பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் தளம்

பிளக்ஸிபீஸ் (https://www.flexibees.com/ ) இணையதளம், பெண்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதற்கான தளமாக இருந்தாலும், அதை வேலைவாய்ப்பு தளம் என சுருக்கிவிட முடியாது. அதே போல, அந்த தளத்தை மகளிருக்கான வேலைவாய்ப்பு தளம் என்று மட்டும் கருத முடியாது.

ஏனெனில், அந்த தளம் வேலைவாய்ப்பு சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

பணி சூழலில் பெண்களுக்கான பிரச்சனைகளும், சவால்களும் அதிகம். பல இடங்களில் பெண்களுக்கான வாயில்கள் குறுகலானது என்றால், பணியிடத்தில் தலைக்கு மேல் இருக்கும் கண்ணாடி கூரையை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும்.

இவைத்தவிர, மண வாழ்க்கைக்கு பிறகு பணி வாழ்க்கையை தொடர்வதும் பெண்களுக்கு இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. இதற்கு அவர்கள் சமரசங்களுக்கும், சங்கடங்களுக்கும் உள்ளாக வேண்டியிருக்கிறது என்பது மட்டும் அல்ல, குழந்தை பிறப்பு அல்லது குடும்ப பொறுப்பு காரணமாக பணியில் இருந்து விலகிய பின், மீண்டும் வேலைக்கு வர விரும்பினால், அதற்கான வாய்ப்பை பெறுவதில் தடைகளும், இன்னல்களும் அதிகமாக இருப்பது இன்னொரு முக்கிய பிரச்சனை.

பெண்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தான் பிளக்ஸிபீஸ் இணையதளமும் வருகிறது.

சமூகத்தின் ஏதேனும் ஒரு புள்ளிக்கு தீர்வு காண்பது தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், பணி சூழலில் இருந்து விலகிய பெண்கள், மீண்டும் தங்களுக்கு விருப்பமான வேலைவாய்ப்பை அவர்கள் திறமை, அனுபவத்தின் அடிப்படையில் பெறுவதற்கான இணைப்பு பாலமாக விளங்கும் நோக்கத்துடன் பிளக்ஸிபீஸ் நிறுவனம் அமைகிறது.

பிளக்ஸிபீஸ், பணியில் இருந்து விலகிய பெண்கள் மீண்டும் பணி வாய்ப்பை பெறுவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. அந்த வாய்ப்பு அவர்களுக்கு ஏற்றதாக இருப்பதிலும், அவர்கள் நிபந்தனைகளுக்கு ஏற்ற வகையில் இருப்பதையும் சாத்தியமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

அதாவது, பணியில் இருந்து விலகிய பெண்கள் குடும்ப மற்றும் இதர பொறுப்புகள் காரணமாக, மீண்டும் பணியாற்ற விரும்பும் போது, முழு நேர பணியை ஏற்க முடியாத நிலையில் இருக்கலாம். ( பெண்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட தடையாக கருதப்படும் காரணங்களில் இதுவும் ஒன்று).

ஆனால், இது ஏன் தடையாக அல்லது சுமையாக இருக்க வேண்டும். பெண்கள், தங்களுக்கு பிடித்தமான முறையில் வேலை செய்ய முடிந்தால் என்ன?

இந்த கேள்விக்கு பதிலாக தான், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளைந்து கொடுக்க கூடிய வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ள வழி செய்கிறது. அதாவது, பகுதி நேர வேலை அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டுகிறது.

இதன் மூலம், பெண்கள் தங்கள் திறமை,அனுபவத்திற்கு ஏற்ற வேலையை மேற்கொள்ளலாம். நேர பிரச்சனையும் இருக்காது.

அதே நேரத்தில், இந்த பெண்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் நிறுவனங்களுக்கும் இது சாதகமாகவே இருக்கும். முழு நேர ஊழியர்களை அமர்த்திக்கொள்ள முடியாத அல்லது சூழலில் இருக்கும் வளர்ச்சி வாய்ப்பை எதிர்நோக்கும் நிறுவனங்கள், தகுதி வாய்ந்த பெண்களிடம் தங்களுக்கு தேவையான பணியை ஒப்படைக்கச்செய்வதன் மூலம், பிளக்ஸிபீஸ் இதை சாத்தியமாக்க முயல்கிறது.

ஆக, குறைந்த செலவில் தகுதியான ஊழியர்களை குறிப்பிட்ட பணிக்காக தேடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை, தங்கள் நிபந்தனைக்கேற்ற மறு பணி வாய்ப்புகளை நாடும் பெண்களுடன் இணைந்து வைக்கும் மேடையாக இந்த தளம் அமைகிறது.

இந்த தளத்தில் பெண்கள் தங்கள் திறமை, அனுபவம், பணித்தேர்வுகள் ஆகியவற்றை தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம். நிறுவனங்கள் தங்கள் தேவையை தெரிவித்து பதிவு செய்யலாம். இரு தரப்பினருக்கும் இடையே பொருத்தம் பார்த்து இணைத்து வைக்கும் சேவையை இந்த தளம் மேற்கொள்கிறது.

சொந்த வாழ்க்கையில் இது போன்ற நிலையை எதிர்கொண்ட தீபா நாராயணசாமி என்பவர் தன்னைப்போன்ற பெண்களுக்கு உதவுவதற்காக சக பெண்களுடன் இணைந்து இந்த நிறுவனத்தை துவக்கியுள்ளார்.