பற்றி நாம் கவலைப்படுவதும் இல்லை, அவற்றை பாதுகாப்பதும் இல்லை. பழைய பேட்டரி வீணானால் தூக்கி வீசி வேறு புதிய பேட்டரி வாங்கி பயன்படுத்துகிறோம். தவிர, ரீசார்ஜ் செய்து கொள்ளும் பேட்டரிகளும் இருக்கின்றன.
எல்லாம் சரி, ஏதேனும் காரணத்திற்காக உங்களுக்கு பழைய பேட்டரி தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள்? உதாரணத்திற்கு உங்களிடம் பழைய மேக் லேப்டாப் இருக்கிறது. அதில் இருந்த பழைய பேட்டரி பழுதாகி, சந்தையில் அதே ரக பேட்டரி கிடைக்கவில்லை எனில் என்ன செய்வீர்கள்?
இப்படி இன்னும் நிறைய உதாரணங்களை சொல்லலாம். இது போன்ற சூழ்நிலைகளில், தேவைக்கேற்ப நீங்களே சொந்தமாக பழைய பேட்டரியை உருவாக்கி கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?
பேட்டரியை நாமே உருவாக்குவதா? அதெப்படி சாத்தியம் என ஆச்சர்யப்படுவதாக இருந்தால், இது போன்ற தொழில்நுட்ப அதிசயங்களை எல்லாம் சாத்தியமாக்குவதற்கான தளங்கள் இருக்கின்றன என்பதைஅறிந்து கொள்ளுங்கள். அந்த தளங்களில் ஒன்றான திங்வர்ஸ் தான், இன்று நாம் பார்க்க இருக்கும் இரண்டாவது இணையதளம். - https://www.thingiverse.com/thing:4083187
வன்பொருள்களை உருவாக்கி பகிர்ந்து கொள்வதற்கான இணைய சமூகமாக விளங்கும், திங்வர்ஸ் தளத்தில் தான், மேலே சொன்ன ஸ்டீபன் லுல்ஸ் தனது பழைய பேட்டரி பாதுகாப்பு திட்டத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மேக் லேப்டாப்களில் பயன்படுத்தக்கூடிய பழைய பேட்டரி மாதிரி ஒன்றை பகிர்ந்துள்ள ஸ்டீபன், இந்த பேட்டரியை 3டி பிரிண்டிங் முறையில் நாம் அச்சிட்டுக்கொள்வதற்கான வழிமுறை மற்றும் அதற்கான நிரல் விவரங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆக, இந்த வகை பழைய பேட்டரி தேவைப்படும் போது அல்லாட வேண்டாம், 3 டி பிரிண்டிங்கில் நாமே அச்சிட்டு பயன்படுத்திக்கொள்ளலாம். கேட்கவே நன்றாக இருக்கிறது அல்லவா! இது போன்ற பல மாயங்கள் திங்வர்ஸ் மூலம் சாத்தியமாகிறது.
இத்தகைய தொழில்நுட்ப குறுக்குவழிகள் தொடர்பான தகவல்களை தேடி கண்டுபிடித்து வெளியிடும் தளமாக ஹேக் ஏ டே திகழ்கிறது.
இந்த இரண்டு குறுங்காவிய தளங்கள் பற்றி தனியே விரிவாக பார்க்கலாம்.
இப்போதைக்கு, இந்த செய்தி உணர்த்தும் செய்தி என்னவெனில், டிஜிட்டல் பாதுகாப்பு சங்கதியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான். அதாவது டிஜிட்டல் வடிவில் நாம் உருவாக்கி கொண்டிருக்கும் தகவல்கள் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாமல் இருக்கும் வகையில், அவற்றுக்கான டிஜிட்டல் பேழைகளை உருவாக்க வேண்டும்.
இதை தொழில்நுட்ப மொழியில், பேக்கப் எடுப்பது என புரிந்து கொள்ளலாம். இத்தகைய பேக்கப் எடுப்பது வன்பொருள் சாதனங்களுக்கும் பொருந்தும் என்பதை மேலே பார்த்த செய்தி உணர்த்துகிறது.
நிற்க, ஹேக் ஏ டே தளத்தில் இந்த செய்தி தொடர்பாக வெளியாகி இருக்கும் பின்னுட்டங்கள் இன்னும் கவனத்திற்கு உரியது.
-
பி.கு: கடந்த பதிவில், காவிய தளங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் இணைப்பை கொடுக்கவில்லையே என வாசக நண்பர் தாட்சாயன் கேட்டிருந்தார், அவருக்காக இந்த இணைப்பு.
இத்தகைய காவிய தளங்களில் ஒன்றான ஸ்பார்கல் (https://www.sporcle.com/ ) பற்றி விரைவில் தனியே அறிமுகம் செய்து கொள்ளலாம். அதற்குள் நீங்களும் கூட இவற்றை பயன்படுத்திப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
-