ரீட்பிரிண்ட் – ஆன்லைன் நூலகம்!

ஆன்லைன் நூலகமும், வாசகர் குழுவும் இணையத்தில் எப்படி இருக்கும்? ரீட்பிரிண்ட் தளம் அப்படி தான் இருக்கிறது. அடிப்படையில் இந்த தளம், இணைய நூலகம். பொதுவாக கிளாசிக் என குறிப்பிடப்படும், புத்தகங்களை இந்த தளத்தில் இலவசமாக படிக்கலாம். எல்லாமே பொதுவெளியில் இருப்பவை என்பதால் காப்புரிமை விடுபட்டவை. அந்த வகையில், கானன் டாயலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், மார்க் டுவைன் கதைகள், டால்ஸ்டாய் கதைகள் உள்ளிட்ட உலக புகழ் பெற்ற படைப்புகளை இங்கு வாசிக்கலாம்.
புனை கதைகள் தவிர, சார்லெஸ் டார்வினின் ஆரிஜின் ஆப் ஸ்பிஷிஸ், அரிஸ்டாட்டிலின் எதிக்ஸ், தோரோவின் வால்டென் உள்ளிட்ட அபுனைவு நூல்களையும் வாசிக்கலாம். இப்படி 3,500 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நூல்களை இந்த தளத்தின் மூலம் ஆன்லைனிலேயே வாசிக்கலாம்.
ஆன்லைன் வாசிப்பு எனும் போது, மின்னூல் வடிவில் இல்லாமல், சாதாரண வடிவில் வாசிக்க வேண்டியிருக்கும்.
ஆன்லைனில் வாசிப்பது தவிர, விரும்பினால் அமேசானில் அந்த புத்தகத்தை வாங்கி கொள்ளவும் இணைப்பு அளிக்கப்படுகிறது. அது மட்டும் அல்ல, படித்த புத்தகம் பற்றி வாசக விமர்சனத்தை எழுதவும் செய்யலாம். சக வாசகர்களின் கருத்து அடிப்படையிலான மதிப்பீட்டையும் தெரிந்து கொள்ளலாம். இவை வாசகர்களுடன் உரையாடும் தன்மையை அளிக்கின்றன.
தவிர, விரும்பிய புத்தகத்தை நமக்கான புத்தக அலமாரியை உருவாக்கி அதில் சேர்த்துக்கொள்ளலாம். நமக்கான புத்தக விருப்ப பட்டியலையும் உருவாக்கி கொள்ளலாம். நாம் வாசிக்கும் புத்தகங்கள் அடிப்படையில், நமக்கான புத்தகங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.
எழுத்தாளர்கள், புத்தகங்கள், கதைகள், கவிதைகள், நாடகங்கள் என பலவித தலைப்புகளின் கீழ் புத்தகங்களை அணுகலாம். புத்தகங்கள் அல்லது எழுத்தாளர்களை குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது.
புத்தகங்களை தேர்வு செய்து வாசிக்கும் போது, எழுத்தாளர்களின் வாழ்க்கை குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம். எழுத்தாளர்களின் மேற்கோள்களுக்கான தனிப்பகுதியும் இருக்கிறது.
ஆங்கில கிளாசிக்கில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சரியான விருந்து இந்த தளம். 2010 ம் ஆண்டு டைம் பத்திரிகை ஆண்டின் சிறந்த 50 தளங்களில் ஒன்றாக மகுடம் சூட்டியிருக்கிறது.
இணையதள முகவரி: http://www.readprint.com/