ஜூமுக்கு மாற்றாக ஒரு இந்திய சேவை
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் செயலிக்கான மாற்று வீடியோ சந்திப்பு சேவைகளை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஆப்பிளின் பேஸ்டைம், கூகுள் மீட், புளு ஜீன்ஸ், ஸ்கைப், ஜிட்ஸி என பல்வேறு சேவைகள் இருக்கின்றன.
இந்த பட்டியலில் இப்போது இந்திய சேவை ஒன்றும் சேர்ந்திருக்கிறது. சே நமஸ்தே எனும் பெயரில் இந்த சேவை அண்மையில் அறிமுகம் ஆகியுள்ளது.
அனுஜ் மற்றும் அனந்த் கார்க் எனும் இரட்டையர்கள் நடத்தி வந்த இன்ஸ்கிரிப்ட்ஸ் நிறுவனம் சார்பில், இந்த வீடியோ சந்திப்பு சேவை அறிமுகம் ஆகியுள்ளது.
சே நமஸ்தே சேவையை பயன்படுத்துவதும் எளிதானது தான். இந்த தளத்தில் நுழைந்தால் முகப்பு பக்கத்தில், வணக்கம் சொல்லி வரவேற்கிறது. அதன் கீழ், உள்ள கட்டத்தை கிளிக் செய்தால், புதிய சந்திப்பை உருவாக்கி கொள்ளலாம்.
புதிய சந்திப்பை உருவாக்கும் வசதியை கிளிக் செய்ததும், வீடியோ சந்திப்பிற்கான முகவர் மற்றும் ரகசிய குறியீடு வழங்கப்படுகிறது. வீடியோவில் சந்திக்க விரும்புகிறவர்களோடு, இந்த தகவலை பகிர்ந்து கொண்டால், வீடியோவில் உரையாடலாம்.
மாறாக, வீடியோ சந்திப்பிற்கான அழைப்பை பெற்றவர்கள், முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில், புதிய சந்திப்புக்கு பதிலாக, சந்திப்பில் இணைய வசதியை கிளிக் செய்து வீடியோ அறையில் நுழையலாம்.
வீடியோ சந்திப்புகளின் போது அரட்டை அடிப்பது, கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வசதிகளும் இருக்கின்றன.
ஜூம் சேவையில் காணக்கூடிய ஈர்ப்பு இதில் இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால், ஜூமில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் இதில் இல்லை என்கின்றனர் சே நமஸ்தே நிறுவனர்கள்.
லாக்டவுனுக்கு பிறகு, எல்லோரும் ஜூம் சேவையை பயன்படுத்த துவங்கியதும், இதன் நடுவே ஜூம் சேவையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் பற்றிய சர்ச்சை எழுந்ததும், ஏன் ஒரு இந்திய வீடியோ சேவை கூட இல்லை எனும் கேள்வி மனதில் எழுந்ததால், சே நமஸ்தேவை உருவாக்கியதாக நிறுவனர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர்.
சே நமஸ்தே சேவையை இணையதள வடிவில் தான் அணுக வேண்டும். இப்போதைக்கு மொபைல் செயலி வசதி இல்லை. ஆண்ட்ராய்டு போன்களில் குரோம் பிரவுசரில் அணுகலாம்.
இணையதள முகவரி: https://www.saynamaste.in/
--
ஏர்மீட்
இதே போலவே ஏர்மீட் எனும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமும், இதே பெயரில் வீடியோ சந்திப்புக்கான சேவையை வழங்கி வருகிறது. ஆனால், இது வெறும் வீடியோ சந்திப்புகளுக்கான சேவை மட்டும் அல்ல: வீடியோ வழியே நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் ஆகியவற்றை நடத்துவதற்கான முழுவீச்சிலான வீடியோ சேவை.
இணையம் மூலம் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை வீடியோ வழி நடத்துவதற்காக என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சேவையாக இது அமைகிறது. நிறுவன கூட்டங்கள் முதல் பயிலறங்குகள் வரை பலவித இணைய நிகழ்ச்சிகளுக்கு ஏர்மீட் ஏற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதையும் டவுண்லோடு செய்யாமல் பயன்படுத்தலாம் என்பதும், பங்கேற்பாளர்கள் எளிதில் வீடியோ அறைக்குள் வருகை தரலாம் என்பதும் இதன் சிறப்பம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கட்டண சேவை. பெரும்பாலும் வரத்தக வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி: https://www.airmeet.com/
-
ஜோஹோ சந்திப்பு
சாஸ் (SaaS ) என சொல்லப்படும் மென்பொருளை ஒரு சேவையாக வழங்கி வரும் நிறுவனங்களில் ஜாம்பவனாக விளங்கும் ஜோஹோ நிறுவனமும், வீடியோ சந்திப்பு வசதியை ஜோஹோ மீட்டிங் எனும் பெயரில் வழங்கி வருகிறது. ஜூமுடன் ஒப்பிடுகையில் இந்த சேவை எந்த அளவு சிறப்பானது என்பதை ஜோஹோ தனது இணையதளத்தில் விளக்கியிருக்கிறது.
எந்த மென்பொருளையும் டவுண்லோடு செய்யாமல் பிரவுசரில் பயன்படுத்தலாம், மூன்றாம் தரப்பு செயலிகளை எதற்காகவும் சார்ந்திருக்கவில்லை என்பது உள்ளிட்ட சிறப்பசங்களை ஜோஹோ பட்டியலிடுகிறது. பயனாளிகளின் தனியுரிமையும் பாதுக்காக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஜூமில் உள்ளது போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டங்களுக்கு பூட்டு போடலாம், மற்ற ஜோஹோ செயலிகளுடன் ஒருங்கிணைக்கலாம் என்றும் தெரிவிக்கிறது.
இதுவும் கட்டண சேவை தான். ஆனால் தரமானது என உணர முடிகிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.zoho.com/meeting/zoom-alternative.html
-
இவைத்தவிர வேர்பை எனும் நிறுவனமும், வர்த்தக நோக்கிலான வீடியோ சந்திப்பு சேவையை வழங்கி வருகிறது: https://whereby.com/
-
மேலே பார்த்த சேவைகளில், ஜிட்சி (https://meet.jit.si/ ) மற்றும் ஸ்பெஷலானது. ஏன் என நாளை பார்க்கலாம்.
--