அரிதான இசை வீடியோக்களை அறிய உதவும் தளம்
செல்வந்தர்களின் உலகம் போல, யூடியூப் வீடியோ என்று வரும் போது, லட்சக்கணக்கிலு, கோடிக்கணக்கிலும் பார்வைகளை பெறும் வீடியோக்கள் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறோம். நல்லதொரு வீடியோவை உருவாக்குவதைவிட, ஒரு வீடியோவை வைரலாக்குவது எப்படி என்று தான் பலரும் யோசிக்கின்றனர்.
வைரலாகும் வீடியோக்களே கவனத்தை பெறும் நிலை இருப்பதால், அதிக பார்வைகளை பெறும் வீடியோக்களே வெற்றி பெற்றவையாக கருதப்படுகின்றன.
இந்த போக்கிற்கு எதிர்போக்கான இணையதளங்களில் ஒன்றாக அமைகிறது ’ஹியர் பிபேர் எ மில்லியன்’ ( https://herebeforeamillion.com/) இணையதளம்.
யூடியூப்பில் பதிவேற்றப்படும் இசை வீடியோக்களை கண்டறிவதற்கான இந்த தளம், ஹிட்டான வீடியோ, வைரலான வீடியோ என்றெல்லாம் வழக்கமான பாணியில் செயல்படாமல், அதிகம் பார்க்கப்படாத இசை வீடியோக்களை தேடி பட்டியலிடுகிறது.
இதன் முகப்பு பக்கத்தில், எப்போதும் ஒரு இசை வீடியோ முன்னிறுத்தப்படுவதை பார்க்கலாம். இந்த வரிசையில் அடுத்தடுத்து வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கலாம். எல்லாமே, மில்லியனுக்கும் குறைவான பார்வைகளை கொண்ட வீடியோக்கள்.
அதாவது, யூடியூப்பில் பதிவேற்றப்படும் இசை வீடியோக்களில், இன்னமும் மில்லியன் பார்வைகளை பெறாத வீடியோக்களை கவனமாக தேர்வு செய்து இந்த தளம் பரிந்துரைக்கிறது. தளத்தின் பெயரும் இதை தான் உணர்த்துகிறது.
ஆக, அதிகம் அறியப்படாத இசை வீடியோக்களை இந்த தளத்தில் பாரத்து ரசிக்கலாம். அவை அரிதானதாகவும் இருக்கலாம்.
இந்த வீடியோக்களில் சில கவனம் பெற்று மில்லியன் பார்வைக்கு மேல் பெற்றுவிட்டால், உடனே இந்த தளத்தில் இருந்து நீக்கப்பட்டு விடும். ஆக, எப்போதும் இதில் அதிகம் அறியப்படாத அல்லது கண்டறியப்பட காத்திருக்கும் இசை வீடியோக்களை மட்டுமே பார்க்கலாம்.
இசை வீடியோக்கள், அல்கோரிதம் மூலமாக அல்லாமல், கவனமாக கையால் தேர்வு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளனது. பயனாளிகளும் தாங்கள் பார்த்து ரசித்த அறியப்படாத வீடியோவை சமர்பிக்கலாம்.
*
இதே போலவே அறியப்படாத யூடியூப் வீடியோக்களை அடையாளம் காட்டும் இணையதளம் பற்றி ஏற்கனவே இந்த மடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
*
பூஜ்ஜியம் பார்வைகளை கொண்ட யூடியூப் வீடியோக்களை அடையாளம் காட்டுவதற்கு என்றே இதே பெயரில் ஒரு தளம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது பயன்பாட்டில் இல்லை.
*
யூடியூப் வீடியோக்களை கண்டறிவது தொடர்பான பதிவு.