
Discover more from இணைய மலர்
புத்தக வாசிப்பிற்கான புதுமையான தேடியந்திரம்
புத்தகங்கள் தொடர்பான தகவல்களை தேடுவது என்றால், கூகுளை நாடுவதை விட நேரடியாக, புத்தக பிரியர்களுக்கான வலைப்பின்னல் தளமான குட்ரீட்ஸ் அல்லது ’அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம்’ என பரிந்துரைக்கும் புத்தகங்கள் சார்ந்த பிரத்யேக தளங்களில் தேடிப்பார்ப்பதே சரியாக இருக்கும். இந்த வரிசையில், ’ஹவ்லாங்டூரீட்’ (https://howlongtoread.com/) தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த தளத்தை புத்தக வாசிப்பிற்கான புதுமையான இணையதளம் என சொல்லலாம். அடிப்படையில், ஒரு புத்தகத்தின் வாசிப்பு நேரத்தை கணக்கிட்டு அறிய உதவும் சேவையாக இருந்தாலும், அதன் நீட்சியாக புத்தகங்களுக்கான அருமையான தேடியந்திரமாகவும் விளங்குகிறது.
வாசகர்கள் தாங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தின் தலைப்பை இந்த தளத்தில் சமர்பித்தால், அந்த புத்தகத்தின் பக்கங்கள், வாசிப்பு வேகம் ஆகியவற்றின் அடிப்படையில், அதை படித்து முடிக்க ஆகக்கூடிய நேரத்தை இந்த தளம் முன்வைக்கிறது.
உதாரணத்திற்கு ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய ’போரும் சமாதானம்’ (War and Peace ) நாவலை ஒரு நாள் மற்றும் ஆறு மணி நேரத்தில் படிக்கலாம் என்று தெரிவிக்கிறது. இது ஒரு உத்தேச கணக்கு தான் என்றாலும், இந்த தகவலோடு புத்தகத்தை அமேசான் தளத்தில் வாங்குவதற்கான இணைப்பு மற்றும் ஆடிபிள் தளத்தில் ஒலி வடிவில் கேட்பதற்கான இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அப்படியே, இந்த புத்தகத்திற்கான வாசிப்பு வேகத்தையும் சோதித்துப்பார்க்கும் வசதி இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் மெனக்கெடத்தயார் என்றால், இந்த தளத்தில் உறுப்பினராக உங்களுக்கான புத்தக அலமாரியை உண்டாக்கி கொண்டு, போரும் சமாதானமும் நாவலை அதில் சேர்த்துக்கொள்ளலாம். நாவல் பற்றி மேற்கொண்டு அறிய விரும்பினால், அதற்கான எளிய அறிமுகத்தையும் வாசிக்கலாம் ( குட்ரீட்ஸ் குறிப்பு).
இன்னும் கீழே வந்தால், தொடர்புடைய புத்தகங்களின் பரிந்துரையை பார்க்கலாம். ஒவ்வொரு புத்தகத்தை கிளிக் செய்தாலும், அதற்கான வாசிப்பு நேரம் உள்ளிட்ட தகவல்களோடு, தொடர்புடைய புத்தகங்களின் பட்டியலை பார்க்கலாம். இப்படியே புத்தக தேடலை சுவாரஸ்மாக தொடரலாம். அல்லது நேரடியாக, தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் விரும்பிய புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அதற்கான வாசிப்பு நேரத்தை தேடலாம். அப்படியே தொடர்புடைய புத்தகங்களை பார்க்கலாம்.
கைவசம் உள்ள நேரத்தின் அடிப்படையில் படிப்பதற்கான புத்தகத்தை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.
புத்தக பிரியர்களுக்கான சுவாரஸ்யமான தேடியந்திரம் இந்த தளம்.