ஒரே கேள்வி இணையதளங்கள்
நண்பர்களுக்கு வணக்கம்.
இணையதளங்களை அறிமுகம் செய்யும் இந்த மின்மடல் சேவையில் இணைந்தமைக்கு நன்றி. இயன்றவரை தினமும், மின்மடல் அனுப்ப வேண்டும் என்பது திட்டம். ஒவ்வொரு மடலிலும், ஏதேனும் ஒரு வகையில் கவர்ந்திழுக்க கூடிய இணையதளங்களை சுட்டிக்காட்ட வேண்டும் என்பது நோக்கம்.
தினமும், மின்மடல் பெறுவது வாசிப்பு சுமையாக அமையுமா? என்று தெரியவில்லை. உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
அதே போல, இதில் உள்ள இணையதளங்கள் தொடர்பான உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளவும். இதில் இடம்பெற வேண்டும் என நீங்கள் கருதும் இணையதளங்களையும் பரிந்துரைக்கலாம்.
இந்த சேவை பயனுள்ளது என கருதினால், உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களையும் இமெயில் முகவரி சமர்பித்து இதில் இணைந்து கொள்ளுமாறு பரிந்துரைத்தால் இன்னும் மகிழ்வேன்.
-
பொதுவாக இணையதளங்கள் பற்றி விரிவாக அறிமுகம் செய்வதே எனக்கு பிடித்தமானது. ஒரு மாறுதலுக்காக இன்றைய தளங்களின் அறிமுகம் மிகச்சுருக்கமாக அமைகின்றன:
ஒரே கேள்வி ஒரே பதில் இணையதளங்கள் என இவற்றை வர்ணிக்கலாம்:-
வெளியே இருட்டாக இருக்கிறதா? இந்த கேள்வி தான் தளத்தின் முகவரி - https://www.isitdarkoutside.com/
இந்த கேள்விக்கான பதில் தான், இந்த தளத்தின் உள்ளடக்கம். தளத்தை அணுகும் நேரத்திற்கு ஏற்ப வெளியே இருட்டாக இருக்கிறதா எனும் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறது இந்த தளம்.
இதே போலவே, இது கிறிஸ்துமஸா? எனும் கேள்வியுடன் ஒரு இணையதளம் அமைந்துள்ளது. - https://isitchristmas.com/
இந்த கேள்விக்கான பதிலை தளத்தின் முகப்பு பக்கத்தில் பார்க்கலாம். கிறிஸ்துமஸ் தவிர மற்ற நாட்களில் இல்லை என பதில் அமைகிறது. நம்மூரில் இருந்து பார்த்தால் இந்தியில் பதில் வருகிறது. தமிழிலும் அமைக்கப்பட்டால் என்ன!
சுவாரஸ்யமான தளங்களாக இருக்கின்றன அல்லவா?
இந்த வகை தளங்களில் எனது அபிமான தளம் இது:
இப்போது விண்வெளியில் எத்தனை பேர் இருக்கின்றனர்? இந்த கேள்வி தான் இணையதளம் : https://www.howmanypeopleareinspacerightnow.com/
இதற்கு பதிலாக, தற்போது விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்களின் எண்ணிக்கையை பதிலாக அளிக்கிறது.
அந்த எண்ணிக்கைக்கு கீழே, அவர்களின் பெயர் மற்றும் விண்வெளியில் இருக்கும் நாட்களின் விவரமும் இடம் பெறுகிறது.
இணையதளம் என்றால், தகவல் கூடையாக மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன? இப்படி சும்மா நச்சென்றும் இருக்கலாம்!