தேடல், அறிதல், கற்றலுக்கு இணையத்தை நாடுகிறேன்: என்.சொக்கன் சிறப்பு பேட்டி
எழுத்துலகிலும், தமிழ் இணையத்திலும் நன்கறியப்பட்டவர் என்.சொக்கன். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வலைப்பதிவாளர் என பன்முகம் கொண்டவர். ’கழுத்தில் டெட்லைன் கத்தி வைத்தால் தான் எழுதக்கூடியவன்’ என்பது போல, தன்னுடைய வலைப்பதிவு அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையில் எழுத்தாளர் சுஜாதா போல, முழுநேர பணியில் இருந்தபடியே (மென்பொருளாலர்), சரளமாக எழுதிக்கொண்டிருக்கும் சுறுசுறுப்பாளர் சொக்கன். சிறுகதைகளில் துவங்கினாலும், அபுனைவு நூல்களை அதிகம் எழுதியிருக்கும் சொக்கன் பல்வேறு துறைகளில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருபவர். கற்றலிலும், கற்றுக்கொள்ளுதலிலும் உள்ள ஆர்வத்தை இவர் எழுத தேர்வு செய்யும் ஆக்கங்களிலும் பார்க்கலாம். நல்ல தமிழில் எழுதும் வழிகாட்டி நூலை எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ளார். முக்கியமாக, யூடியூப் உள்ளிட்ட அனைத்து விதமான தளங்களிலும் செயல்பட்டு வருகிறார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான விஷயங்களிலும் இவருக்கு நல்ல புரிதல் உண்டு.
இணையம் சார்ந்த பேட்டி வரிசையில், இன்று என்.சொக்கன் தான் பங்கேற்கிறார். நிரலாளர்களின் கூடாரமாக கருதப்படும் ’ஸ்டாக்ஓவர்புளோ’, மொழிபெயர்ப்பு பணிகளுக்கான ’அப்வொர்க்’, ஆங்கில இலக்கண வழிகாட்டியான ’கிராமர்லி’ உள்ளிட்ட முக்கிய தளங்களை அவர் குறிப்பிடுவதை பார்க்கலாம். நல்ல இணையதளம் தகவல்களை தேவையில்லாமல் திரட்டக்கூடாது என்று தனியுரிமை அக்கரையையும் வெளிப்படுத்துகிறார்.
என்.சொக்கன் இமெயில் அளித்த பேட்டி:
1. உங்களுக்கு முதலில் அறிமுகம் ஆன இணையத்தளம் நினைவில் இருக்கிறதா? அந்தத் தளம் தொடர்பான நினைவுகள்?
முதலில் பயன்படுத்திய இணையத்தளம் எது என்று நினைவில்லை. ஆனால் முதலில் மகிழ்ந்து பயன்படுத்திய இணையத்தளம் நன்றாக நினைவிருக்கிறது : Tfmpage.com என்கிற பெயரில் தமிழ்த் திரையிசைபற்றிய அலசல்களைப் பதிவுசெய்த தளம்தான் அது. என்னைப்போலவே இளையராஜாவின் பெரிய ரசிகர்களாக இருந்த பல நண்பர்களை அந்தத் தளம் எனக்கு அறிமுகப்படுத்தியது. நான் மிகுதியாக (தங்கிலீஷில்) எழுதத் தொடங்கியதும் அங்குதான்.
2. உங்களை மிகவும் கவர்ந்த இணையத் தளங்கள்?
Google.com அறிமுகப்படுத்துகிற அனைத்துச் சேவைகளும் எனக்குப் பிடிக்கும். அவர்களுடைய GMailதான் நான் மிகவும் கூடுதலாகப் பயன்படுத்திய இணையத்தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு Twitter.com- ஐ மிகவும் ரசிக்கிறேன், என் எழுத்தைக் கூர்மைப்படுத்தியது இந்தத் தளம்தான். மின்னூல்களுக்காக Amazon.in- ஐ மிகவும் விரும்பிப் பயன்படுத்துகிறேன். Ta.wikipedia.org-ன் கலைச்சொல் மொழிபெயர்ப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பழந்தமிழ் நூல்களைப் படிக்கும்போதெல்லாம் அடிக்கடி agarathi.com- ஐப் பயன்படுத்துவேன்.
