உலகம் நினைப்பதை அறிய ஒரு இணையதளம்!
இணைய உலகில் திரட்டிகள் எனும் வகையிலான இணையதளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பல்வேறு தளங்களில் இருந்து தகவல்கள் அல்லது செய்திகளை தொகுத்தளிக்கும் வகையில் திரட்டிகள் அமைகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை அக்ரிகேட்டர் என்கின்றனர்.
இந்த பிரிவில் புதிதாக ஒரு திரட்டி அறிமுகம் ஆகியிருக்கிறது. வேர்ல்டுவியூஸ் (https://worldviews.app/) எனும் பெயரில் செயலி வடிவில் அறிமுகம் ஆகியுள்ள இந்த சேவை, உலக அளவிலான செய்திகளை கொஞ்சம் புதுமையான முறையில் தெரிந்து கொள்ள உதவுகிறது.
அதாவது, ஒவ்வொரு நாடு தொடர்பான செய்திகளையும், அந்த நாடு தொடர்பான வலைப்பதிவுகள், வீடியோ வலைப்பதிவுகள் மற்றும் ஆடியோபதிவுகள் ( பாட்காஸ்ட்) வாயிலாக தெரிந்து கொள்ள இந்த சேவை வழி செய்கிறது.
ஆக, செய்தி தளங்கள், நாளிதழ்கள் போன்ற ஊடகங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, வலைப்பதிவுகள், வீடியோ, ஆடியோ பதிவுகள் மூலம், ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை பயன்படுத்தும் போது, விரும்பிய நாட்டை தேர்வு செய்து அந்த தேசம் தொடர்பான பதிவுகளை அணுகலாம்.
வெகுஜன ஊடகங்களுக்கு நிகராக வலைப்பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இன்று பிரபலமாகி இருக்கின்றன. பலரும், செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்வதோடு, தங்கள் எண்ணங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த பின்னணியில், உலக நாடுகளில் உள்ளவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் வலைப்பதிவுகள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் இந்த செயலி திரட்டித்தருகிறது.