இது மினிமலிச இணையதளம்

தனிநபர் இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக, ரோம் பிரிலவுட்டின் சொந்த தளமான ’பிரில்லவுட்.காம்’ தளத்தை குறிப்பிடலாம்.-

சிறந்த தனிநபர் இணையதளம் எனும் வர்ணனையை படித்ததும், பிரில்லவுட்டின் இணையதளம் வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும் அடர்த்தியாகவும், அசத்தலாகவும் இருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். இந்த தளம், மொத்தமே இரண்டு வார்த்தைகள் மற்றும் நான்கு இணைப்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

சொற்பமான வார்த்தைகளையே உள்ளடக்கமாக கொண்டிருந்தாலும், இந்த தளம் அதன் நோக்கத்தை கச்சிதமாக நிறைவேற்றி விடுகிறது. அதாவது, அதன் உரிமையாளரான ரோம் பிரில்லவுட் யார் என்பதை நமக்கு உணர்த்தி விடுகிறது,

தனிநபர் இணையதளத்தின் நோக்கம், அதன் பின்னே உள்ள மனிதரை அறிமுகம் செய்வது தான் என்றால், இந்த தளம் அதை சிறப்பாகவே செய்கிறது.

இந்த தளத்தில், கொஞ்சம் பெரிய எழுத்துக்களில் ரோம் பிரில்லவுட் எனும் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆக, அவர் தான் தளத்தின் உரிமையாளர் என அனுமானிக்கலாம். யார் இந்த பிரில்லவுட் எனும் கேள்விக்கு பதிலாக, சுருக்கமான அறிமுகத்தை விடுங்கள், ஒரு வரி குறிப்பு கூட இல்லாவிட்டாலும், டிவிட்டர், கித்ஹப், ஸ்டாக் ஓவர்புளோ ஆகிய இணைப்புகள் உள்ளன. பிரில்லவுட்டின் இமெயில் முகவரிக்கான இணைப்பும் உள்ளது. தளத்தின் உள்ளடக்கம் அவ்வளவு தான்.

இந்த இணைப்புகளை கிளிக் செய்தால், பிரில்லவுட்டின் டிவிட்டர் பக்கத்தை அணுகலாம். அவரது டிவிட்டர் பக்கத்திலும் அறிமுக வாசகம் என எதுவும் இல்லாவிட்டாலும், அதில் உள்ள குறும்பதிவுகளை படித்தால், பிரில்லவுட் இணையதள உருவாக்கம், மென்பொருள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கித்ஹப், ஸ்டாக் ஓவர்புளோ ஆகிய தளங்கள் மென்பொருளாலர்களின் கூடாரம் என்பதால், அவற்றில் உள்ள பிரில்லவுட் பக்கம் மூலம் அவரது நிரல்கள் மற்றும் இணைய உருவாக்கம் தொடர்பாக அறிந்து கொள்ளலாம். மேற்கொண்டு விவரம் தேவை எனில் அவருக்கு இமெயில் அனுப்பலாம்.

ஆக, தன்னைப்பற்றி ஒரு வரி கூட சொல்லாமல், தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரில்லவுட்டின் இந்த தனிநபர் இணையதளத்தை மினிமலிச கவிதை என்று வர்ணிக்கலாம் அல்லவா!

நிற்க, பிரில்லவுட் இன்னொரு அருமையான மினிமலிச இணையதளத்தை நடத்தி வருகிறார். கிளாக்டேப் ( https://www.clocktab.com/) எனும் அந்த தளம், இணைய கடிகாரமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தில் நுழைந்ததும், அப்போதைய நேரத்தை தெரிந்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் நேரம் மாறியிருந்தால், அதை சரி பார்க்க இதுவே எளிய வழி.

இப்போதைய நேரம் காட்டுவதோடு , நாட்காட்டியாக, தேதி மற்றும் கிழைமையையும் காட்டுகிறது. அவ்வளவு தான் முகப்பு பக்கத்தின் உள்ளடக்கம் என்றாலும், கொஞ்சம் உற்று கவனித்தால், இந்த இணைய கடிகாரத்தின் பின்னணியை நம் விருப்பம் போல மாற்றி அமைத்துக்கொண்டு அதை நண்பர்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதற்கான வசதியும் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். கடிகாரத்தை பெரிதாக்குவது உள்ளிட்ட வேறு சில துணை அம்சங்களும் இருக்கின்றன.

இது தவிர, குறிப்பிட்ட செயலை செய்து முடிப்பதற்கு நேர கெடுவை ஏற்படுத்திக்கொள்வதற்கான டைமர் (https://www.timer-tab.com/ ) இணையதளம் ஒன்றையும் இவர் உருவாக்கியிருக்கிறார். அலாரம் வசதியும் இதில் உள்ளது.

பயனர்களோடு தொடர்பு கொள்வதற்கான வலையின் தொழில்நுட்பங்களால் ஈர்க்கப்பட்டு இந்த இணைய கடிகாரத்தை அமைத்திருப்பதாக பிரில்லவுட் கூறுகிறார். இந்த தளத்திற்கான அறிமுக பக்கத்தில் இடம்பெறும் பிரில்லவுட் தளத்திற்கான இணைப்பு மூலம் தான் அவரது மினிமலிச சொந்த தளத்தை அறிய முடிந்தது.