3. நீங்கள் அதிகம் பயன்படுத்தும் இணையத் தளம்?
இதில் ஐயமும் இல்லை, போட்டியும் இல்லை, Google.comதான்.
4. தொழில் நிமித்தமாக, நீங்கள் சிறந்தது எனக் கருதும் இணையத் தளங்கள்?
அலுவல் பணி சார்ந்து எனக்கு மிகவும் பிடித்த தளம், stackoverflow.com. நிரலாளர் எல்லாரும் இதைத்தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
எழுத்துப் பணிகளுக்கு, Gmail (மின்னஞ்சல் தொடர்புகளுக்கு), Upwork (மொழிபெயர்ப்புப் பணிகளை நாடிப் பெறுவதற்கு), translate.google.com (அவசர அகரமுதலியாக), books.google.com (விரைவான ஆய்வுக்கு), grammarly.com (ஆங்கிலப் பிழை திருத்தலுக்கு), kdp.amazon.com (மின்னூல் பதிப்புக்கு) ஆகியவற்றை மிகுதியாகப் பயன்படுத்துகிறேன்.
5. பயனுள்ள ஓர் இணையத் தளத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் எவை?
தெளிவான நோக்கத்துடன் இருக்கவேண்டும், இயன்றால் ஓரிரு நோக்கங்களுக்குள் அமையவேண்டும், அவற்றைப் பயனாளர் தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ளக்கூடிய வசதிகளைத் தரவேண்டும், அவர்களுடைய தகவல்களைத் தேவையின்றித் திரட்டக்கூடாது, ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது, மிக முக்கியமாக, எவரும் எளிதில் புரிந்துகொண்டு பயன்படுத்தும்வகையில் அத்தளத்தின் வடிவமைப்பு இருக்கவேண்டும்.
6. மற்றவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் இணையத் தளங்கள்?
அவரவர் தேவையைப் பொறுத்து மாறுபடுகிற விஷயம் இது. எனினும், தேடலுக்கு Google, மின்னஞ்சலுக்கு Gmail, அரட்டைக்கு WhatsApp Web, மின்னூல்களுக்கு Amazon ஆகியவை என் பொதுவான பரிந்துரைகள்.
7. எழுத்தாளர்களுக்கு சொந்த இணையத் தளம் எந்த அளவு அவசியமானது?
அவசியம் என்று புரிகிறது. ஆனால், எனக்குச் சொந்த இணையத் தளம் இல்லை. ஆகவே, இதுபற்றிக் கூடுதல் கருத்துகளைச் சொல்லும் தகுதியை இழக்கிறேன்.
8. தமிழில் உங்களைக் கவர்ந்த இணையத் தளம்?
* tamilvu.org
* thevaaram.org
* dravidaveda.org
* tamildigitallibrary.in
9. நீங்கள் இணையத் தளங்களை, எதற்காக, எப்போதெல்லாம் பயன்படுத்துகிறீர்கள்?
பெரும்பாலும் தேடல்கள், விஷயம் அறிதல், கற்றுக்கொள்ளல் போன்றவற்றுக்காகப் பயன்படுத்துகிறேன். அதன்பிறகு, வழக்கமான இணைய வங்கிச்சேவை, பொருள் வாங்குதல், கட்டணம் செலுத்துதல் போன்ற நோக்கங்கள், நண்பர்களுடன் தொடர்பில் இருத்தல், உலகின் போக்கை அறிந்துகொள்ளுதல்.
எப்போது என்றால், கிட்டத்தட்ட நாள்முழுவதுமே வெவ்வேறு இணையத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன்.
10. உங்களின் முன்னணி பத்து இணையத் தளங்கள் எவை?
1. Google
2. Gmail
3. Twitter
4. Facebook
5. Amazon
6. Google Translate
7. Upwork
8. WhatsApp Web
9. YouTube
10. Archive.org
-
( பி.கு: டிஎப்.எப்.ஜி தளம் தற்போது செயல்பாட்டில் இல்லை)
அப்டேட்: எழுத்தாளர் என்.சொக்கன், தற்போது தனக்கான சொந்த இணையதளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். எழுத்தாளராக அவரைப்பற்றிய அறிமுகம், அவர் எழுதிய நூல்கள் தொடர்பான அறிமுகம் என அமைந்திருக்கிறது என்.சொக்கன்.காம் - http://nchokkan.com/