இது ஸ்டிரீமிங் தேடியந்திரம்
இப்போது இணையத்தில் புதிய போக்காக பேசப்படுவது ஸ்டிரீமிங் சேவைகள் தான். ஹாலிவு, கோலிவுட் திரைப்படங்கள் முதல் வெப் சிரீஸ் எனப்படும் இணைய தொடர்கள் வரை ஸ்டிரீமிங்கில் பார்க்கலாம். இதற்கேற்ப நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் துவங்கி எண்ணற்ற ஸ்டிரீமிங் சேவைகள் இருக்கின்றன.
ஆகவே, ஸ்டிரீமிங் தளங்களில் வெளியாகும் உள்ளடக்கத்தை தேடுவதற்கான பிரத்யேக தேடியந்திரங்களும் உருவாகியிருக்கின்றன. இந்த வரிசையில், ஸ்ட்ரீம்-ஸ்கவுட் ( https://stream-scout.com/) தேடியந்திரம் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கிறது.
ஸ்டிரீம் -ஸ்கவுட் ஸ்டிரீமிங் துறைக்கான தனித்தேடியந்திரம் என்பது மட்டும் அல்ல, இது இசை சார்ந்த ஸ்டிரீமிங் சேவைகளுக்கான பிரத்யேக தேடியந்திரம் என்பது தான் இன்னும் விஷேசமானது.
ஆம், ஸ்டிரீமிங் முறையில் இசை கேட்க வழி செய்யும் ஸ்பாட்டிபை உள்ளிட்ட எண்ணற்ற ஸ்டிரீமிங் மேடைகளில் கேட்க கூடிய பாடல்களை தேட ஸ்டிரீம்-ஸ்கவுட் வழி செய்கிறது. அந்த வகையில் இதை இசை ஸ்டிரீமிங் தேடியந்திரம் எனலாம்.
இதன் முகப்பு பக்கத்தில், நீங்கள் கேட்க விரும்பும் பாடகர் அல்லது இசைக்கலைஞர் பெயரை குறிப்பிட்டு தேடியனால், தொடர்புடைய பாடல் எந்த ஸ்டிரீமிங் இசை மேடைகளில் பாய்ந்தோடுகிறது என்பதை இந்த தளம் பட்டியலிடுகிறது. அதன் பிறகு அந்த சேவையில் இருந்து பாடலை கேட்கலாம்.
பாடகர் என்றில்லை ஆல்பம் பெயரை குறிப்பிட்டும் தேடலாம். எளிமையான இடைமுகத்துடன் அட்டகாசமாக இருக்கிறது. தேடலை பயனர்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்தும் அமைத்துக்கொள்ளலாம்.
நீங்களும் முயன்றுப்பாருங்கள்.
-