ஒரு இணையதளத்தை ஆய்வு செய்வது எப்படி?
இதுவரை அறிந்திராத ஒரு இணையதளத்தை தற்செயலாக கண்டறியும் போது, கண்டேன் சீதையை என கம்பனின் அனுமன் போல துள்ளிக்குத்திக்கவே தோன்றுகிறது. ஆனால், இப்படி கண்டறியும் இணையதளத்தை உடனே அறிமுகம் செய்துவிடுவதில்லை.
புதிதாக தெரிய வந்த இணையதளம், எளிய ரகம் எனில் உடனடியாக அதைப்பற்றி எழுதிவிடலாம். அந்த தளம், காவிய ரகம் எனில் அதற்குறிய மரியாதையுடன் அணுக வேண்டும்.
எளிய தளம் எனும் போது, ஒற்றை நோக்கம் கொண்ட தளங்கள் அல்லது குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான தளங்களாகும். இந்த தளங்கள் பற்றி ஒரு பார்வையில் அறிந்து கொண்டு விடலாம் என்பதால், இவற்றை அறிமுகம் செய்வதும் எளிதானது.
காவிய தளம் எது?
ஆனால், நிதானமாகவும், ஆழமாகவும் அலசி ஆராய்ந்து எழுதப்பட வேண்டிய தளங்கள் இருக்கின்றன. இவற்றின் நோக்கம் மற்று தளத்தின் வடிவமைப்பு, உள்ளடக்கத்தில் அவை வெளிப்படும் விதத்தை புரிந்து கொள்ள மெனக்கெட்டு அதன் பிறகே அறிமுகம் செய்ய வேண்டும்.
இந்த வகை தளத்திற்கு உதாரணம் தேவை எனில், இ.ஒ.எல் (https://eol.org/ ) தளத்தை சொல்லலாம். புவியில் உள்ள உயிரனங்களுக்கான இணைய களஞ்சியமாக விளங்கும் இந்த, ஒவ்வொரு உயிரினம் பற்றியும் விரிவாகவும், ஆழமாகவும் தகவல்களை அளிக்கிறது. இதில் உள்ள அம்சங்களை தெரிந்து கொள்ளவே கொஞ்சம் முயற்சி தேவை.
இது போன்ற காவிய தளங்களை ஒற்றை வரியில் அல்லது ஒரு சில வரிகளில் அறிமுகம் செய்வது அநீதி என்றால், இவை பற்றி ஆழமாக உள்வாங்கி கொள்ளாமல் மேலோட்டமாக எழுதுவது இன்னும் பெரிய அநீதி.
இத்தகைய காவிய தளங்களுக்கு என்று தனி பட்டியலே போடலாம்.
இணைய கருத்தறிதல்
நிற்க, சில இணையதளங்களை பார்த்ததும் எழுதிவிடலாம். ஆனால் , ஆழமாக எழுதினாலும் சரி, முதல் பார்வையில் அறிமுகம் செய்தாலும் சரி, எந்த ஒரு இணையதளத்தையும் அறிமுகம் செய்வதற்கு முன், அந்த தளம் தொடர்பான இணைய கருத்தை அறிந்து கொள்வது நல்லது.
இணைய கருத்து எனில், குறிப்பிட்ட அந்த இணையதளம் தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள மற்ற பதிவுகள் அல்லது கட்டுரைகளை படித்துப்பார்ப்பது. சிறப்பான தளம் எனில், அநேகமாக முக்கிய தொழில்நுட்ப தளங்களில் அவைப்பற்றிய அறிமுகம் அல்லது விமர்சன குறிப்புகள் வெளியாகியிருக்கும்.
இந்த குறிப்புகள் நாம் பரிசிலீக்கும் இணையதளத்தின் முக்கிய அம்சங்களையும், தொடர்புடைய மாற்று கோணங்களையும் தெரிந்து கொள்ள உதவும்.
மிக முக்கியமாக, குறிப்பிட்ட அந்த தளம் நம்பகமானதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் இது கைகொடுக்கும்.
ஆன்ரீட் எனும் அற்புதம்?
இணையதளங்களை அறிமுகம் செய்வதில் பொதுவாக நான் கடைப்பிடிக்கும் செயல்முறைகளில் இதுவும் ஒன்று. ஆன்ரீட் எனும் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கு முன் இந்த குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.
காரணம், இணைய வாசிப்புக்கு உதவும் ஆன்ரீட் இணையதளத்தை ஜம்ஸ்டிக் (https://jumpstick.app/try/jump/www.onread.com/5f944b2815e6e9fe66c36620 ) எனும் தளம் வாயிலாக கண்டறிந்ததுமே, அட அருமையாக இருக்கிறதே, அடுத்து எழுதிவிடலாம் என்று தோன்றியது.
இணையத்தில் மின்னூல் வடிவில் புத்தகங்களை பகிர்வு முறையில் வாசிக்க வழி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இந்த தளம் முதல் பார்வையிலேயே கவர்ந்திழுத்தது.
ரீடிபிரிண்ட் (http://www.readprint.com/) உள்பட இணையத்தில் புத்தக வாசிப்புக்கு உதவும் தளங்கள் பல இருந்தாலும், ஆன்ரீட் அதன் சமூக தன்மையால் தனித்து நிற்பதாக தோன்றியது.
ஆன்ரீடை, புத்தக பிரியர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளம் என்று சொல்லலாம். இந்த வகையில், குட்ரீட்ஸ், லைப்ரரிதிங் ஆகிய தளங்கள் ஏற்கனவே இருக்கின்றன. இந்த தளங்கள் போலவே ஆன்ரீடிலும் வாசகர்கள் உறுப்பினராகி தங்களுக்கான இணைய பக்கத்தை உருவாக்கி கொண்டு அதில் தாங்கள் வாசித்த மற்றும் வாசிக்க விரும்பும் புத்தகங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம், இதே போன்ற வாசிப்பு ரசனை கொண்ட வாசகர்களை கண்டறிந்து தொடர்பு கொள்வதோடு, அவர்கள் மூலம் புதிய புத்தகங்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
மின்னூல் வாசிப்பு!
ஆனால், இவற்றை எல்லாம் விட, இந்த தளத்தில் கவரும் அம்சம், உறுப்பினர்கள் தங்கள் வசம் உள்ள புத்தகங்களை பரிமாறிக்கொள்ளும் வசதி தான். அதாவது, ஒருவர் தான் வாசிக்க விரும்பும் புத்தகம் வேறு யாரிடம் இருக்கிறது என்பதை அறிந்து அவரிடம் இருந்து அந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ளலாம். புத்தகத்தை பட்டியலிடும் போதே அதை பகிர்ந்து கொள்ளத்தயாரா எனும் விவரத்தையும் தெரிவிக்க வசதி இருப்பதால், நாம் தேடும் புத்தகம் யாரிடம் இருக்கிறது என்பதை அறிந்து அதை கேட்கலாம். பதிலுக்கு நம் வசம் உள்ள புத்தகத்தையும் பகிர்ந்து கொள்ள முன்வரலாம்.
இப்படி நாம் தேடும் புத்தகம் யாரிடம் இருக்கிறது என்பதை கண்டறிவதற்கான தேடல் வசதியும் பிரதானமாக அளிக்கப்பட்டுள்ளது. பேப்பர்பேக் வடிவிலான புத்தகம் மட்டும் அல்ல, மின்னூல்களையும் இதே முறையில் தேடிப்பிடித்து வாசிக்கலாம் என்பது இந்த தளத்தின் கூடுதல் சிறப்பு. இதற்காக உறுப்பினர்கள் தங்களிடம் உள்ள, மின்னூல்களையும் பதிவேற்றலாம்.
இணையத்தில் படிக்க மின்னூல் தான் ஏற்றது என்றாலும், காப்புரிமை விடுபட்ட நூல்களை மட்டுமே இவ்வாறு படிக்க முடியும் என்றும், அந்த நூல்களையும் வாசிக்க மட்டுமே முடியும், டவுண்லோடு செய்ய முடியாது என்ற கட்டுப்பாடும் இருக்கிறது.
புத்தகம் என்றாலே, இலவச பிடிஎப் இருக்கிறதா என கேட்கும் காலத்தில் இந்த கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.
இப்படியாக, 4 லட்சம் உறுப்பினர்கள், 1.50 லட்சம் புத்தகங்கள் கொண்டிருப்பதாக அமைந்திருக்கும் இந்த தளம், அட இதுவரை இந்த தளத்தை அறியவில்லையே என வியக்க வைத்தது.
ஏன் எச்சரிக்கை!
இந்த தளத்தின் சிறப்புகளை இன்னும் அறிந்து கொள்ளலாம் எனும் நோக்கத்துடன், தொடர்புடைய இணைய கட்டுரைகள் அல்லது செய்திகள் உள்ளனவா என தேடிப்பார்த்த போது, அதைவிட வியப்பாக இருந்தது. ஏனெனில், அருமையாக தோன்றும் இந்த தளம் பற்றி, வேறு எந்த முன்னணி தொழில்நுட்ப தளமும் அறிமுகம் செய்திருக்கவில்லை. புத்தகம் சார்ந்த சிறந்த தளங்களின் பட்டியலிலும் இந்த தளம் இடம்பெற்றிருக்கவில்லை.
இரண்டு தளங்களுக்கே இவ்விதமாக நிகழும். ஒன்று இந்த தளம் புதிய தளமாக இருக்க வேண்டும். அல்லது வில்லங்கமான தளமாக இருக்க வேண்டும். ஆன்ரீட் பழைய தளமாகவே தோன்றுகிறது. ஏனெனில் 2010 ல், மும்பை மிரர் இதழில் இது பற்றி சுருக்கமான அறிமுகம் வந்துள்ளது. மற்றபடி வேறு எந்த தளமும் இதை கண்டுகொள்ளவில்லை. ஏன்?
சில நேரங்களில் மிக நல்ல தளங்கள் கூட, இணையத்தில் கண்டறியப்படாமல் , சுட்டிக்காட்டப்படாமல் இருப்பது உண்டு. அந்த வகையில் ஆன்ரீடும் இருக்கலாம். ஆனால் அவ்வாறு குறிப்பிடுவதற்கு முன், ஆன்ரீட் பாதுகாப்பான தளம் தானா என்பதை அறிந்து கொள்வது அவசியம் எனத்தோன்றியது.
முடிவாக!
ஆன்ரீட் பாதுகாப்பானதா? எனும் கேள்வியுடன் தேடிப்பார்த்த போது, பாதுகாப்பு நோக்கில் இணையதளங்களை ஆய்வு செய்யும் தளங்கள், இந்த தளத்தை பற்றி வில்லங்கமாக எதையும் குறிப்பிடவில்லை. பொதுவாக பாதுக்காப்பானதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தளத்தில் பதிவேற்றப்படும் மின்னூல்களின் கோப்பு வடிவங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஒரு சிலர் பின்னூட்டங்களில் தெரிவித்திருந்ந்தனர்.
எனவே, கொஞ்சம் எச்சரிக்கையுடன் ஆன்ரீட் தளத்தை அணுகவும் என குறிப்பிட்டு, இணைய ஆய்வு தொடர்பான இந்த குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த அம்சங்களை எல்லாம் தகவல் கல்வியறிவு ( Information literacy) என தனியே வலியுறுத்துகின்றனர்.